திருத்தந்தையின் அடக்கத்திற்குப் பின் திரு அவையின் பேதுரு தலைமைப் பீடம் வெற்றிடமாகக் கருதப்படும். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும்வரை உள்ள காலம் ‘வெற்றிடக் காலம்’ (Sede Vacante) என்று அழைக்கப்படும் (திச 335). இக்காலத்தில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. உதாரணமாக, உலகில் உள்ள மறைமாவட்டங்களில் ஆயர்களை நியமனம் செய்ய முடியாது. வத்திக்கான் செயலகங்கள் பணிபுரிந்தாலும், திருத்தந்தையின் ஒப்புதலுக்காக, கையெழுத்துக்காக வத்திக்கான் செயலகங்கள் காத்துக்கிடக்கும்.
திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையினை இலத்தீன் மொழியில் ‘கான்கிளேவ்’ (Conclave) என்று அழைப்பர்.
‘இன்ம் இப்ஹஸ்ங்’
என்ற இலத்தீன் சொற்களிலிருந்து பிறந்த இச்சொல் ‘சாவியுடன்’
என்ற பொருளை உள்ளடக்கியது. திரு அவையை வழிநடத்தவிருக்கும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுரிமை உடைய கர்தினால்கள் அனைவரும் வத்திக்கானின் ஓர் அறையில் ஒன்றுகூடி இத்தேர்தலை நடத்துவர். திருத்தந்தை தூய ஆறாம் பவுல், 1970-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆணையில் கான்கிளேவில் கலந்துகொள்ளும் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 120 ஆகவும், இவர்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரைமுறையை நிர்ணயித்தார். பூட்டிய அறைக்குள் இத்தேர்தல் நடைபெறுவதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்கு ‘cum clave’அதாவது ‘conclave’ என்ற
பெயர் வந்தது.
விதிமுறைகள்:
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொதுவான செய்திகள் பின்வரும் திரு அவைச் சட்டங்களில் (திச 333-335; 349-359) காணப்படுகின்றன. இத்திரு அவைச் சட்டங்களைத் தாண்டி, திருத்தந்தை தேர்வு விதிமுறைகள் தனியான சட்டமாக வகுக்கப்பட்டுள்ளன. 1996-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் இயற்றியுள்ள ‘அகில உலக மந்தையின் ஆயர்’
(Universi Dominici Gregis) என்ற
விதித்தொகுப்புகளே திரு அவையின் வெற்றிடத்தையும் திருத்தந்தையின் தேர்வையும் வழிநடத்துகின்றன. இவற்றின்படி புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை திரு அவையின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்பவர் ‘கார்டினல் கார்மெலெங்கோ’ என்ற
பொறுப்பில் உள்ள கர்தினால் ஆவர். அவர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பவர். தற்போதைய கர்தினால் கார்மெலெங்கோவாக (Cardinal Carmerlengo) உள்ளவர்
மேதகு கர்தினால் கெவின் ஃபெரல். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் 80 வயது பூர்த்தியாகக் கூடாது.
திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும்
கர்தினால்கள்
அவை:
மே 7 புதன் அன்று மாலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழி வருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை ஆரம்பிக்கவிருக்கின்றது. இது திரு அவையில் இடம்பெறவிருக்கும் 76-வது கான்கிளேவ் அவையாகும். கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் மே 7, புதன் காலை 7 மணிக்கு வத்திக்கான் ‘Santa Martha’ இல்லத்திற்குச் சென்று கான்கிளேவ் முடியும் வரையில் அங்கேயே தங்கியிருப்பார்கள். புதன் காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் அனைத்துக் கர்தினால்களும் இணைந்து கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே தலைமையில் கான்கிளேவ்
அவைக்காகச் செபிக்கும் ‘pro eligendo Romano Pontifice’என்ற
திருப்பலியை நிகழ்த்துவார்கள். பின்னர் அன்று மாலை 4.15 மணிக்கு இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் Santa Martha இல்லத்திலிருந்து Pauline சிற்றாலயத்திற்குச்
செல்வர். அங்கு அவர்கள் தியானம் மற்றும் செபத்தில் ஈடுபட்ட பின்னர் Pauline சிற்றாலயத்திலிருந்து
Regia அறை
வழியாகப் புனிதர்கள் பிரார்த்தனையைப் பாடியபடியே செல்லும் கர்தினால்கள், சிஸ்டைன் சிற்றாலயம் அடைந்தவுடன் Veni Creator என்ற
தூய ஆவியாரிடம் வேண்டுதல் செய்யும் பாடலைப் பாடுவர். பின்னர் அவரவர் இருக்கையில் அமர்வர். அவர்களின் இருக்கைகள் ஒவ்வொருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஆண்டின்படி குறிக்கப்பட்டிருக்கும். சிஸ்டைன் சிற்றாலயத்தின் நடுவில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் திருவிவிலியத்தின்மீது கைவைத்து 133 கர்தினால்களும் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி எடுப்பர்.
‘இத்தேர்தலில் எந்தப் பொதுநிலை அதிகாரிகளின் தலையீடுக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன்; இத்தேர்தல் குறித்த ‘Universi Dominici Gregis’ என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி குறிப்பாக, இரகசியம் காப்பாற்றப்பட வேண்டிய விதி முறைகளின்படி நடந்துகொள்வேன்; யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் அகில உலகத் திரு அவையின் மேய்ப்பராகப் பணியைத் தொடர்வார்; அவர் திருப்பீடத்தின் ஆன்மிக மற்றும் உலகியல் சார்ந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி ஊக்கத்தோடு பாதுகாப்பார்’ என்று
133 கர்தினால்களும் உறுதிமொழி எடுப்பார்கள். இந்த உறுதிமொழியைக் காப்பாற்றாதவர்கள் திரு அவையை விட்டு விலக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பு
நடக்கும்
முறை:
கான்கிளேவ் அவையில் கர்தினால்கள் செபம் சொல்லி சிறிது நேரம் அமைதி காப்பர். அதன் பின்னர் கான்கிளேவ் அவையின் மூத்த கர்தினால் ‘வாக்கெடுப்பைத் தொடங்கலாமா?’ எனக் கேட்பார். அனைவரும் ‘சரி’ என்று கூறியதும், முதல் வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு
கர்தினால்களிடமும் இரண்டு அல்லது மூன்று வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். செவ்வக வடிவிலான இந்தச் சீட்டின் மேலே ‘Eligo Summum Pontificem’ அதாவது ‘திருத்தந்தையாக நான் தேர்ந்தெடுப்பவர்’ என
இலத்தீனில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே ஒரு கோடு இருக்கும். அதில் பெயரை எழுதி, வாக்குத்தாளை இரண்டாக மடித்து, அங்குள்ள திருப்பலிப் பீடத்தின்மீது வாக்குகளைச் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் மூன்று கிண்ணங்களில், முதல் பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவராக வந்து போடுவர். இரண்டாவது கிண்ணம், உடல் நலமின்றி யாரும் வெளியே இருந்தால் அவர்களிடம் சென்று வாங்கி வரும் வாக்குகளைப் போடுவதற்குரியது. மூன்றாவது கிண்ணம், வாக்குகளைச் சரிபார்த்துப் போடுவதற்குரியது.
வாக்குச்சீட்டு
எண்ணும்
முறை:
வாக்குகள் அனைத்தும் ஊசியின் மூலம் ஒரு நூலில் கோர்த்து ஒரு முடிச்சுப் போட்டு அவை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். வாக்குகளைச் சரிபார்த்து எண்ணுவதற்கு அங்குள்ள கர்தினால்களே ஒவ்வொரு முறையும் சீட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், மூன்றில் இரண்டு பகுதி வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்கைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வரைமுறையானது 1179-ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரால் கொண்டு வரப்பட்டது.
இத்தேர்தலில்
மூன்றில் இரண்டு பகுதி வாக்குகள் முழு எண்மத்தைப் பெறாதபோது, அவற்றோடு ஒரு வாக்கு அதிகமாகப் பெற வேண்டும் என்ற வரைமுறையை 1996-ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘Universi Dominici Gregis’என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பில் வெளியிட்டுள்ளார். அதன்படி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் கர்தினால்கள் 133 பேரில் இரண்டு பங்கு (45+45+1=91) 91 வாக்குகள் தற்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்குத்
தேவை.
வெண்புகை வெளியிடுவது:
திருத்தந்தையின் தேர்தல் நிலவரம் குறித்துப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்குச் சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகைபோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்
கறுப்புப் புகையும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால்
வெண்புகையும் வெளியே வரும். வெண்புகை வெளியே வரும்போது வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். வெண்புகை வெளியே வருவது ஏறக்குறைய 45 நிமிடங்கள் நீடிக்கும். இந்தப் புகை வெளிவருவதற்கு வாக்குச்சீட்டுகளுடன் வேதியப் பொருள்களும் சேர்த்து எரிக்கப்படும். வெண்புகையை வெளியிடும் வழக்கம் 1903-ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தலானது
தினமும் காலையில் இரண்டு முறை, மாலையில் இரண்டு முறை என முதல் மூன்று
நாள்களுக்கு நடைபெறும். அதுவரை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில்,
செபம் மற்றும் தியானத்திற்கென ஒருநாள் விடப்படும். பின்னர் அடுத்த நாள் வாக்கெடுப்புத் தொடங்கும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் புகை வெளியிடப்படும்.
திருத்தந்தையைத்
தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தல் அரசியல் தேர்தல் போன்றதன்று; தூய ஆவியின் அருளையும் ஆற்றலையும் நிறைவாகப் பெற்று, அந்த ஆவியின் துணையுடன் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்கள் ஒவ்வொருவரும் செயல்பட அவர்களுக்காகச் செபிப்போம். இத்தேர்தலுக்காக உலகெங்கும் தொடர் செபங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நாமும் நமது செபங்களை ஏறெடுப்போம்.