news-details
ஞாயிறு மறையுரை
மே 18, 2025, பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) திப 14:21-27; திவெ 21:1-5; யோவா 13:31-35 - அன்பே சீடத்துவத்தின் இலக்கணம்!

நியூயார்க் நகரில் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கடுமையான காவலில் வைத்திருக்கும்சிங் சிங்சிறை ஒன்று உள்ளது. தற்போது இதுஓசினிங் சிறைஎன்று அழைக்கப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு லூயிஸ் லோவ்ஸ் என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்குப் பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி கேத்தரினிடம் பலரும் கூறிய அறிவுரைஎக்காரணம் கொண்டும் அந்தச் சிறைக்குள் செல்லக் கூடாதுஎன்பதுதான். ஆனால், கேத்தரினோ தன் கணவர் அங்குச் சென்ற ஒரு மாதத்திற்குள், தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். உறவினர்கள் தடுக்க முயன்றபோது அனைவரிடமும் அவர் கூறிய பதில்: “என் கணவரும் நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம்; பதிலுக்கு அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

கைதிகளிடம் கேத்தரின் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் பார்வைத்திறன் அற்ற ஒருவருக்குப் பிரெய்லி மொழியைக் கற்றுக்கொடுத்தார்; பேசவும் கேட்கவும் முடியாத மற்றொரு கைதிக்குக் சைகை மொழியைக் கற்றுக்கொடுத்து, அவருடன் பல மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். கணவன்-மனைவி இருவரும் சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937-ஆம் ஆண்டு கேத்தரின் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அறிந்த கைதிகள் அனைவரும் சிறையின் நுழைவாயிலுக்கருகே சோகத்தோடு நின்றுகொண்டிருந்தனர். இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்தார். அனைவரும் கேத்தரினுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர்.

உயிர்ப்பு அனுபவம் வார்த்தையால் அறிவிப்பதில் நிறைவு பெறுவதில்லை; மாறாக, ‘இயேசுவைப்போல ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவதில் (யோவா 13:34) அடங்கியிருக்கிறது என்பதைப் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நமக்கு நினைவூட்டுகிறது. அன்பே எல்லா அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று; பாசத்தை வெளிப்படுத்தி உறவை வளர்க்கும் தூய சக்தி அன்பு! அன்பே ஆரோக்கியத்தின் அடையாளம்; அன்பே வலிமையானது; கல்லும் கரையும் கனிந்த அன்பால்! அன்பு பரந்துபட்ட ஒரு சொல்லாடல். அன்பைப் பற்றிப் பேசாத நாவு இல்லை; எழுதப்படாத ஏடுகள் இல்லை.

இயேசு தம் சீடரை விட்டுப் பிரிந்து தந்தையிடம் செல்லும் முன்பு அவர் ஆற்றிய பிரியா விடையில் ஒரு பகுதியை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். தம் பிரியா விடையின் தொடக்கத்திலேயேஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (13:34) என்னும் அன்புக் கட்டளையை ஒரு புதிய கட்டளையாகக் கொடுக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசு கொடுக்கும் வெளிப்படையான ஒரே கட்டளை இதுதான். இயேசு தம் சீடர்களைபிள்ளைகளேஎன அழைத்துத் தம் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தி இந்த அன்பு நிறைவில் தம் அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். ‘ஒருவர் காட்டிக்கொடுப்பார் (13:21-30), ‘மற்றொருவர் மறுதலிப்பார் (13:36-38) என்று இயேசுவுக்குத் தெரிந்த போதிலும், உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் (13:1). இறுதி வரை முழுமையாக அன்பு செய்த இயேசு, அந்த முழுமையிலிருந்தே தம் அன்புப் பிள்ளைகளுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, அன்புக்கு அவரே முன்மாதிரி ஆகிறார்.

அன்புக் கட்டளை, திருவிவிலியம் முழுவதும் நிரம்பியுள்ள கட்டளை. அதுவும் அன்புக் கட்டளை பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (லேவி 19:18). எனவே, வார்த்தை அளவில் இது புதிய கட்டளை அல்ல; எனினும், இயேசு தாம் கொடுக்கும் அன்புக் கட்டளை ஒரு புதிய கட்டளை (13:34) என எந்த அடிப்படையில் கூறுகிறார்?

கடவுளை முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் அன்பு செலுத்த வேண்டும் என்பது யூத சமயத்தின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (இச 6:4-9). இதுவே ஒவ்வொரு யூத வழிபாட்டின் தொடக்கத்திலும் கூறப்பட்டது. ஒவ்வொரு யூதக் குழந்தையும் முதன் முதல் மனப்பாடம் செய்த பகுதியும் இதுவே. இதனையே யூத ரபிகள் எழுதி நெற்றியில் அணிந்து கொண்டனர். வீடுகளின் கதவுகளில் பொருத்தி வைத்தனர். யூதர்களின் முதன்மையானகடவுள் அன்புகட்டளையில் பிறர் அன்புக் கட்டளையைப் புகுத்தியவர் இயேசு. இணைச்சட்டம் 6:5 உடன், லேவியர் 19:18 -ஐயும் சேர்த்து முதன்மையான கட்டளையை உருவாக்குகிறார் இயேசு. இயேசுவுக்கு முன்பு எந்த ஒரு மறைநூல் அறிஞரும் கடவுள் அன்பு - பிறர் அன்புக் கட்டளைகளை இணைத்துப் பேசியதில்லை. இயேசு இந்தக் கட்டளையின் புதுமைக்கூறுகளை விளக்குகிறார்.

இயேசுவின் அன்புக் கட்டளைப்படி, இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் அடுத்திருப்போரை அன்பு செய்ய வேண்டும் (13:34). அதாவது, தம் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். சிலுவைச் சாவின் வழி இயேசுவின் அன்பின் அளவு வெளிப்பட்டது. தம் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (15:13) என்பது இயேசுவே கற்றுத் தந்த இலக்கணம். எனவே, இயேசு போதிக்கும் அன்பு வெறும் சொல்லிலும் உணர்விலும் வெளிப்படும் ஒன்று அல்ல; மாறாக, அது செயலில், தியாகத்தில், தம் உயிரையே கையளிக்கும் நிலையில் வெளிப்படுவது. இவ்வாறு இயேசுவின் அன்பின் பொருள், ஆழம் புதிது! இத்தகைய அன்பையே சீடர்களும் கடைப்பிடிக்கப் போவதாக உறுதி கூறுகின்றனர். பேதுரு அனைத்துச் சீடர்களின் பதிலாளாக இயேசு எதிர்பார்க்கும் அன்பின் தன்மையை, உயிர் கொடுக்கும் தன்மையைத் தாமும் கொடுப்பதாகக் கூறுகிறார் (13:37). சீடர்கள் இயேசுவின் இறப்பிற்குப் பிறகு மறுதலித்தும் அச்சமுற்றும் துவண்டு கிடந்த போதிலும் யாவரும் தம் நண்பர் இயேசுவுக்காக உயிரையே கையளித்தனர் என்பது வரலாறு.

இன்றைய முதல் வாசகம் பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப்பயணத்தின் நிறைவுப் பகுதியாக அமைகிறது. சீடர்களும் இயேசுவைப் பின்பற்றுகின்ற மக்களும் தொழுகைக்கூடத் தலைவர்களால் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் சந்தித்தபொழுதிலும், பவுல் சீடர்களைச் சந்தித்துத் திடப்படுத்துகிறார். துன்பங்கள் வழியாகவே இறையாட்சியை அடைய முடியும் என்னும் உண்மையை நேரிடையாகவே உரைக்கிறார். சீடர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் ஆபத்துகளை எதிர்கொண்டாலும், அவர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறித்தவத்தின் கதவுகளைப் பிற இனத்தாருக்குத் திறந்துவிட்டது. கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையாக, மரண தண்டனையாக இருந்தாலும், இத்தகைய கொடுமைகள் மத்தியிலும் கிறித்தவர்களை வாழவைத்தது அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கைதான்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி. வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி. உரோமை அரசர் தொமிசியன் காலத்தில் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறித்தவச் சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். புனித யோவான் பத்மோஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் கிறித்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறித்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம்கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராதுஎன்ற உயரிய எண்ணத்தை வழங்குகிறார் யோவான்

அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமை அரசுகள் இன்று இல்லை. ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறித்தவம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. கிறித்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. அந்த அன்புதான் முதல் கிறித்தவர்களை அப்பம் பகிர்வதிலும் தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் ஒன்றிணைத்தது.

எனவே, கிறிஸ்துவில் கடவுள் வெளிப்படுத்தியுள்ள அளவிட முடியாத அன்பை மக்கள் அனைவரும் சுவைக்கும்படியாக நமது வாழ்வு அமைய வேண்டும். இயேசுவைப்போல அளவின்றி இவ்வுலகை அன்பு செய்ய வேண்டும். புனித பெர்னாந்து கூறுவதுபோல, “அளவின்றி அன்பு செய்வதே அன்பின் அளவுகோல்.” இயேசுவின் அன்பு தன்னலமற்றது; அது மன்னிக்கும் அன்பு. இத்தகைய அன்பை நாம் பிறர்மீது காட்டும்போது, நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை இந்த உலகம்  அடையாளம் காணும். அன்பு வளரும் இடங்களில் உண்மையான கிறித்தவமும் நம்பிக்கையும் செழித்து வளரும். உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் நிலைத்து நிற்கும். புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும், புதியதொரு மனிதக் குடும்பத்தையும் அன்பின் வழியே உருவாக்க, இயேசு நமக்குத் தரும் புதிய கட்டளையை அணிந்துகொள்வோம்.