news-details
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தை பிரான்சிஸின் எழுச்சி: திரு அவையில் பெண்களுக்கு மறுமலர்ச்சி

பொதுவாக சமுதாயத்தில் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தில் பாதியாவது திரு அவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு, திரு அவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் எதிர்பார்க்கும் அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பதுதான் நிதர்சனம்! எங்குப் பார்த்தாலும் பெண்கள் தங்கள் இருப்பை உறுதி செய்யக் கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் பெண் பிள்ளைகளைப் பீடச்சிறுமிகளாக நியமித்த பங்குகளும் உண்டு. ஆனால், திரு அவையில் பெண்களின் நிலையை உயர்த்திச் சாதனை செய்தது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே என்று கூறினால் அது மிகையாகாது. திரு அவையில் பல சீர்திருத்தங்களைச் செய்த நம் திருத்தந்தை எவ்வித பயமோ, நெருடலோ இன்றி காலத்தின் அறிகுறிகளை அறிந்து செயல்பட்டவர்.

பெண்களுக்குத் திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களிலும், தலைமைப் பொறுப்புகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது - திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் தலைவராவதற்கு முன்னால்! கத்தோலிக்கத் திரு அவை என்றாலே அது ஆண்கள்தான் என்ற நிலையை மாற்றியவரும், பெண்கள் உலகில் இரண்டாம் நிலை குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்ற பொதுவான கூற்றையும் உடைத்து, தன் 12 வருடகாலத் திரு அவையின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து பெண்களையும் திரு அவையின் முடிவெடுக்கும் தளங்களில் பொறுப்பாளர்களாக நியமித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் துறவற சபைத் தலைவர்களைச் சந்தித்தபோதுபெண்களின் நுண்ணறிவு திரு அவை மற்றும் சமுதாயத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலும் இன்றியமையாததுஎன்று குறிப்பிட்டார் (இந்திய ஆயர் பேரவையின் தலித் கொள்கை வரைவு 98N VII m).

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்பதைத் தேர்ந்து தெளிந்து பெண்களுக்கான உரிமைகளையும் இடத்தையும் கொடுத்தவர். பல நூற்றாண்டுகளாக அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் மட்டுமே பங்கேற்று வந்த  திரு அவையின்  கட்டமைக்கப்பட்ட பெரும்பான்மைப் படிநிலைக் குருத்துவத்தைக் கண்டித்தார். அன்னை  மரியாவிற்குத் திரு அவை அளிக்கும் முக்கியத்துவத்தைத் திரு அவையில் பெண்களும் பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

பாதம் கழுவுதல் சடங்கு என்றாலே ஆண்கள்தான் என்ற பாரம்பரியச் சடங்கை மாற்றி 2015-ஆம் ஆண்டு முதல் பெண்கள், நோயாளிகள், சிறையிலிருப்போர் என எல்லா மக்களையும் பொதுக் குருத்துவத்தில் இணைத்து, ‘திரு அவை அனைவருக்குமானதுஎன்ற நிலையை மீண்டும் மீண்டும் உறுதி செய்தார். 2024 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் நாள் பெரிய வியாழன் அன்று சிறையில் இருந்த பெண்களுக்குப் பாதம் கழுவி முற்போக்குவாதப் பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், திருத்தந்தையின் இந்த உன்னதமான செயல் இன்னும் பல பங்குகளில் இன்றும் செயல்படுத்தப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

திரு அவையில் பெண்கள்...

திரு அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். அவ்வப்போது மற்ற ஆண்களுக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அருள்சகோதரிகளும் பெண்களும் இதில் தீண்டத்தகாதவர்களாக அல்லது பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். ஆனால், 2019-ஆம் ஆண்டு உரோமில் நடைபெற்ற ஆறு இலட்சம் அருள்சகோதரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலகளாவியத் தலைமைச் சகோதரிகள் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 850-க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தபோது, அதன் அப்போதைய தலைவரான ஆப்பிரிக்க அன்னையின் மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி கார்மென் சம்மூட் அவருக்கு அருகில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமைத்துவத்தில் பெண்கள்...

பெண்களைப் பங்குப் பேரவைகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதையே விரும்பாத பங்குகள் இருந்தாலும், திரு அவையின் தலைவராகத் திருத்தந்தை பிரான்சிஸின் முற்போக்குச் சிந்தனைகளை அவரின் செயலாக்கத்தை வரலாறு ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஆயர் பேரவைகளிலும் தலத் திரு அவைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், வத்திக்கானின் உயர் பதவிகளுக்குப் பெண்களை நியமிப்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரிமை அளித்தது பாலினச் சமத்துவத்தையும் சமூக மாற்றத்தையும் விரும்பிய மாமனிதர் என்றே  உணர்த்துகிறது.

2016-ஆம் ஆண்டில் வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டாவை நியமித்தார் நம் திருத்தந்தை.

பிப்ரவரி 2021-இல் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானின் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்து, கத்தோலிக்கத் திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 1965 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அலுவலகம், உரோமில் மாமன்றங்களை ஏற்பாடு செய்கிறது. மேலும், பெக்கார்ட் மாமன்றங்களில் வாக்களிக்க முடியும் என்ற பேச்சும் இருந்தது.

2022-ஆம் ஆண்டில் அமைதி மற்றும் நீதி பிரச்சினைகளைக் கையாளும் வத்திக்கானின் மேம்பாட்டு அலுவலகத்தில் சகோதரி அலெக்ஸாண்ட்ரா ஸ்மெரிலியை இரண்டாவது அதிகாரியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார்.

2022-ஆம் ஆண்டில் உரோமைத் தலைமைச் செயலகம் (Roman Curia) பெண்கள் மற்றும் பொது நிலையினர் வழிநடத்த அனுமதிக்கும் வகையில் வத்திக்கானின் அரசியலமைப்பைத் திருத்தந்தை பிரான்சிஸ் மாற்றியமைத்தார். ஜனவரி 6, 2025 அன்று கன்சோலாதா மறைபரப்பாளர்கள் சபை அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர் சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராய முதல்வராகத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார். கத்தோலிக்கத் திரு அவையில் முதல் முறையாகப் பெண்கள் துறவற அவைகளை ஒரு பெண் மேற்பார்வையிடும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.

நற்கருணையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை அருள்சகோதரி இரஃபேல்லா பெட்ரினி, வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். அவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகாவிற்கு அடுத்து பதவியேற்றார். அவர் நிர்வாகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய மேலாண்மை உள்ளிட்ட நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்.

அதோடு மட்டும் நின்றுவிடாமல், இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று அவரை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ்  திரு அவையின் அனைத்துத் திருத்தந்தையரும் புனித பேதுருவின் ஆலயத்திற்குள்தான் புதைக்கப்படுவர் என்ற மரபை மாற்றி, தன்னை எளிமையான முறையில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், அதுவும் உரோமில் உள்ள தான் எப்போதும் செபம் செய்யும் பெரிய நாயகி மாதா பசிலிக்காவில்தான் தன்னைப் புதைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அன்பில், இரக்கத்தில், புன்னகையில், நீதியில், எளிமையில் அயலாரை நேசித்த, பெண்களை மாண்புடன் நடத்தி, எளிமையை ஊன்றுகோலாய் ஏந்தி நின்ற திரு அவையின் அன்புத் தந்தையின் ஆன்மா மூவொரு இறைவனில் இளைப்பாறட்டும்!