ஆற்றங்கரையில் அழகிய மாலைப்பொழுதில் ஏதோ ‘தொபக்’கென விழுகின்ற சத்தம் கேட்டு, வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த இராசையா ‘திடுக்’கென எழுந்தான். வீட்டிற்கு முன்பாகத் தலை இல்லாது நின்ற தென்னை மரம் இரண்டு துண்டாக முறிந்து விழுந்திருந்தது.
“அந்த மரத்த முறிக்கணுமுன்னு ஆயிரம் வாட்டி சொல்லியாச்சி. நம்ம சொல்லுறதக் கேட்க இந்த வீட்டுல யாரு இருக்கா?” என்று அடிக்கடிச் சொல்லி களைத்துப் போயிருந்தாள் இராசையாவின் மனைவி பொம்மி. “அது இன்னும் பட்டே போகல. இப்போதெல்லாம் விழாது” என்று சொல்லி எப்போதும் நழுவிச்செல்வார் இராசையா. நல்ல வேளையாக வீட்ல பொம்மியும் விஜியும் இல்லாதபோது மரம் விழுந்தது ஒருவிதத்தில் நிம்மதிதான்.
மேட்டூர்
சந்தைக்குப் பொருள்கள் வாங்கிவரச் சென்றிருந்தார்கள் பொம்மியும் விஜியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஜி, தனக்கும் பென்சில் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அவளும் உடன் சென்றிருந்தாள். பொம்மியும் விஜியும் வீட்டிற்கு வரும் முன்பே வாசலுக்கருகில் விழுந்து கிடக்கிற தென்னை மரத்தை வெட்டி ஒதுக்கிட முடிவெடுத்தார் இராசையா. கொல்லைப்புற மாட்டுத் தொழுவத்திலிருந்த வெட்டரிவாளையும் கோடாரியையும் எடுத்துக் கொண்டு மரம் வெட்டத் தயாரானார்.
அந்த
ஆற்றோரக் கிராமத்தின் மௌனத்தைக் கத்தரிக்கோல் கொண்டு கிழிப்பதைப்போல கிளிகள் இரண்டு ‘கீச்’சென்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த மரத்தையே இவ்விரு கிளிகளும் சுற்றி வந்துகொண்டிருந்தன. இராசையாவிற்கு வியப்பாக இருந்தது. அடிக்கடி அந்த மரத்தில் இந்த இரண்டு கிளிகளும் வந்துபோய்க் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார். ஆனால், இன்று இந்தக் கிளிகள் ஏன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன? காரணம் தெரியவில்லை?
“என்னங்க ஆச்சு... இந்தக் கிளிங்க கத்திக்கிட்டே இருக்கு?” தூரத்தில் விஜியோடு வந்து கொண்டிருந்தபோதே கேட்டாள் பொம்மி.
மூங்கில்
கேட்டைத் தள்ளித்திறந்து உள்ளே வந்த விஜி, தான் நட்டு வைத்த புடலைச் செடியின் அடியில் இரண்டு கிளிகுஞ்சுகள் செத்துக் கிடந்ததைப் பார்த்து அரண்டழுதாள். அந்த அழுகை வானில் வட்டமிட்ட இரண்டு கிளிகளின் ஒப்பாரிச் சத்தத்திற்கு இணையாக இருந்தது. கீழே விழுந்த தென்னை மரத்தின் பொந்து ஒன்றில் கிளிகள் முட்டைகளிட்டு அடைகாத்து வந்தன என்பது பொம்மிக்கும் விஜிக்கும் ஏற்கெனவே தெரியும். தினமும் வந்து தென்னை மரப்பொந்தில் உட்கார்ந்துக்கொண்டு தன் குஞ்சுகளுக்கு இரை கொடுத்துச் செல்லும் கிளிகளை அவர்கள் தோட்ட வேலை செய்துகொண்டே பார்த்திருக்கின்றார்கள்.
“அம்மா! அப்பாட்டச் சொல்லி எனக்கு ஒரு கிளி புடிச்சு தரச் சொல்லும்மா... நான் வளக்குறேன்” என்று
அடிக்கடிச் சொல்லி நச்சரிப்பாள் விஜி.
இரு
கிளிக்குஞ்சுகளும் இறந்து கிடந்தது எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இராசையா மரத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை ஓரத்தில் அடுக்கிவைத்தார். வானில் கதிரவன் கண்கள் சிவந்திருந்த நேரம் தூரத்தில் கிளிகளின் ஒப்பாரிச் சத்தம் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை.
வீட்டுத்
திண்ணையில் எல்லாரும் அமர்ந்திருந்தபோது ஓட்டுக்கூரையின் மேலிருந்து ஒரு முனங்கல் சத்தம் கேட்டு, இராசையா ஏணி வைத்து டார்ச் லைட் அடித்து எட்டிப்பார்த்தார். இளம் கிளி குஞ்சு ஒன்று அரைகுறையாகப் பறந்து கொண்டு கூரையின் மேல் விழுந்து மயக்கநிலையில் இருந்து எழுந்திருக்கிறது. அதனை அப்படியே தூக்கியெடுத்து விஜியின் கையில் வைத்தார்.
தன்
கையில் கிளிகுஞ்சு இளம்பச்சை நிறத்தில் பூத்திருப்பதைப் பார்த்து விஜி பூரித்து நின்றாள். அவள் சிறு முகம் குண்டு பல்ப் வெளிச்சத்தில் குதூகலித்தது தெரிந்தது.
“இன்னைக்கோ நாளைக்கோ பறந்து போகுமளவிற்கு இறக்கை வந்திடுச்சி. நாளைக்கு ஒரு கூண்டு வாங்கித் தரேன். நீ வீட்டிலேயே வளத்துக்கோ...”
மகளுக்கு ஏதோ விலையுயர்ந்த தங்கக் கொலுசு வாங்கிக்கொடுத்தப் பிரமிப்பில் தன் மனைவி பொம்மியைப் பார்த்தார் இராசையா. விஜியைப் பார்த்தாள் பொம்மி.
எங்கோ
தூரத்தில் இரு கிளிகளின் அழுகைக் குரல் விஜியின் காதுகளைத் துளைத்துக்கொண்டே இருந்தது. நொடிப்பொழுதில் தன் கையிலிருந்த கிளிகுஞ்சை கைவிரித்துப் பறக்க அனுமதித்தாள் விஜி. கிளியும் ‘கீச்’ சத்தம் போட்டுக்கொண்டே பறந்துச் சென்றது.
“ஏன் விட்டுட்ட?” என்று கோபப்பட்டார் இராசையா. “நான் விடல, அதுவாவே போயிடுச்சிப்பா” என்று
சொல்லி அம்மாவின் முந்தானைக்குள் முகம் மறைத்தாள் விஜி.
இராசையாவிற்குக்
கடைசிவரைக் காற்றில்லாமலே மரம் எப்படி உடைந்து விழுந்தது என்றும் தெரியவில்லை; கைக்குள்ளிருந்த கிளிகுஞ்சு எப்படிப் பறந்து சென்றது என்பதும் புரியவில்லை. யாரும் பொறுப்பேற்காதவரை யாதும் குழப்பமே!
செயற்கை
நுண்ணறிவு இன்றைய உலகில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ஆயுத Lethal Autonomous Weapons (LAW) வடிவமைப்பில் அதிகமாகப்
பயன்படுத்தப்படவிருக்கிறது.
போர்கள் நடைபெறும் இடங்களில் அல்லது தீவிரவாதிகளை அழித்தொழித்தலில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் நாட்டு இராணுவத் திட்ட வரையறையில் சேர்த்துள்ளன. இந்தியா ‘மைக்ரோ சாப்ட்’
(Microsoft) நிறுவனத்துடன்
சேர்ந்து சுமார் மூன்று பில்லியன் டாலர் மதிப்பில் ‘இந்திரஜால் தானியங்கி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு’
(Indrajaal Autonomous Drone Security System) என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கொடிய தானியங்கி ரோபோக்களையும் (Lethal Autonomous Robotics), ‘மியூல்’ (MULE - Multi-Utility
Legged Equipment) என்னும்
ரோபோட்டிக் நாய்களையும் தனது படைப்பிரிவில் இந்தியா சேர்த்துள்ளது.
2015, ஜூலை 28 அன்று
சர்வதேசச் செயற்கை நுண்ணறிவிற்கான கூட்டு மாநாட்டில் முக்கியமான அறிஞர்களும் உலகத் தலைவர்களும் கொடிய தானியங்கி ஆயுதங்களைக் குறித்து எச்சரித்திருந்தனர். ஆயினும், இப்பந்தயத்தில் ஓடி வல்லரசாகிட வேண்டுமென்ற நோக்கத்தில் எல்லா நாடுகளும் வரையறையற்ற முறையில் இத்தொழில்நுட்பத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
மனிதத்
தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் இந்தக் கொடிய ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தவிர்க்க முடியாதது என்றாலும் அதன் ‘பொறுப்பேற்காத் தன்மை’
(avoiding accountability) இன்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
உலகளவில்
செயற்கை நுண்ணறிவிற்கான சட்டத்திட்டங்கள் இன்னும் இயற்றப்படாத நிலையில், கொடிய தானியங்கி ஆயுதங்கள் இன்னும் முறையாகச் சோதித்துப் பார்க்கப்படாத நிலையில், செயற்கை நுண்ணறிவில் பல்வேறு குறைபாடுகள் உள்ள நிலையில் இத்தொழில்நுட்பம் எப்படி மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்? போரிலோ அல்லது பாதுகாப்பிலோ ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், “ஐயோ! இது நான் அல்லேன்; ஏஐ...” என்று சொல்லி யார் வேண்டுமென்றாலும் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்துத் தப்பிச்செல்ல முடியும்.
யாரும்
பொறுப்பேற்காதவரை யாதும் தவறே!