இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக இடம்பெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பாகிஸ்தான் திரு அவை, மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க பேச்சுவார்த்தைகளும் நிலையான அமைதி முயற்சிகளும் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. மே 11-ஆம் தேதி பாகிஸ்தான் ஹைதராபாத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஒப்புரவு ஏற்பட வேண்டும் எனச் செபங்களை அர்ப்பணித்த பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சாம்சன் சுக்கார்தின், இடைக்காலப் போர்நிறுத்தம் வழியாக, பெரிய போரிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், போர் என்பது தீர்வாக முடியாது என்பதால் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாக அறிவித்தார். தென் ஆசியப் பகுதியில் அமைதியான வருங்காலம் இடம்பெற வேண்டுமெனில் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கொருவர் மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் பேராயர் ஜோசப் அர்ஷாத்.