இறைவேண்டலே கிறித்தவ வாழ்வின் அடித்தளம். அதுவே நம் அருள்வாழ்வின் சுவாசம் என்றும் கூறலாம். ‘இறைவேண்டல் செய்யாத ஒருவர் கிறித்தவர் அல்லர்’ என்று நாம் துணிந்து கூறலாம். அறிவியல் வளர வளர ஆன்மிகத்தையும், அருள்வாழ்வின் தளங்களையும்கூட அறிவியல் பார்வையில் அணுகும் மரபு தொடங்கியது. அறிவியலும் இறை நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதே தொடக்கம் முதல் திரு அவையின் பார்வையாக இருந்து வந்துள்ளது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பவுல் 1998-இல் எழுதிய ‘நம்பிக்கையும் பகுத்தறிவும்’ (Fides et Ratio) என்னும் சுற்றுமடலில் “நம்பிக்கையும் அறிவியல் சிந்தனையும் உண்மையை அணுகும் மானிட முயற்சியின் இரு சிறகுகள்” என்றார்.
எனவே,
இன்று திரு அவையின் வழிபாடுகள், இறைவேண்டல்கள், திருத்தலங்களில் நடைபெறும் அற்புதச் செயல்கள், தனி வெளிப்பாடுகள் போன்ற அனைத்தையும் நம் திரு அவை அறிவியல் கண்ணோட்டத்தோடே அணுகுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். அந்த வகையில் இறைவேண்டலையும் உளவியல் பார்வையில் ஆய்வு செய்து, அதன் முடிவுகளைப் பலரும் நமக்குத் தந்துள்ளனர்.
“சமய நம்பிக்கை மனிதரை மயக்கும் ஒரு போதை”
(The opium of the people) என்றார்
காரல் மார்க்ஸ். இவ்வுலக வாழ்வின் பல்வேறு துயரங்களில் மனிதருக்கு ஆறுதல் தரும் ஊற்றாகச் சமயங்களும், வழிபாடுகளும் இருக்கின்றன என்னும் வகையில் அவரது கூற்று ஒரு வகையில் சரியானதே. மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகளில் சமய நம்பிக்கை உள்ளவர்களும், இறைவேண்டலில் ஈடுபடுபவர்களும், சமய நம்பிக்கை, இறைவேண்டல் இல்லாதவர்களைவிட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று உலக மகிழ்ச்சியின் அறிக்கை (World Happiness Report- 2012) சான்று பகர்ந்துள்ளது.
இறைவேண்டல்
பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் இறைவேண்டல் செய்வோர் பலவித உடல்-மனம் சார்ந்த நன்மைகளைப் பெறுவதாகப் பட்டியலிடுகின்றன. மன அழுத்தம் குறைதல்,
மன ஆறுதல் அதிகரித்தல், தனிமை உணர்வு குறைதல், உறவுகள் மேம்படுதல், பரிவு மேம்படுதல், சிக்கல் தீர்க்கும் திறன் வளர்தல் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்று நம்மை வியக்க வைக்கின்றன. நம்முடைய முந்தைய தலைமுறையினர் அதிகக் கல்வியறிவின்றி வாழ்ந்தாலும், அவர்களின் வாழ்வில் மேற்கண்ட ஆசிகள் நிரம்பியிருந்தது அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் இறைவேண்டலினால்தான் என்று நாம் நம்பலாம்.
இன்று
பெரிதும் முன்வைக்கப்படும் நேர்மறை உளவியல் (positive Psycology)
மனமகிழ்ச்சியின் காரணிகளுள் ஒன்றாக நன்றியுணர்வைச் சுட்டுகிறது. இறைவேண்டலில் இறைப்புகழ்ச்சியும் நன்றியும் எப்போதும் சிறப்பிடம் வகித்திருக்கின்றன. நவீன உளவியலின் பிதாமகன்களுள் ஒருவரான கார்ல் யூங், “ஒப்புரவு அருள்சாதனத்தில் பாவங்களை அறிக்கையிடுவதால் குற்றவுணர்வு அகன்று, மன அமைதி கிடைக்கிறது.
எனவே, உளவியலையும் சமயத்தையும் இணைக்கும் புள்ளி பாவ அறிக்கை” என்று எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் நமது தனி வேண்டல், குழும வேண்டல், குடும்ப வேண்டல்களில் மன்னிப்பையும் இணைத்துக்கொள்வது சிறப்பானது என்பதை உணர்கிறோம்.
புற்றுநோயாளர்களிடம்
நடத்தப்பட்ட ஆய்வில் இறைவேண்டல் செய்யப்பட்ட நோயாளர்கள் அதிக ஆறுதலும் அமைதியும் பெற்றனர் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போர் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் இறைவேண்டல் செய்யுமாறு பெரும்பாலான மருத்துவர்கள் ஊக்குவிக்கின்றனர்.
தியானம்,
மூச்சுப்பயிற்சி, யோகா போலவே இறைவேண்டலும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது; கோபத்தைத் தணிக்கிறது. எதிர்மறை உணர்வுகளைத் திறம்படக் கையாள உதவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இறைவேண்டல் அனைத்து உறவுகளையும் குறிப்பாக, திருமண உறவை மேம்படுத்துகிறது என்பது எண்பிக்கப்பட்டுள்ளது. குடி நோய், போதை அடிமைத்தனம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கும் இறைவேண்டல் உதவுகிறது. இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’
(Alcoholics Anonymous) அமைப்பு
இறைநம்பிக்கை, இறைவேண்டலின் அடிப்படையில் கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
நமது
மூளை எவ்வாறு இறைவேண்டல் மற்றும் இறையியல் அனுபவங்களுக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை இன்றைய நரம்பியல் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. ஆன்ட்ரு நியூபெர்க் என்னும் நரம்பியல் வல்லுநர் நமது மூளைக்கும் இறையியலுக்கும் தொடர்பு உள்ளதாக எண்பித்துள்ளார். அதன் விளைவாக ‘நரம்பிறையியல்’ (neurology
or spiritual neuroscience) என்னும் புதிய சொல்லாடல் மற்றும் ஆய்வுத்தளமே உருவாக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மருந்து, மாத்திரைகள் ஏற்படுத்தும் நல்வினையை இறைவேண்டலும் உண்டாக்கும் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது.
‘அறிவியல்,
மருத்துவம் மற்றும் உளவியல் பரிசோதனைகள் மனிதர்களின் நோயைக் குணப்படுத்தி, நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன’ (கதிம
2292) என்பதே கத்தோலிக்கத் திரு அவையின் பார்வையாக, போதனையாக உள்ளது.
இறைவேண்டலும்
அத்தகைய நலப்படுத்தும் பணியைச் செய்யும்போது, தனி வேண்டல் மற்றும் குழும வேண்டல்களை ஊக்குவிப்பது நம் கடமையாக மாறுகிறது.
இறைவேண்டல்
செய்வோர் பாமரர், பத்தாம் பசலிகள் என்னும் பார்வை மாறி, அவர்கள் அறிவியல் ஆய்வுகளோடு ஒன்றுபடுகிறார்கள் என்னும் புதிய பார்வையை இன்றைய உளவியல், அறிவியல் ஆய்வுகள் நமக்குத் தந்திருக்கின்றன.
எனவே,
புது உற்சாகத்தோடு தனி வேண்டல், குழும வேண்டல், குடும்ப இறைவேண்டல்களை ஊக்குவிப்போமாக.