news-details
சிறப்புக்கட்டுரை
ஒளி விளக்கேற்றும் உயர் கல்வி!

தமிழ்நாடு இன்று உயர் கல்வித் துறையில் இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்வி மேலாண்மை, மாணவர் பதிவு, பெண்கள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூகநீதி சார்ந்த புதிய முயற்சிகள் ஆகிய அனைத்திலும் மாநில அரசு பல்வேறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. 2025-ஆம் ஆண்டுக்கான தரவுகள் மாநிலத்தின் உயர் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர்.

அரசு தரவுகளின்படி தமிழ்நாட்டின் மொத்த உயர் கல்வி பதிவு விகிதம் (Gross Enrollment Ratio) 48% கடந்துள்ளது. இது இந்திய சராசரி 28% விட சிறந்த நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2021-22-ஆம் ஆண்டு 45% மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்குச் சென்றனர். ஆனால், தற்போது 2023-24-க்குள் அந்த விகிதம் 74% ஆக உயர்ந்துள்ளது. இது மிகச் சிறப்பான வளர்ச்சியைக் குறிக்கிறது.

பெண்கள் கல்வியிலும் புதிய வரலாறு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘புதுமைப் பெண்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படுவதால், அவர்கள் உயர் கல்வியில் தொடரும் எண்ணிக்கை 2.09 இலட்சத்தில் இருந்து 4.06 இலட்சமாக இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது.

பள்ளிகளில் செயல்படுவது போலவே அரசுக் கல்லூரிகளில் புதியகல்லூரி மேலாண்மைக் குழுக்கள் (IMC) அமையத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வட்டாரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகச் செயல்படும். கல்லூரியின் நிர்வாகத் திறனை உயர்த்த இது ஒரு நல்ல நோக்கம் ஆகும்.

2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் உயர் கல்விக்காக ரூ. 8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, கட்டட வசதி மற்றும் ஆசிரியர் நியமனம் ஆகியவற்றிற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்திட்டம் தற்போது 353 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 827 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செயல்படுகிறது. மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையில் மிகுந்த வளர்ச்சி காலமாக அமைந்திருக்கிறது. மாணவர் பதிவு விகிதம், பெண்கள் கல்வி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகத் தெளிவானது.

இந்த நிலையில் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டதில் கிறித்தவ குறிப்பாக, கத்தோலிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதை அனைவரும் நன்கறிவர். இன்று கத்தோலிக்க மறைமாவட்டங்கள், துறவற சபை நிறுவனங்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் பல பின்தங்கிய பகுதிகளில் ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இத்தகைய சூழலில், அரசு உதவி பெற்று கிறித்தவச் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில், கத்தோலிக்க ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சில கல்லூரிகளில் கத்தோலிக்கக் கிறித்தவ மாணவர்களைவிட வசதி படைத்த பலர் அதிகமான வாய்ப்பினைப் பெறுகிறார்கள். இதுபோன்ற சூழலில் ஆயர் பேரவை, மறைமாவட்ட ஆயர்கள், துறவற சபைத் தலைவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதும் பலருடைய எண்ண ஓட்டங்கள்.

உயர் கல்வி என்பது ஒவ்வோர் இளைஞனின் கனவுகளை நனவாக்கும் கருவி. அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே சமுகநீதி. தமிழ்நாடு அரசு கல்விக்காக மேற்கொண்டு வரும் முன்னேற்ற முயற்சிகளில், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு ஓர் அமைதியான புரட்சிபோலவே திகழ்கிறது. கல்வி என்பது நற்செயலின் ஒரு வடிவம் என நம்பும் இந் நிறுவனங்கள் ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மாணவர்களுக்கு நம்பிக்கையுடன் எதிர்காலம் தரும் தூண்களாகவே இருக்கின்றன. ஆயினும், இந்தப் பணியில் சில இடர்ப்பாடுகள், பாகுபாடுகள், நிர்வாகச் சவால்கள் இருப்பதையும் நாம் மறுக்க இயலாது. நீதி வழி சென்று, திறந்த மனத்துடன் சவால்களை எதிர்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களின் பணிகள் தொடர வேண்டும். சமத்துவமான, தாராளமான, எல்லாருக்குமான கல்வி வழங்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டம் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் மலர வேண்டும்

நம் எதிர்காலத்தின் ஒளிக்கதிர்கள் கல்லூரித் திறவுகோல்களில் ஒளிந்திருக்கும். அந்த ஒளிக்கதிர்களை நோக்கி அனைவரும்  செல்ல வழிகாட்டும் ஒளிவிளக்காக, நமது கல்வி நிறுவனங்கள் என்றும் சுடர்விட்டுக்கொண்டே இருக்கட்டும்!