news-details
உலக செய்திகள்
திரு அவையின் 267-வது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வாழ்க்கை வரலாறு

14-09-1955 அன்று அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட்.

இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர்தாயார் Mildred Martinez இஸ்பானிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martin மற்றும் John Joseph என்னும் இரு சகோதரர்கள் உள்ளனர்

புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் சேர்ந்து கல்வி பயின்ற இவர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார்.

1977, செப்டம்பர் 1-ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார்.

1978, செப்டம்பர் 2 அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981, ஆகஸ்டு 29 அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.

சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற இவர், தனது 27-வது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

1982, ஜூன் 19-ஆம் நாள் சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1984-ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற இவர், அடுத்த ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார்.

1987-ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இவர், இலினாய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ளநல்லாலோசனை அன்னைஎன்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறையழைத்தல் இயக்குநராகவும் மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

1999-ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறையாகவும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு சிகாகோவின் அகுஸ்தீன் சபையின் முதல் ஆலோசகர், இறையழைத்தல் இயக்குநர்.

2014, நவம்பர் 3-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவன்று அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2015, செப்டம்பர் 26 அன்று சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018, மார்ச் மாதம் பெரு நாட்டு ஆயர் பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதில் இவர் பொருளாதாரக் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

2020, ஏப்ரல் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

2023, செப்டம்பர் 30 அன்று கர்தினாலாக உயர்த்தப்பட்டு, ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2025, மே 8 அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அகுஸ்தீன் சபையைச் சார்ந்த இவர்பதினான்காம் லியோஎன்னும் பெயரினைத் தனது பெயராக ஏற்றுள்ளார்.