தனது அன்பு மனைவி ரோஸ்லின் மறைந்த பிறகு நியூயார்க்கில் இருப்பது நல்லதில்லை என்று டாக்டர் சேவியர் முடிவெடுத்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு, தன்னுடன் ஒரே அறையில் தங்கிப் படித்து டாக்டரான இஸ்மாயிலுடன் பேசினான் சேவியர்.
“ஏன் சேவியர் இப்படி தனியா கிடந்து கஷ்டப்பட்றே? பேசாமல் குழந்தையுடன் சென்னை வா. எனது தொழிலதிபரான மாமனார் எனக்கு நுங்கம்பாக்கத்தில் ஆஸ்பத்திரியை எல்லா வசதிகளுடனும் கட்டித் தந்துள்ளார். அதில் வந்து நீ வேலை பார்” என்றான்
இஸ்மாயில்.
“புதிதாய் வந்து உன்னுடன் வேலை பார்ப்பதில் எனக்குச் சந்தோசம் இஸ்மாயில். அதற்கேற்ற சூழ்நிலை எப்படி அமையும் என்றே யோசிக்கிறேன்” என்றான்
சேவியர்.
“சூழ்நிலையை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் சேவியர். நமக்கேற்ற சூழ்நிலை எது என்று யோசித்து முடிவெடுத்தால் வாழ்வில் நிம்மதியும் சமாதானமும் கிடைக்கும்” என்றான்
இஸ்மாயில்.
“நீ சொல்றது சரிதான்” என்றான்
சேவியர்.
“நாம் வாழும் சமுதாயத்தில் நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தாலே சமூகத்தில் நமக்கு நல்ல சூழ்நிலை அமைந்துவிடும். பிறருக்காகப் பாடுபடும் டாக்டர்களான நமக்கு எப்போதும் நல்ல சூழ்நிலை அமையும் சேவியர். இதைத்தான் திருவிவிலியம், குரான் போன்ற வழிகாட்டும் நூல்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன” என்றான்
இஸ்மாயில்.
“எனது அம்மா, தங்கையை முதலில் சென்னைக்கு வரவழைக்கணும். புதிதாக வீடு பிடித்துக் குடியேற வேண்டும்’
என்றான் சேவியர்.
“அதைப் பற்றி நீ யோசிக்காதே! என்
மனைவியும் என்னுடன்தான் இங்கே டாக்டராகப் பணியாற்றுகிறாள். அவளிடம் சொல்லிவிட்டால் எல்லாம் சிறப்பாக முடிந்துவிடும். பக்கத்தில் கோடம்பாக்கத்திலேயே உன் தம்பி, தங்கச்சி போய் வரக்கூடிய ஒரு பெரிய வீட்டைப் பிடிக்கச் சொல்லி விடுகிறேன். அருகில் உங்க சர்ச் இருக்கும்படி பார்க்கச் சொல்கிறேன்; கவலைப்படாமல் வந்து சேரு” என்றான் இஸ்மாயில்.
இஸ்மாயில்
அறிவுரைப்படி தனது அம்மா, தங்கச்சியைச் சென்னைக்கு வரவழைத்தான் சேவியர். அவனும் சென்னை வந்து சேர்ந்தான். கோடம்பாக்கம் இரஜினியுடைய இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடுத்த வீதியிலே பெரிய பங்களா கிடைத்தது. கீழே கிளினிக்கையும், மேலே குடியிருக்கும் இல்லமாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
அருகிலே
தினமும் அருளம்மா, அமலி சென்று வர கோடம்பாக்கம் பாத்திமா
ஆலயம் நல்லதொரு துணையாக இவர்களுக்கு அமைந்தது.
சேவியரின்
அம்மாவும் தங்கையும் குழந்தையை வளர்த்து வந்தார்கள். சேவியர் முற்பகல் 8 முதல் 10 வரை கீழே கிளினிக்கில் தேடி வரும் நோயாளிகளைப் பார்த்து விட்டு, நுங்கம்பாக்கம் செல்வான். மாலை 6 முதல் 9 வரை திரும்பவும் கிளினிக்கில் இருப்பான். தினமும் பாத்திமா ஆலயம் சென்று காலைத் திருப்பலியில் சேவியர் விசுவாசமுடன் கலந்துகொள்வான்.
அமெரிக்காவில்
வாழ்ந்த வாழ்க்கையில் மறைந்த நாள்களையும் மனைவி ரோஸ்லினையும் எண்ணி சேவியர் வருந்துவதுண்டு. ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு நமக்குத் திறந்து வழிகாட்டும் என்பதுபோல் இப்போது இஸ்மாயில் மூலம் சேவியருக்கு வாழ்வும் வளமும் வந்து சேர்ந்துள்ளது.