இந்நூற்றாண்டில் மனித குலம் கண்ட ஒரு மாமனிதர் திருத்தந்தை பிரான்சிஸ். இவருடைய திருமடல்கள், ஆவணங்கள், கற்பிதங்கள் பலவற்றை எடுத்தியம்பினாலும், அவற்றில் இயற்கைப் பாதுகாப்பு, மனித மாண்பு, மனித உரிமை, ஆண்-பெண் சமத்துவம், அதிகாரப் பரவலாக்கம், அனைவரும் திரு அவையில் இணைப் பொறுப்பாளர்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, எல்லாரும் சகோதரர்கள், திருத்தூதுப் பணியின் முக்கியத்துவம், திரு அவையில் பொது நிலையினரின் மாண்பும் முக்கியத்துவமும், நற்செய்தி அறிவித்தலின் அவசியம், திரு அவை இறை மக்களின் ஒன்றிப்பின் மையம், பொருளாதார மற்றும் அறநெறி தொடர்பான முறைகேடுகள் பற்றிய தெளிவான வரையறைகள், திருமுழுக்கினால் இறை நம்பிக்கையாளர்கள் பெற்ற முப்பணிகளாகிய போதிக்கும்-புனிதப்படுத்தும்-வழிநடத்தும் பணிகளுக்கான அழைப்பு, புலம்பெயர்ந்தோரின் வாழ்வுக்கான வழிகள், இரக்கம் கலந்த நீதியில் தண்டனைகளுக்கான அவசியம், திரு அவைச் சட்டங்களில் காலத்திற்கேற்ற தேவையான சீர்திருத்தங்கள் போன்றவை தனி வெளிச்சம் பெறுகின்றன.
‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(Evangelii Gaudium-2013) என்ற
மடல் இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் முழு ஆர்வத்தோடு திரு அவை ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் படிப்பினைத் தொகுப்பு 1. திரு அவை மறை அறிவிப்பில் ஈடுபடும் ஒன்றாக மாற்றம் பெறல்; 2. குழுவாக நற்செய்தி அறிவிப்பில் ஈடுபடுதல்; 3. நற்செய்தியை அறிவிக்கும் பணி செய்தல்; 4. நற்செய்தி அறிவிப்பின் சமூகக் கூறுகள்; 5. ஆவியால் நிரம்பிய நற்செய்தி அறிவிப்பாளர்கள் என ஐந்து பிரிவுகளைக்
கொண்டது. இந்தப் படிப்பினைத் தொகுப்பில் கிறித்தவர்களின் சமூகக் கடமைகளையும் அவர் எடுத்துரைக்கின்றார்.
‘இறைவா உமக்கே புகழ்’
(Laudate Si-2015) என்ற
திருமடல் சுற்றுச்சூழல் நெருக்கடியை முன்வைக்கிறது. இத்திருமடல் நவீன உலகு, ஆன்மிக விழுமியங்களின் பாதையில் செல்லவும், பொதுநலனுக்காக ஒத்துழைப்பு வழங்கும் வழிகளைத் தேடவும் அழைப்பு விடுக்கிறது. நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பராமரித்தல் பற்றிய இத்திருமடல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுக்கின்றது.
‘அன்பின் மகிழ்வு’
(Amoris Laetitia-2016) என்ற
மடலின் வாயிலாக, அன்பு என்றால் என்ன? குடும்பத்தில் ஒவ்வொரு நபரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறார். நமது காலத்தில் - குடும்பம் பல வழிகளில் தாக்குதலுக்கு
உள்ளாகி, குடும்பங்கள் பிளவுகளுக்கு உள்ளாகிற சூழல்கள் அதிகரித்திருக்கின்ற வேளையில், இந்த மடல் மாற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த மருந்தாக அமைந்துள்ளது. குடும்பத்திற்கும் திரு அவைக்கும் இடையே நிலவும் உறவு பலப்படுத்தப்பட்டு, இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ள சக்தியை வழங்கும் நோக்கத்தில் ஆலோசனைகளை இம்மடல் வழங்கியுள்ளது. ஒரே பாலின இணைவு என்பது திருமணத்திற்குச் சமம் என்கிற பார்வையை நிராகரிக்கும் இம்மடல், அவர்களுக்கு மரியாதைக்குரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
‘இன்றைய உலகில் புனிதத்திற்கான அழைப்பு’ என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்த ‘மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அடைந்துகொள்ளுங்கள்’ (Gaudete et exsultate-2018 -
Rejoice and Be Glad) என்ற
திருத்தந்தை பிரான்சிஸின் மூன்றாவது திருத்தூது மடல் அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் அவர்களின் நிலை எதுவாக இருந்தாலும், கடவுளால் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தூய்மையையும்
புனிதத்தையும் அடைய அழைப்பை விடுக்கின்றது.
‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus vivit-2019)
என்ற திருத்தூது அறிவுரை மடல் அனைத்து இறைமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் குறித்துப் பேசுகின்றது. திருத்தந்தை இளைஞர்களுக்கு அவர்களின் ஆற்றலையும் அவர்களால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் நினைவூட்டுகின்றார். மேலும், அவர்களின் குடும்பம், சமூகம், திரு அவை மற்றும் உலகத்திற்காகத் தங்களால் இயன்றதைச் செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
‘அனைவரும் சகோதரர்கள்’ (Fratelli tutti-2020) என்ற திருத்தூது மடலில் ‘சகோதரத்துவம்’ என்ற
கருத்தை வலியுறுத்துகின்றார். அதிகரித்து வரும் வறுமை, மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி உள்ளிட்ட இன்றைய அச்சுறுத்தும் சவால்களைச் சந்திக்க மனிதகுலம் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டியதன் இன்றியமையாமையையும், கருத்தொற்றுமையில் நிலைத்திருப்பதன் தேவையையும் எடுத்துரைத்துள்ளார்.
‘ஆண்டவரின் ஆவி’
(Spiritus Domini-2021) மற்றும்
‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’
(Antiquum Ministerium-2021) என்ற திருத்தூது
மடல்களின் வழியாகப் பொதுநிலையினர் நிலையான வாசகர்கள், பீடத்துணைவர்கள் மற்றும் வேதியப் பணியைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறது. பொது நிலையினரின் பணி என்பது தற்காலத்தில் நாம் பெற்றிருக்கிற அருள் மட்டுமல்ல; மாறாக, திரு அவையின் மறைபோதகப் பணியில் மிகப்பெரும் உதவியாக இருப்பது என்பதைத் திண்ணமாகத் திரு அவைக்குத் திறம்பட எடுத்தியம்பியுள்ளார்.
உரோமைச்
செயலகத்தைக் (Roman Curia) குறித்த
‘நற்செய்தியை அறிவியுங்கள்’ (Praedicate Evagelium-2022)
என்னும் புதிய திருத்தூதுப்பீட ஆணை மடலின் வழியாக உரோமைச் செயலகத்தை மறைபரப்புப் பணியை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு விடுத்தார். இம்மடல் ‘நற்செய்தி அறிவிப்பே திரு அவையின் முதன்மைப் பணி’ என்பதை வலியுறுத்துகின்றது. திருத்தந்தையின் தனிப்பட்ட பிறரன்புப் பணிகளை (Personal Charity) மறுசீரமைப்புச்
செய்தது. தற்போது அது திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான பேராயம் என மாற்றம் பெற்றுள்ளது.
உரோமைச் செயலகத்தில் எந்தத் துறையையும் பொதுநிலையினராக உள்ள எந்த ஆணோ, பெண்ணோ தலைமையேற்று வழிநடத்தலாம் எனத் திரு அவையின் கதவுகளைத் திறந்து வைத்துள்ளார்.
‘கடவுளைப் புகழ்தல்’
(Laudate Deum-2023) என்பது
நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களுக்கும், காலநிலை மாற்றப் பிரச்சினை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய
ஒரு திருத்தூது அறிவுரை மடலாகும். அவரது 2015-ஆம் ஆண்டு சுற்றறிக்கையான ‘Laudate Si’-இன்
தொடர்ச்சியான ஆவணமாக இது கருதப்படுகின்றது. இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதன் அவசியத்தையும், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலம் தாய் பூமியைப் பராமரிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
‘எல்லையற்ற மாண்பு’
(Dignitas Infnita-2024) என்ற
மடல் இன்றைய உலகில் மனித மாண்பிற்கு எதிராக நிகழும் குற்றங்களையும் பட்டியலிடுகிறது. குறிப்பாக, கடுமையான வறுமை, போர், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைகள், ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கருக்கலைப்பு, வாடகைத்தாய், கருணைக் கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணித்தல், பாலினக் கோட்பாடு, பாலின
மாற்றம், எண்ணியல்சார் முறைகேடுகள் (Digital Violence) ஆகியவைகளைப்
பட்டியலிட்டு, அதற்கெதிரான வழிமுறைகளை முன்வைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் ‘Motu Proprio’ என்னும் தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிட்ட ‘ஆண்டவர் இயேசு, இரக்கமுள்ள நீதிபதி’
(Mitis Iudex Dominus Iesus-2015) மற்றும் ‘இரக்கமும்
சாந்தமும் கொண்ட இயேசு’
(Mitis et Misericors Iesus-2015) என்ற
இரு திருத்தூது அறிக்கைகள் வழியாகத் திருமணத்தின் செல்லுபடியாகாத நிலை குறித்து ஆராயும் நடைமுறையில் சீர்திருத்தங்களை வழங்கினார். இந்தத் திருத்தூது அறிக்கைகள், திருமணம் செல்லாது என்பது குறித்து ஆராயும் படிநிலைகள் விரைவானதாகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தித் திரு அவைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளார்.
‘மகிழ்ச்சியின் உண்மை’
(Veritatis gaudium),
‘இறையியலை மேம்படுத்துவதற்காக’ (Ad Theologiam Promovendam)
போன்ற மடல்கள் இறையியல் என்பது சூழல் சார்ந்ததாகவும், சமூகத்திற்கு ஏற்றதாகவும் இருக்க அழைப்புக் கொடுக்கின்றன. கத்தோலிக்க இறையியல் என்பது சமகால அனுபவம் மற்றும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்பப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இறுதி ஆவணமாக வெளிவந்த ‘இணைந்து பயணிக்கும் திரு அவையின் கற்பிதங்கள்’ பொதுநிலையினரைத்
திரு அவையில் இணைப்பொறுப்பாளர்களாகப் பொறுப்பேற்கப் பரிந்துரைக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் நமது காலத்திற்கான தகுந்த இறைவாக்கினர். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற இந்தப் படிப்பினைகள் நமது வாழ்வுக்கான படிகள் ஆகட்டும். திரு அவை வாழும் இறையரசாகட்டும்.