news-details
தலையங்கம்
கடவுளின் கொடை! (Donum Dei)

என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்என்கிறார் நம் கடவுள் (எரே 3:15).

புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ (LEO XIV, 14-ஆம் சிங்கராயர்) இறைவன் தந்த உன்னதக் கொடை! மக்களின் மனங்களை உள்ளார்ந்து அறிகின்ற இறைவன், காலத்தின் அறிகுறிகளைக் கணித்துத் தந்திருக்கும் ஒப்பற்ற கொடை இவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு, புதிய திருத்தந்தையை இறைவன் நமக்கு வழங்கிட வேண்டுமெனத் திரு அவை இறைவேண்டலில் ஒன்றித்திருந்தது. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்களின் கூடுகைத் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் வெண்புகைக்காக ஆவலோடு காத்திருந்தார்கள்.

இரண்டு நாள்கள், ஏறக்குறைய 48 மணி நேரம் கடந்த வேளையில், மே மாதம் 8-ஆம் நாள் உரோமை நேரப்படி மாலை 6:08 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9:38) ‘புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார்என்னும் அறிவிப்பைத் தெரியப்படுத்தும் விதமாக, சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெண் புகை வெளிவந்தது. பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலிக்க, மணியோசை வானவர் வாழ்த்தை இசைத்தன. பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஒன்றுகூடி, புதிய திருத்தந்தையின் திருமுகத் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

வத்திக்கான் மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பார்தி அவர்கள்Annuntio vobis gudium: Habemus Papam!” - அதாவதுநான் உங்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை அறிவிக்கிறேன்; நாம் ஒரு புதிய திருத்தந்தையைப் பெற்றிருக்கிறோம்என்று கூறியதுடன், “கர்தினால் இராபர்ட் பிரான்சிஸ் பிரவோஸ்ட் 267-வது திருத்தந்தையாகக் கிடைத்திருக்கிறார்; அவர் 14-ஆம் லியோ என்ற பெயரிலே அழைக்கப்படுவார்என்றும் அறிவிக்கிறார். திருச்சிலுவை முன்வர, திருத்தந்தை அம்மாடத்திற்கு அழைத்து வரப்படுகிறார். மக்களின் கரவொலியும் ஆரவாரமும் விண்ணை முட்டுவதும், அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி பொங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாகிறது!

இருகரம் உயர்த்தி மக்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தைUrbi et Orbi’ (ஊர்பி எத் ஓர்பி) எனும் ஊருக்கும் உலகிற்குமான ஆசிரை வழங்குகிறார். “உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்!” என்ற ஆசிரோடு தன் உரையைத் தொடங்கிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ, “கடவுளின் மந்தையாம் மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்லாயனாம் உயிர்த்த இயேசு கிறிஸ்து கூறிய முதல் வார்த்தைகள் இவை. இந்த அமைதியின் வாழ்த்து, உங்கள் இதயங்களில் நுழைந்து உங்கள் குடும்பங்களுக்கும் உலகின் எல்லாத் திசைகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்என்றார்.

இது உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவின் அமைதி; ஆயுதங்களைக் களையும் அமைதி; தாழ்ச்சி மற்றும் விடாமுயற்சி உள்ள அமைதி; நம் அனைவரையும் அளவின்றி அன்பு செய்யும் கடவுளிடமிருந்து வரும் அமைதிஎன்று உயிர்ப்பு நாளில் அமைதியின் பரிணாமங்களை எடுத்துக் கூறிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நினைவுகூர்ந்து, “அவருடைய குரல் இன்று நமது காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது; அதே ஆசிரை நானும் இன்று உங்களுக்கு வழங்குகிறேன்என்றும் மக்களைத் திடப்படுத்தினார்.

கடவுள் நம்மை அன்பு செய்கிறார்; நம் அனைவரையும் அன்பு செய்கிறார்; தீமை வெற்றி பெறாது; நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்; எனவே, பயமின்றிக் கடவுளுடன் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவோம்; நாம் கிறிஸ்துவின் சீடர்கள். கிறிஸ்து நம்முன் செல்கிறார்; உலகத்திற்கு அவருடைய ஒளி தேவை; கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக மனிதகுலத்திற்கு அவருடைய ஒளி தேவை. உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டவும், ஒரே மக்களாக அனைவரும் ஒன்றிணைந்திருக்கவும் ஒருவருக்கொருவர் உதவுவோம்என்னும் அவருடைய செய்தி மறைந்த திருத்தந்தையின் எண்ண ஓட்டங்களையும் அவருடைய உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தன.

உங்களுடன் நான் ஒரு கிறித்தவன்; உங்களுக்காக ஓர் ஆயர்என்று கூறும் அகுஸ்தினாரின் சபையைச் சார்ந்த அவரது மகன் என்று தன்னைச் சிறப்பான வகையில் அடையாளப்படுத்திக் கொண்ட புதிய திருத்தந்தையின் பிறப்பும் வாழ்வும் பணியும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பெயரும் உலகிற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலே, இலினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ பட்டணத்தில் பிறந்த இவர், புனித அகுஸ்தினார் துறவற சபையில் தன்னை இணைத்துக்கொண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, இறையழைத்தல் ஊக்குநராக, பேராசிரிய ராகப் பயணித்து, வழிகாட்டியாகப் பரிணமித்து, அச்சபையின் தலைவராக வழிநடத்தி, பின் பெரு நாட்டில் சிக்லாயோ மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

அமெரிக்க நாட்டில் வளமையான பிறப்பும், தூய அகுஸ்தினார் சபையில் பெற்ற ஆழமான ஆன்மிகமும், பெரு நாட்டில் மக்களின் வறுமை வாழ்வில் கண்ட அனுபவங்களும் இவரைப் பெரிதும் புடமிட்டிருக்கின்றன என்பது இவருடைய முதல் உரையில் எதிரொலிக்கிறது.

தன்னுடைய இயற்பெயரிலேயே தன் முன்னவர் பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தாங்கி வரும் இவர், அவரோடு பயணித்துப் பெற்ற பணி அனுபவங்கள், சமூகச் சிந்தனைகள், திரு அவைக்கான முன்னெடுப்புகள் யாவும் குன்றாமல் குறையாமல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றாக இணைந்து பயணிப்பது, உடனிருப்பது, உரையாடல் மேற்கொள்வது, அனைவருக்கும் அன்பைக் கொடுப்பது, உலகிற்கு அமைதியை வழங்குவது என்னும் சிந்தனை ஓட்டங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே நினைவுபடுத்துகின்றன.

கத்தோலிக்கத் திரு அவையின் இறையியல், தத்துவவியல், சமூகவியல், அரசியல் தளங்களுக்குத் தூய அகுஸ்தினார், தூய தாமஸ் அக்குவினாஸ் ஆகியோரின் இறையியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கட்டமைத்த மாபெரும் மனிதர் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ. தனது 93 ஆண்டுகால மண்ணக வாழ்வில், 25 ஆண்டுகள் திருத்தந்தையாக நீண்ட காலம் பணிசெய்து, மறுமலர்ச்சி கண்டவர் அவர். தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களுக்கான நியாயமான ஊதியம், பணித்தளப் பாதுகாப்பு என்பது பற்றி தன்னுடையRerum Novarum (1891) என்னும் திருத்தூது மடல் வழியாகக் குரல் எழுப்பி பணியாளர்களின் உரிமைக்காக நிலைப்பாடு எடுத்தவர். ஆகவே, அவர்பணியாளர்களின் திருத்தந்தை (Pope of the workers) என்றே அழைக்கப்பட்டார். மேலும், ‘திருச்செபமாலையின் திருத்தந்தை (Rosary pope), ‘சமூகத் திருத்தந்தை (social pope) என்று பெயர் பெற்ற திருத்தந்தையின் வரிசையில் தன்னுடைய திருத்தந்தைக்கான நாமத்தைப் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

திருத்தந்தை 14-ஆம் லியோவின் பணிக்காலம் நம்பிக்கையாளர்களின் ஆன்மிகத்தை ஆழப்படுத்தும், திரு அவையின் செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும் என்றே நம்புகிறோம். இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல நமது இறைவேண்டல் அவருக்கு அன்றாடம் அவசியமாகிறது. நோபல் பரிசு பெற்ற தாகூர், கீதாஞ்சலியில் குறிப்பிடுவதுபோல...

இறைவா....

வலுவற்ற இந்தப் பாத்திரத்தைத்

துடைத்துத் துடைத்து

உன் புதிய உயிர்க்காற்றை

அதனுள் நிரப்புவதில் நீ இன்புறுகிறாய்!

இந்தச் சின்னஞ்சிறு மூங்கில் குழலுடன்

காடு மலைகளெல்லாம் சுற்றித் திரிந்து

என்றென்றைக்கும் புதுமையான இசை வெள்ளத்தை அதனுள் பரவவிடுகிறாய்!

எல்லையற்ற, அளவற்ற உன் பரிசுகள்

என் சிறு கைகளை நிறைக்கின்றன!

காலங்காலமாய் உன் பரிசுகள்

பொழியப்பட்டே வந்தாலும்,

இன்னும் சிறிது இடம்

இந்தக் கைகளில் மீதமாகவே இருக்கிறது!’

என்ற இறைவேண்டலைப்போல திருத்தந்தையின் கரங்களை இறைவன் வலுப்படுத்தவும், இறை ஆசி நிறைவாக வழங்கிடவும், உடல் உள்ள நலன் தந்திடவும் இக்காலச்சூழலில் துணிவுடன் தெளிவுடன் திரு அவையை முன்னெடுத்துச் செல்லவும் அவருக்காக நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்திடுவோம்!

நீடூழி வாழ்க திருத்தந்தையே!

Viva  papa!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்