news-details
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு 25-05-2025) திப 15:1-2,22-29; திவெ 21:10-14,22-23; யோவா 14:23-29

திருப்பலி முன்னுரை

இயேசு தருகின்ற அமைதியில் நிலைத்துக் கலக்கமின்றி வாழ பாஸ்கா கால ஆறாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்று அமைதியைத் தேடி மனித மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. நாட்டிலும் வீட்டிலும் அமைதியின்றி வாழும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த உலகம் தரமுடியாத அமைதியை இயேசு மட்டுமே தர முடியும். அந்த அமைதியைத் தூய ஆவியார் வழியாகவே ஆண்டவர் அனுதினமும் வழங்குகின்றார். தூய ஆவியாரின் குரலுக்குச் செவிகொடுக்கிறவர்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். தூய ஆவியாரின் குரலாகிய மனச்சாட்சிக்குச் செவிகொடுத்து வாழும்போது, நமது உள்ளத்தில் அமைதி நிலைக்கும். நமது உள்ளத்தில் எத்தனையோ ஏக்கங்களை, இன்னல்களை, துயரங்களை, நோய்களைச் சுமந்து இறைவனின் முன் இன்று வந்திருக்கிறோம். சுமையோடு வந்திருக்கும் நம்மைப் பார்த்துகலங்கவேண்டாம், மருள வேண்டாம், நான் உங்களோடு இருக்கிறேன்என்று ஆண்டவர் கூறுகின்றார். நம்முடைய வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவரை மட்டுமே நம்பியிருப்போம். கலக்கமின்றி, கவலையின்றி அமைதியுடன் ஆண்டவனின் கரம் பற்றி வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்கள் உண்மையானதைப் பற்றியே பேசுவார்கள்; மக்களை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்க மாட்டார்கள்; பெரும் சுமைகளை மக்கள்மேல் சுமத்தமாட்டார்கள்; தூய ஆவியாரின் துணையோடு தொடக்க காலத்தில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். இயேசுவின் சீடர்களாகிய நாமும் அமைதியை விதைப்பவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் அனைத்தையும் செய்யவல்ல ஆற்றலை நமக்குத் தருபவர். அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய ஞானத்தைத் தருபவர்; நல்லவைகளை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நம் வாழ்க்கைக்குக் கிறிஸ்துவே ஒளியாகவும் வழியாகவும் உள்ளார். ஒளியின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது சீடத்துவப் பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்கள், அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பயணிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! நாங்கள் எங்கள் ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் இயேசுவைப் பற்றிக் கொண்டு வாழ தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஆண்டவரே! உம் மகன்மீது கொண்டுள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் இங்குக் கூடிவந்துள்ள அனைவரும் அழிந்து போகின்ற செல்வங்களை நோக்கி ஓடாமல், இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்களை ஒவ்வொரு நாளும் திடப்படுத்தும் ஆண்டவரேநாங்கள் உள்ளம் கலங்காமலும் மருளாமலும் மூவொரு இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழவும், தூய ஆவியின் ஆலயமாகிய எமது உள்ளத்தில் அமைதியை நிரப்பிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.