ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெருங்கனவு ஒன்று உண்டு. தனது அமைப்பின் நூற்றாண்டு விழா ஆண்டில் பா.ச.க. ஆட்சியில் இருக்க வேண்டும்; அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் சித்தாந்த அடிப்படையான ‘இந்து இராஜ்ஜியம்’ என்ற கனவு நனவாகும்; அதற்கான காலச்சூழல் கனியும்; அதற்கான மூல அறிக்கையான ‘ஞான கங்கையை’ செயல்படுத்த இதுவே கடைசி யுத்தம்.
ஞான
கங்கை அறிக்கை சொல்கிறது: ‘மாநில அரசுகள் இல்லாத மத்திய அரசு, சாதி அடிப்படையில் மாவட்டங்களாக ‘சனப்பதங்கள்’ அவை
-200-லிருந்து 300-க்குள் இருக்கலாம். சனாதன ரீதியான அந்த ஆட்சியின் அதிகாரங்கள் முழுவதும் புது தில்லி மத்திய அரசிடம் குவிக்கப்படும்.’
‘குடியுரிமைச் சட்டம் எத்தனை பேருக்குக் குடியுரிமை கொடுத்தது?’ எனப் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த உள்துறை துணை அமைச்சர் நித்தியானந்தா ராய் “குடியுரிமை எவருக்கும் தரப்பட்டதாகத் தகவல் இல்லை; ஆனால், 37,000 பேரை நாடு கடத்திவிட்டோம்” என்றார்.
அம்பேத்கர்
அன்றே கூறினார்: “நான் எழுதிய அரசமைப்புச் சட்டம், என்று மக்களைப் பாதிக்கிறதோ, அன்று இந்த நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவில்லை.” அதுதானே பா.ச.க.
ஆட்சியில் இன்று நடக்கிறது.
இந்திய
அரசியல் சாசனம் இந்தியாவை ‘இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பற்ற குடியரசாக’
அறிவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு விடுதலைப் போராட்டம், இந்திய அரசியல் சாசனம், அரசமைப்புச் சட்டம் என்பதில் எக்காலத்திலும் நம்பிக்கை இல்லை. இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கூட்டத்தில் “இராமர் கோவில் திறந்த நாளே இந்தியாவின் சுதந்திரத் திருநாள்”
என்று புதுக்கதை பேசுகிறார்கள். அவர்கள் தங்களது சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்து
இராஜ்ஜியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கான செயல்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.
‘இந்து இராஜ்ஜியம்’ என்றால்
இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும்; சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைக்கவேண்டும்; வரலாற்றைப் புதிதாக மாற்றி எழுதவேண்டும்; சமூக நலத் திட்டங்களை நிறுத்த வேண்டும். சனாதனத் தர்மப்படி அரசியலை முன்னெடுத்து, ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த புதிய சனாதன அரசமைப்புக்கு நகர்தல் அவசியம். மன்னர் ஆட்சியின் குறியீடான செங்கோலைப் புது நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்ததும் இதன் அடையாள அரசியலே.
“தங்களது பத்து ஆண்டுகால ஆட்சியில், இந்திய ‘அரசு இயந்திரம்’
முழுவதையும் காவி மயமாக்கி விட்டார்கள். இருபது ஆண்டு காலத்திற்கு அதன் தாக்கம் இருக்கும்”
என்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தன் கவலையை வெளிப்படுத்துகிறார். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களைத் தலைவராகக் கொண்ட ‘விவேகானந்தா பவுண்டேஷன்’ என்ற
அமைப்பு செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் 97% ஒரே உயர்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற குழுக்கள் எந்த வழக்குகள் எந்த நீதிபதியிடம் செல்வது என முடிவு செய்கிறது
என ‘கேரவன்’ பத்திரிகைக் கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இசுலாமியர்களைக் குறிவைத்து குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தார்கள். பிரதமர் மோடி கேலியாக “இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் உடைகளைப் பாருங்கள்; அவர்கள் யாரெனத் தெரியும்”
எனத் தன் மத வன்மத்தை வெளிப்படுத்தினார்.
‘முத்தலாக்’ சட்டம்,
‘வக்பு’ திருத்தச்
சட்டம் என இசுலாமியர்களை ஓர்
எல்லையில் நிறுத்துகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக இந்திய இராணுவத்திற்கும் இந்திய இரயில்வேக்கும் கூட ‘வக்பு’ வாரிய அளவிற்குச் சொத்துகள் இல்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொதுமக்கள்
கருத்தைத் திசை திருப்பியது.
மேற்கு
வங்கத் தேர்தலை முன்னிட்டும், ‘வக்பு’ சட்டத் திருத்தம் குறித்தும் ஆர்.எஸ்.எஸ். தன் கலவரங்களை ஆரம்பித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் காளிக்குப் பதில் இராமரை முன்னிறுத்தும் மத அரசியலை ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது. அடுத்த ஆண்டு முதல் 20,000 இடங்களில் இராமநவமி விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். அறைகூவல் விடுகிறது.
இக்கட்டுரையின்
அடிநாதமான தகவலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ஆர்கனைசர்’
03.04.2025-இல் தலையங்கமாக வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தன் கொள்கைப் பிரகடனங்களை மட்டுமே தலையங்கமாகத் தீட்டும். அது கத்தோலிக்கருக்கா? அல்லது வக்புக்கா? யாருக்கு அதிக சொத்து? என்ற தலைப்பில் கேள்வி கேட்டது. கத்தோலிக்க அமைப்புகளுக்கு 20,000 கோடி மதிப்பில், 17 கோடி ஏக்கர் நிலம் உள்ளது என எழுதியது. இத்தகவலை
ஆர்.எஸ்.எஸ். திரட்டியதாகத் தெரிகிறது. ‘நேற்று இசுலாமியர்கள், நாளை கிறித்தவர்களா?’
என்ற பரபரப்பு தீப்பற்ற, முறையற்ற அப்பதிவு திரும்பப் பெறப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நீக்கிவிட்டார்கள்.
கிறித்தவத்
தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்து, மக்கள் சேவைகளை முடக்கிய பா.ச.க.
அரசு அவர்களது கல்வி, மருத்துவச் சேவைகளை நிறுத்த வழிதேடுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பெரும் நிதி அயல்நாடுகளிலிருந்து வருவதைப் பா.ச.க.
அரசு ஊக்குவிக்கிறது. இது குறித்துத் திருமுருகன் காந்தி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
தற்போதைய
நிகழ்வுகள் சில பெரும் பொறுப்பு வகிப்பவர்களின் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையைக் காட்டுகின்றன. பாம்பன் பாலத் திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’
என மக்களை மத அடிப்படையான பரவசத்திற்கு
இட்டுச் செல்கிறார். அதைப் பின்பற்றி ஆளுநர் ஆர்.என். இரவியும் மதுரை தியாகராயா கல்லூரியில் இதையே திரும்ப ‘ஜெய் ஸ்ரீராம்’
எனச் சொல்ல சர்வ மத மாணவர்களையும் கட்டாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில்
புதிதாகப் பா.ச.க.
தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரன், சாகாவில் 7 மற்றும் 15 நாள் பயிற்சியில், தனது வாழ்வுமுறை மாறிவிட்டதாகக் கூறி தனது பதவி ஏற்பு விழாவில் பாடுகிறார்: ‘கேசவனை நாம் வணங்குவோம்; அவர் பாதையில் நாமும்
செல்வோம்; இலட்சியத்தை எய்திடுவோம்; நாம் நிச்சயமாய் வெற்றியை நிலைநாட்டுவோம்’ என
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தப் பாடலைப் பதவியேற்பு மேடையிலே பாடி ஆர்.எஸ்.எஸ். விசுவாசம் காட்டுகிறார். இவரது பழைய பதிவு ஒன்று இப்படிக் கூறுகிறது: “இந்து தர்மத்தைத் தவறாகப் பேசினால் அவனைக் கொலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.”
இதுபோன்ற
மதவெறிப் பேச்சுகளால் ‘யூ.சி.எஃப்.
என்ற அமைப்பால் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, கிறித்தவர்களுக்கு எதிரான 823 தாக்குதல்கள் நடந்திருப்பதாகப் பதியப்படுகிறது. பிரதமர் மோடி அவர்களிடம் உளவுத்துறை ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. “சிறுபான்மை மக்களுக்கு எதிரான இதேநிலை நீடித்தால் விரைவில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், தலித்துகள், பழங்குடியினர் என அனைவரும் இணைந்த
சிறுபான்மையோரின் பெரும் போராட்டம் நாட்டில்
நடைபெறும்” என்கின்றது.
எனவே, ஆளும் பா.ச.க.
அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விடுதலை பெற்று, சமயச் சார்பற்ற குடியாட்சி முறைக்குத் திரும்ப வேண்டும்.