news-details
ஆன்மிகம்
3 ஐடியாக்கள் (கண்டனையோ... கேட்டனையோ... – 35)

ஈஸ்டர் முடிந்த உடனேயே இதுபற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஈஸ்டருக்கு மறுநாள் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்துவிட, அதைத் தொடர்ந்து உருவான அசாதாரண சூழலில், இதுபோன்ற தலைப்புகள் பொருத்தமாக இருக்காது என்று நினைத்துத் தள்ளிப்போட்டேன். தற்போது ஒரு புதிய திருத்தந்தை பொறுப்பு எடுத்துள்ளார். பத்திரிகைகாரர்களும், அரசியல் தலைவர்களும், ஆர்வலர்களும் Eternal City-யிலிருந்து  விடைபெற்று, புழுதிகள் தரையிறங்கி, திரு அவை மெல்ல business as usual- நிலைக்குத் திரும்பி வந்துவிட்ட நிலையில் இப்போது பேசலாம். நான்கு பேர் கேட்க வாய்ப்புண்டு. விசயம் ஒன்றும் பெரிசில்லை. தவக்காலத்தை எப்படிச் சிறப்பாகக் கொண்டாடலாம் என்பதுபற்றிதான்.

திருவழிபாட்டு ஆண்டில் இரண்டு காலங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, திருவருகைக்காலம்; மற்றொன்று, தவக்காலம். இரண்டில் கால அளவில் சிறியது திருவருகைக்காலம். இதையும் ஓர் ஒடுக்கத்தின் காலமாகவே (time of penance) திரு அவை பரிந்துரைக்கிறது. தவக்காலத்தின் நிறைய வழிபாட்டு அடையாளங்களைத் திருவருகைக்காலத்திலும் காணலாம். ‘உன்னதங்களிலேகிடையாது. ‘அல்லேலூயாஉண்டு. பீடத்தில் மலர்கள் வைக்கப்படுவதில்லை. அருள்பணியாளர் ஊதா நிற திருவுடைகள் அணிகிறார். விதிப்படி திருவருகைக்காலமும் ஒரு தவக்காலம்தான். ஆனால், நடைமுறையில் அது அப்படி இருப்பதில்லை.

ஈஸ்டர் என்றால், அது ஒருநாள் கொண்டாட்டம். ஆனால், கிறிஸ்துமஸ்? என்று திருவருகைக்காலம் துவங்குகிறதோ அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் துவங்கிவிடுகிறது. கிறிஸ்துமஸ் நண்பர், கிறிஸ்துமஸ் போட்டிகள், கிறிஸ்துமஸ் கலை நிகழ்வுகள், கிறிஸ்துமஸ் விருந்துகள்... முக்கியமாகக் கிறிஸ்துமஸ் கேரல்ஸ். எங்கள் பங்கில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கேரல்ஸை டிசம்பர் 5-ஆம் நாள் தொடங்கினோம். சில பங்குகளில் திருவருகைக் காலம் துவங்கிய அன்றே கேரல்ஸ் ஆரம்பித்துவிடும். அப்போதுதான் எல்லா வீடுகளுக்கும் சென்று முடிக்க இயலும். ஒவ்வொரு நாளும் வண்டி கட்டிக்கொண்டு, வீடு வீடாகச் சென்றுஹேப்பி கிறிஸ்துமஸ்சொல்லி, கேரல்ஸ் பாடி, கிறிஸ்துமஸ் தாத்தாவோடு நடனமாடி, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடும் அனுதினக் கொண்டாட்ட சூழலில் எப்படி ஒடுக்க மனநிலை வரும்? அதுவும் இல்லாமல் கிறிஸ்துமஸ் ஓர் உலகப் பொருளாதார நிகழ்வு. கோவில்களில் அலங்காரம் செய்வதற்கு முன்னே கடைகளில் சீரியல்செட்டுகள் வைத்து, ஸ்டார் போட்டு விடுகிறார்கள். கடந்த வருடத்தின் மிகப்பிரமாண்டமான குடில்களும், கிறிஸ்துமஸ் மரங்களும் ஆலயங்களில் அல்ல; மால்களில்தான் போடப்பட்டன என்பதிலிருந்து இந்தக் கிறித்தவ விழாவின் வியாபாரச் சாத்தியங்களைத் தெரிந்துகொள்ளலாம். நல்ல வேளை, இன்னும் ஈஸ்டர் மீது வணிகர்கள் கண்படவில்லை!

திருவருகைக்காலம், தவக்காலம் இரண்டுமே முக்கியம் என்றாலும், ஆன்மிக ரீதியாக மக்களைப் புதுப்பிக்க, ஒருங்கிணைக்க தவக்காலமே சிறந்தது. தனிப்பட்ட முறையிலும் எனக்குத் தவக்காலமே பிடித்ததாக இருக்கிறது. இந்தக் காலத்தில் மக்கள் தங்கள் மனத்தைச் சற்றுக் கூடுதலாகத் திறந்து வைக்கிறார்கள் என நம்புகிறேன்புத்தாண்டு, பொங்கல் போன்ற கலாச்சார விழாக்கள் எல்லாம் ஒரு வழியாக முடிந்து, புழுதி அடங்கி, பொதுவான ஒரு நிதானத்தன்மை கைகூடி, மக்களின் கேட்கும் மனநிலையும் இந்தக் காலத்தில் அதிகரிக்கிறது.` தவக்கால ஞாயிறுகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறையுரையை வழக்கத்தைவிட இரண்டு மூன்று நிமிடங்கள் கூட்டலாம். கோபப்படாமல் கேட்பார்கள். வழிபாட்டில்  பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வழக்கமாக வாரத்தில் ஒருநாள் மட்டும் (ஞாயிறு) வருபவர்கள், தவக்காலத்தில் இரண்டு நாள் (வெள்ளி) வருகிறார்கள். ஒப்புரவு அடையாளம் அதிகம் செய்யப்படுகிறது. தேர்வுகள் இருந்தாலும், பிள்ளைகள் தவக்காலத்தில் விரும்பி ஆலயத்திற்கு வருகிறார்கள். பொதுவாகத் தூங்கி வழியும் பங்குகள்கூட தவக்காலத்தில் சுறுசுறுப்பாகி, சிலுவைப்பாதை, திருப்பயணம், தியானம், பாஸ்கா நாடகம்... என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கிறது.

தவக்காலத்தின்போது நான் பங்கு அருள்பணியாளர்களைச் சந்திக்கும்போதுஇந்த வருடம் உங்கள் பங்கில் புதிதாக என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்பேன். குறிப்பாக, இளம் அருள்பணியாளர்களிடம். அவர்களின் உற்சாக ஐடியாக்களை என் பங்கில் செயல்படுத்திப் பார்க்க முடியுமா? என்று யோசிப்பேன். இதுபோன்ற உரையாடல்கள், பரிமாற்றங்கள் பங்குகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்குக் கட்டாயம் தேவை. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில், எங்கள் பங்கில் தவக்காலத்தின்போது நாங்கள் முயற்சித்து, பரீட்சித்துப் பார்த்த மூன்று புதிய முன்னெடுப்புகள் குறித்துச் சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன். விரும்புகிற அருள்பணியாளர்கள் தங்கள் இடங்களில் அடுத்த வருடம் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.

1. தவக்காலக் கொடி

தமிழ்நாட்டில் வேறு எந்தப் பங்குகளிலும் தவக்காலத்தில் கொடியேற்றும் நிகழ்வு இருக்கிறதா? என்று தெரியவில்லை. எங்கள் பங்கில் உண்டு. இதை நான் சென்ற வருடமே அறிமுகப்படுத்திவிட்டேன். பெரும்பாலும் திருவிழாக்களுக்கு மட்டும் கொடியேற்றுவதைப் பார்த்திருந்த மக்களுக்கு, இந்தத் தவக்காலக் கொடியேற்றம் ஒரு புதுமை நிகழ்வு. எல்லாருக்கும் பிடித்திருந்தது. பெரும்பாலும் நேர்மறைக் கருத்துகளே வந்தன. ஊதா நிறப் பின்னணியில் மரச்சிலுவை, முள்முடி போன்ற தவக்கால அடையாளங்களும், ‘செபம்-தவம்-தானம்என்ற தவக்கால ஆதாரச் சொற்களும் கொண்டு, 10 அடிக்கு 7 அடி என்ற அளவில் ஒரு பக்கம் மட்டும் பதிப்பிடப்பட்ட கொடியைச் சாம்பல் புதன் என்று ஏற்றி, ஈஸ்டருக்கு முந்தின நாள் இறக்கினோம்.

46 நாள்கள் இந்தக் கொடி விண்ணில் பறந்தது. பங்கு உறுப்பினர்களுக்கு இது தவக்காலத்தின்மனமாற்ற அழைப்புகுறித்த ஒரு தொடர் நினைவூட்டலாகவும், ‘என்ன உங்க கோயில்ல கொடியேற்றி இருக்காங்க? திருவிழாவா?’ என்று கேட்கும் பிற மத நண்பர்களிடம், ‘இல்லை, இது தவக்காலக் கொடி; இந்தக் காலத்தில் நாங்கள் எங்கள் ஆண்டவரின் பாடுகளையும் இறப்பையும் சிறப்பாக நினைவு கூர்கிறோம்என்று நற்செய்தி சொல்ல ஒரு வாய்ப்பாகவும் இது இருந்தது.

பெரும் பொருள்செலவில் கொடிமரம் செய்து, அதை வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி, மற்ற நாள்களில் புறா எச்சங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்காமல், இதுபோன்ற வகையில் அதைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்.

2. தவக்கால மணிக்கட்டுப் பட்டை

இதைச் சென்ற வருடம் அறிமுகப்படுத்தினோம். A lenten wrist band. அமெரிக்காவில் நான் இதுபோல பார்த்திருக்கிறேன். ஊதா நிறத்தில் கயிறு அல்லது இரப்பர் வளையத்தை நாற்பது நாள்களும் மணிக்கட்டில் கட்டியிருப்பார்கள். என் பங்கில் தவக்கால மணிக்கட்டுப் பட்டையை அறிமுகப்படுத்தியபோது இளைஞர்கள், சிறுவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்தேன். பெரியவர்களும் விரும்பி அணிந்தது ஓர் இனிய ஆச்சரியம். குறிப்பாக, பெண்கள்! ஓர் ஒற்றை வளையல்போல! சிலுவை மற்றும் சில தவக்காலச் சொற்களை அதில் பொறித்தோம். S, M, L ஆகிய மூன்று அளவுகளில் செய்து வயதிற்கேற்ப விநியோகம் செய்தோம். ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் ஆர்டர் கொடுத்து, ஒன்று ரூபாய் 10 என விற்றதில் பெரிய நட்டம் இல்லை.

மணிக்கட்டுப் பட்டை பயன்பாட்டில் இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும். பள்ளிக்கூடங்கள் இதை அனுமதிக்க மறுக்கலாம். பள்ளிக்குச் செல்லுமுன் குழந்தைகள் பட்டையைக் கழற்றி வீட்டிலேயே விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்துவது நல்லது. இரண்டாவது, சாதியைக் குறிக்கும் இதுபோன்ற கயிறு கட்டுகளைப் பலர் கையிலும் காலிலும் போட்டுத் திரியும் சூழலில், ‘இதுபோன்ற ஒரு மணிக்கட்டுப் பட்டை தேவையா?’ எனச் சில அருள்பணியாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். தங்களை உயர்வாகவும், மற்றவரைத் தாழ்வாகவும் நிலைநிறுத்த முன்வைக்கப்படும் எல்லா அடையாள அரசியலும் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், தாங்கள் யார்? தங்கள் நம்பிக்கைகளும் பண்பாட்டு விழுமியங்களும் என்ன? என்பதை எந்தவித உயர்வு மனப்பான்மையின்றி, திறந்த மனத்தோடு வெளிப்படுத்தும் அடையாளங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

3. புலம்பல் நடனம்

பெரிய வெள்ளிக்கிழமை அன்று சிலுவைப் பாதையின்போது அன்னை மரியாவின் ஒப்பாரிப் பாடல் பல பங்குகளில் உணர்ச்சிப்பூர்வமாக நிகழ்த்தப்படுகிறது. சோலோ வகை! திறமையான பாடகர், இலேசான விசும்பல் கலந்து பாடும்போது, பல இடங்களில் மக்கள் கண்ணீரோடு அதில் பங்கெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் எங்கள் பங்கில் புலம்பல் பாடலுக்குப் பதிலாக, புலம்பல் நடனத்தை அறிமுகப்படுத்தினோம். இயேசுவின் உடலை அமைதி ஊர்வலமாகக் கொண்டு வந்து, மேடையில் மையமாகக் கிடத்திய பின்பு மக்கள் அனைவரும் அமர, ஆறு சிறுமிகள் கறுப்பு உடை அணிந்து, இயேசுவின் உடலைச் சுற்றி நின்று, ‘கல்வாரிக் குன்றின் மேல்என்ற நெஞ்சை உருக்கும் மலையாளப் பாடலுக்கு மிக மெல்லிய அசைவுகள் கொண்டு நடனம் ஆடினார்கள். கிராமங்களில் இறந்தவர் உடலைச் சுற்றிப் பெண்கள் மாரடித்து அழுவார்களே... ஏறக்குறைய அதன் சாயல் கொண்ட நடனம். நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் நடன அமைப்பாளர். மிகுந்த தயக்கத்துடனேயே இதை அறிமுகம் செய்தேன். கத்தியில் நடப்பது போன்ற விசயம். கொஞ்சம் பிசகினாலும் கூடஎன்னய்யா, ஆண்டவர் உடலைக் கிடத்திவிட்டு கூத்தடிக்கின்றீர்களா?” என்று மக்கள் கேட்டு விடுவார்கள். சரியாக அமைக்கப்பட்டு, மரியாதையுடன் நிகழ்த்தப்படும் புலம்பல் நடனம், பெரிய வெள்ளி வழிபாட்டின் துக்கச் சூழலில் அதன் தீவிரத்தை உயர்த்த உதவும். விரிவான ஆலோசனைக்கும், தயாரிப்புக்கும் பின்னர் அருள்பணியாளர்கள் புலம்பல் நடனத்தைத் தங்கள் பங்குகளில் முயற்சித்துப் பார்க்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)