news-details
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தையும் திரு அவையில் - மாற்றங்களும்!

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பின் திரு அவையில் தேவையான மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் தன் தலைமைத்துவப் பணியில் ஏற்படுத்தியுள்ள பெருமையும் புகழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும். ஆடம்பரம் இல்லாமல், ஆதாயம் தேடாமல், எளிமையிலும் பிறரன்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது பணிக்கு ஒரு புதிய முகத்தைத் தந்திருப்பவர் இவர். பணியாற்றும் திரு அவையாக, நம்பிக்கையாளர்களின் சமத்துவ, சகோதரத்துவத் திரு அவையாக, இறைவாக்கினர் திரு அவையாக இன்றைய திரு அவை செயலாற்றிட, இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கிச் சான்று பகரும் திரு அவையாக செயல்பட, தன் சீரிய தலைமைத்துவப் பண்புகளால், காலத்தின் அறிகுறிகளை அறிந்து, தேர்ந்து தெளிந்து பல மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ். இவரின் பணிக்காலத்தில் நிகழ்ந்தமாமன்றங்கள்திரு அவையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் திருத்தந்தையின் சீரிய தலைமைத்துவத்தில், அவரின் சிறப்பான வழிகாட்டுதல் அனைவரையும் உள்ளடக்கிய, ஈடுபாடு நிறைந்த நான்கு (ஆயர்) மாமன்றங்களைக் கண்டிருக்கிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஏற்படுத்த விரும்பிய மறுமலர்ச்சியின் மிகச் சிறப்பான முயற்சியாகத் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் 1965-இல்ஆயர் மாமன்றம்அமைக்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டு முதல் ஆயர் மாமன்றம் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் கூட்டப்பட்டது. திரு அவையை வழிநடத்தும் பொறுப்பில், திருத்தந்தைக்கு உதவும் உன்னத நோக்குடன், பங்கேற்புத் திரு அவையாகச் செயல்பட முன்னெடுக்கப்பட்ட ஆயர் மாமன்றம் இன்று மறுமலர்ச்சி கண்டுள்ளது. இதுநம்பிக்கையாளர்கள் மாமன்றம்என்ற புதிய முகத்தைப் பெற்றுள்ளது. ‘அதிகாரத் திரு அவை, ‘பணியாளர் திரு அவைஎனும் புதிய பார்வையைப் பெற்றுள்ளது. தன் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் திரு அவை என்ற விமர்சனத்தைக் கடந்து, ‘மாற்றங்கள் வழி மறுமலர்ச்சி காணும் திரு அவைஎனும் புதிய பயணத்தைக் கண்டிருக்கிறது.

குடும்பங்கள் பற்றிய மாமன்றம் (2014-2015)

முதல் மாமன்றமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டிய மாமன்றம் திரு அவையில் குடும்பங்களின் மாண்பும் மதிப்பீடுகளும் குறித்து விவாதித்தது. வழக்கமாகக் கூடும் ஆயர் மாமன்றங்களின் வரிசையில் இல்லாமல், சிறப்பு ஆயர் மாமன்றமாக இந்த நிகழ்வு நடந்தேறியது. ‘நற்செய்தி அறிவிப்பின் ஒளியில் இன்று திரு அவையில் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு அருள்பணிச் சவால்கள்என்ற மையச் சிந்தனையில் முதல் பொது அமர்வு 2014, அக்டோபரில் நடைபெற்றது. தொடர்ந்து அதன் இரண்டாம் பொது அமர்வு 2015, அக்டோபரில்குடும்பங்களின் அழைப்பும் பணியும்குறித்து ஆய்வும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. திரு அவையின் பார்வையில் குடும்பங்கள் மாண்புமிக்கவை; மதிப்பிற்குரியவை; அவைதான்குட்டித் திரு அவைகள்என்ற உயர் மதிப்பீடுகள் முன்னிறுத்தப்பட்டன. இன்றைய குடும்ப வாழ்வு பல்வேறு சவால்களைச் சந்திக்கும் சூழலில், குடும்பங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் திரு அவையின் வாழ்வுக்கும் பணிக்கும் முதன்மையானது என்ற சிந்தனையை இந்த மாமன்றம் வழங்கியுள்ளது.

இரண்டாம் பொது அமர்வின் சிறப்பான நிறைவு நிகழ்வாக, குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றோர்களான தந்தை லூயிஸ் மற்றும் தாய் செலி மார்ட்டின் இருவரையும் அருளாளர் நிலைக்குத் திருத்தந்தை உயர்த்தினார். இரண்டு பொது அமர்வுகளின் மணிமகுடமாக 2016-ஆம் ஆண்டுஅன்பில் மகிழ்ச்சி (Amonis laetitia) எனும் திருத்தூது ஊக்க உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய திரு அவையாக நாம் பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இளையோர் பற்றிய மாமன்றம் (2018)

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அகில உலக இளையோர் மாநாடுகளைத் தொடங்கி வைத்து, இளையோரின் ஈடுபாடு நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு வழிகாட்டியிருப்பது எவ்வளவு சிறப்பானதோ, அதேபோல் 2018-இல் உரோமையில் அக்டோபர் 3-28 வரை நடைபெற்ற ஆயர் மாமன்றத்தில் இளையோரின் நம்பிக்கை வாழ்வுக்கான அழைப்பும், பணிக்கான தேர்ந்து தெளிதலும் கருப்பொருளாக அமைந்திருந்தது. இன்றைய உலகில் இளையோர் எதிர்கொள்ளும் சவால்களான கணினி உலகம், புலம்பெயர்தல், பாலியல் உறவுச் சவால்கள் குறித்து இந்த மாமன்றம் சிந்தித்தது. அதன் அடிப்படையில் 2019-இல்கிறிஸ்து வாழ்கிறார் (Christu vivit) எனும் திருத்தூது மடலை வெளியிட்டு, வாழ்வின் மதிப்பீடுகளை முன்னிறுத்தி, இளையோரின் பங்கேற்புக்கும், பணிவாழ்வுக்கும் திரு அவை திறந்த உள்ளத்துடனும் நிறைந்த நம்பகத்தன்மையுடனும் இளையோரை ஏற்றுக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.

அமேசான் ஆயர் மாமன்றம் (2019)

அகில உலக பொது ஆயர் மாமன்றம் என்ற வடிவத்தைக் கடந்து, கண்டங்கள் அளவிலான சிறப்பு ஆயர் மன்றங்களின் வரிசையில், 2019 அக்டோபர் 6-27 வரை நடைபெற்ற அமேசான் பகுதிக்கான ஆயர் மாமன்றம் இயற்கை, காலநிலை, சுற்றுச்சூழல் சகோதரத்துவ உலகம் போன்ற இறையியல், அருள்பணி மதிப்பீடுகளை முன்னிறுத்தி, திரு அவையின் நம்பிக்கை வாழ்வு சமூக மாற்றத்தை உள்ளடக்கியது என்ற சிந்தனை இந்த மாமன்றத்தில் முதன்மை பெற்றது. அழிந்து கொண்டிருக்கிற அமேசான் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அகில உலக நாடுகள் மிகக் குறிப்பாக, வளர்ந்த நாடுகளின் கடமையையும் வலியுறுத்தும் மாமன்றமாக அமேசான் ஆயர் மாமன்றம் நிகழ்ந்தேறியது. 2020-ஆம் ஆண்டு இந்த ஆயர் மாமன்றத்தின் கனவுகளாக சமூகம், பண்பாடு, இயற்கை நலன், ஒருங்கிணைந்த திரு அவை எனும் நான்கு உயர் மதிப்பீடுகளை உள்ளடக்கியQuerida Amazoniaஆவணம் வெளியிடப்பட்டது.

கூட்டொருங்கியக்கத் திரு அவை (2023 -2024) மாமன்றம்

1965-இல் தொடங்கப்பட்ட ஆயர் மாமன்றத்தின் பொன்விழா ஆண்டில் திரு அவை கூட்டொருங்கியக்கத் திரு அவையாகச் செயல்பட வேண்டும் என்பது தூய ஆவியாரின் அழைப்பு எனத் திருத்தந்தை அறைகூவல் விடுத்தார். 2018, மார்ச் 22-ஆம் நாள் அகில உலக இறையியல் மன்றத்தின் உதவியுடன்இன்றைய திரு அவையின் வாழ்விலும் பணியிலும் கூட்டொருங்கியக்கம்என்ற தலைப்பில் இந்த மாமன்றத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என மூன்று முக்கியமான தாரக மந்திரங்களை முதன்மைப்படுத்திக் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்துக்கு அழைப்பு விடுத்தார்.

2021-ஆம் ஆண்டு தலத்திரு அவைகளில்அனைவருக்கும் செவிமடுத்தல்எனும் முக்கிய நிகழ்வைச் செயல்படுத்த திருத்தந்தை விடுத்த அழைப்பு ஆயர் மாமன்றச் செயல்பாடுகள் தலத்திரு அவைகளில் நிகழ வேண்டிய புரட்சிகரமான செயல்பாட்டைத் தொடங்கி வைத்தது. ஆயர்களும், அருள்பணியாளர்களும் ஆட்சியாளர்கள் எனும் ஆதிக்க மனப்பான்மையை விடுத்து, செவிமடுக்கும் பணியாளர்களாகச் செயல்பட அழைப்பு விடுத்தார். அதிகாரத் திரு அவை, ஆட்சியாளர் திரு அவை எனும் நிலையைக் கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் மாற்றுச் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும், இதன்மூலம் புதிய பாதையை, பார்வையை வழங்கினார்.

2022-ஆம் ஆண்டு கண்டங்கள் அளவிலும் (continental Synods) 2023-ஆம் ஆண்டு பொதுப் பேரவை எனத் திட்டமிட்டு செயலாற்ற வழிகாட்டினார். 2023, அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பொது அமர்வு தொடங்கியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தை 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் பொது அமர்வாகக் கொண்டு செலுத்தினார். இந்தப் பொது அமர்வில் வாக்களிக்கும் உரிமையை ஆயர்கள் கடந்து அருள்சகோதரிகள், பொதுநிலை சகோதர- சகோதரிகளுக்கும் நீட்டிப்புச் செய்தது ஆயர் மாமன்றத்தின் புரட்சி.

நிறைவாக, அகில உலக ஆயர் மாமன்றங்கள் 1967-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 மாமன்ற நிகழ்வுகளைக் கண்டுள்ளன. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்ஈடுபாடு மற்றும் பங்கேற்புத் திரு அவைஎனும்  அடிப்படையான மாற்றத்தை ஆயர் மாமன்றங்கள் வழி நிகழ்த்தியுள்ளார்.

மாமன்றங்கள் வழியாகநீங்கள் என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள்; அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்  (பிலி 4:9) எனும் செய்தியே திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு விட்டுச் செல்லும் பாடம்.