news-details
ஆன்மிகம்
மும்மலங்கள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 15)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

கிறிஸ்டினா: தந்தையே, அறிவைக் கொடுத்தும் நம் கண்களைத் திறந்தும் நம் வாழ்வைச் செழிக்கச் செய்யும்நன்மை-தீமை அறியும் மரமாகியநம் மனம் பல்வேறுபட்ட சிக்கல்களையும் நம் வாழ்விற்குள் கொண்டு வருகிறது என்று கூறினீர்கள். முக்கியமாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை அது உருவாக்குவதாகச் கூறினீர்கள்இது குறித்துக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?”

அருள்பணி:ஆணவம் என்பதுநான் பெரியவன்என்கின்ற மனநிலையோடு நடந்து கொள்வது. பிறரோடு நம்மை ஒப்பிட்டு, ஏதோ ஒரு வகையில் நாம் மற்றவர்களைவிட உயர்வாக இருப்பதாகத் தெரியவந்தால், நம்மில் அழையா விருந்தாளியாக ஆணவம் குடியேறி விடுகிறது. ‘எனக்கு எல்லாம் தெரியும்என்றும், ‘பிறருக்கு ஒன்றும் தெரியாதுஎன்றும் தீர்ப்பிட ஆரம்பிக்கின்றோம். வாழ்வில் பிறரைவிட நாம் உயர்வாக இருப்பதாக எண்ணி ஆணவம் கொள்ளும் நாம், அதோடு திருப்தியடைந்து விடுவதில்லை; எல்லா நேரமும் மற்றவர்களைவிட உயர்வாக இருக்க வேண்டும் என்ற வேட்கையோடும் செயல்பட ஆரம்பிக்கின்றோம். மற்றவர்களைக் கீழே தள்ளி, நம்மை மேலே நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றோம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மற்றவர்களைவிட நாம் ஒரு படி மேலே என்று நிரூபிக்க முயல்கின்றோம். குடும்பங்களிலும் சமூகங்களிலும் நடக்கும் பல்வேறு சண்டைகளுக்கான காரணம் ஆணவமும் அகந்தையுமே என்பதை மறந்துவிடக் கூடாது.”

மார்த்தா:தந்தையே, எனக்கு நகைச்சுவை ஒன்று நினைவிற்கு வருகிறது. பொங்கல் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கணவன் அதில் காண்பித்த ஆர்வத்தைக் கண்ட மனைவி கிண்டலோடுஜல்லிக்கட்டை இவ்வளவு ஆர்வமாக டி.வி.யில பார்க்கிறீங்களே! நேரா போய் மாட்டை அடக்க வேண்டியதுதானே!’ என்று கூற, கணவன் கொஞ்சமும் சளைக்காமல், ‘நீ வேற! கட்டுன மாட்டையே அடக்க முடியல! இதுல போய் கட்டாத மாட்ட எப்படி அடக்குவது?’ என்று பதில் தந்தாராம். பல குடும்பங்களில்கட்டியநபர்களை அடக்க முயற்சிப்பதிலே பலரது வாழ்வின் நேரமும் ஆற்றலும் வீணாகிவிடுகிறது.”

அன்புச் செல்வன்: தந்தையே, கவிஞர் கண்ணதாசன் ஒருமுறைசிலருக்கு இந்த உலக உருண்டை அவர்களது தலையைவிடச் சிறியதாகத் தெரிகிறதுஎன்று கூறினார். மேலும், தமிழ் இலக்கியத்தில்புல்லறிவுஎன்ற ஒன்று உண்டு. அதாவது, கொஞ்சம் தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்ததுபோல பேசுவதே புல்லறிவு என்பது. இவை அனைத்தும் மனித மனத்தில் தோன்றும் ஆணவத்தையும் அகந்தையையும் சுட்டிக்காட்டுகின்றன.”

கிறிஸ்டினா:அடுத்து மனத்திலிருந்து கன்மம் என்ற கனி எவ்வாறு விளைகிறது என்பதைக் கூறுங்கள், தந்தையே!”

அருள்பணி:கன்மம் என்றால்வெறுப்புஎன்று பொருள். நம் மனம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை ஒப்பிட்டு, தரம் பிரித்து, மதிப்பீடு செய்வதாக நாம் பார்த்தோம். எதன் அடிப்படையில் நம் மனம் அனைத்தையும் தரம் பிரிக்கிறது என்றால், நம் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான்! நம் மனம் ஒவ்வொரு வினாடியும் ஏராளமான விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. நம் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றாற்போல் நடப்பவர்களைநல்லவர்கள்என்று முத்திரை குத்தி அவர்களை ஏற்றுக்கொள்கின்றது; அவ்வாறு நடக்காதவர்களைகெட்டவர்கள்என்று முத்திரை குத்தி வெறுக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நம் ஆசைகளின்படியும் விருப்பங்களின்படியும் நிகழ்வுகள் நடைபெறாதபோது, மனித மனத்தில் ஏராளமான வெறுப்பும் கோபமும் குடியேற ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக மனிதர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் போவதோடு, சரியான உறவுகளையும் முன்னெடுக்க முடியாமல் போய் விடுகிறது.”

அகஸ்டின்:ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘நீ என்னை அன்பு செய்தாலும் சரி, வெறுத்தாலும் சரி, இரண்டுமே எனக்குச் சாதகமானவைதான். நீ என்னை அன்பு செய்தால் நான் உன் இதயத்தில் இருப்பேன்; நீ என்னை வெறுத்தால் நான் உன் மனத்தில் இருப்பேன் (Love me or hate me, both are in my favour. If you love me, I will be in your heart. If you hate me, I will be in your mind) என்று அவர் கூறுகின்றார். நாம் வெறுப்பவர்களையும் நம்மை வெறுப்பவர்களையும் நாம் எவ்வாறு நம் தலையில் தூக்கி வைத்து கோபத்தாலும் வெறுப்பாலும் பழிவாங்கும் உணர்வாலும் நம்மை நிரப்பிக் கொள்கின்றோம் என்பதை ஷேக்ஸ்பியர் கவிதை நயத்தோடு எடுத்துரைக்கிறார்.”

அன்புச் செல்வன்:வள்ளுவர்கூட வெறுப்பும் சினமும் எவ்வாறு நம்மையே அழிக்கவல்லது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்:   

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும் (குறள் 306)

இதன் பொருள்கோபமாகிய கொடிய நெருப்பு அதைக் கொண்டவரை அழிப்பதோடு, அவர் வீடு பேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்என்பதாகும்.”

அகஸ்டின்: மாயை என்றால்?”

அருள்பணி: இல்லாததை இருப்பதாகப் பார்ப்பதே மாயை என்பது. கானல் நீர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பாலைவனத்தில் ஓர் இடத்தில் தண்ணீர் இல்லை என்றாலும், அங்குத் தண்ணீர் இருப்பது போன்று தெரியும். மற்றோர் உதாரணம்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் நேராக உள்ள ஒரு குச்சியைப் போட்டோம் என்றால், தண்ணீர்க்குள் இருக்கும் குச்சியின் பகுதி வளைந்து இருப்பது போன்று தெரியும். இவை மாயைக்கான ஒருசில உதாரணங்கள்! இத்தகைய மாயையானது மனிதப் பார்வையில் உள்ள கோளாறைச் சுட்டிக்காட்டுகின்றது. ஏறத்தாழ இதையொத்தக் காரியத்தை மனமும் செய்கிறது. பணம், பொருள், வசதி ஆகியவை மனிதர்களுக்கு உண்மையான மகிழ்வைக் கொடுக்க இயலாது. எனினும், இவற்றில் மகிழ்வு இருக்கிறது என்று மனிதர்களை நம்ப வைத்து, அவர்களை இரவு-பகலாக ஓடவைப்பது மனம்தான். பொருளாதாரம், புகழ், மனித அங்கீகாரம் போன்றவை நிலையற்றவை. அவற்றால் நிலையான மகிழ்ச்சியைத் தர இயலாது. எனினும், பல மனிதர்கள் இரவு-பகலாக இவற்றையே தேடி ஓடுகின்றனர். காரணம் இவற்றில்தான் மகிழ்வு உண்டு என்று மனம் இவர்களை நினைக்க வைக்கிறது. மனம் உண்டாக்கும் மாயையின் பின்னால் மனிதர்கள் போவதன் காரணமாக உண்மையான மகிழ்வின் ஊற்றாகிய உறவை உதாசீனப்படுத்திவிடுகின்றனர். உறவைக் கட்டி எழுப்புவதற்கான நேரத்தையும் வாய்ப்புகளையும் இவர்கள் உருவாக்குவதில்லை.”

அன்புச் செல்வன்:தந்தையே, மனம் என்னும்நன்மை-தீமை அறிகின்ற மரம்ஆணவம், வெறுப்பு, மாயை என்ற தீமைகளை உருவாக்கி, எவ்வாறு உறவு வாழ்விற்கு உலை வைக்கிறது என்பதை அற்புதமாக விளக்கினீர்கள். இதைத் திருவிவிலியத்திலும் என்னால் பார்க்க முடிகிறது. நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதற்கு முன்னால் ஆதாமும், ஏவாளும் கடவுளோடு நல்ல உறவு கொண்டிருந்தனர். தங்களுக்கு இடையேயும் ஆழமான உறவு கொண்டிருந்தனர். எனவேதான் ஆதாம் ஏவாளைக் குறித்துஇதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் (தொநூ 2: 23) என்று கூறினார். ஆனால், இதே ஆதாம் நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்ட பின்பு ஏவாளைக் குறித்துஎன்னுடன் இருக்கும்படி நீர் கொடுத்த அந்தப் பெண் (தொநூ 3:12) என்று அந்நியப்படுத்திப் பேசினார். மேலும், இருவரும் கடவுளுடைய உறவில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயினர், கடவுளைக் கண்டு ஓடி ஒளிந்தனர்.”