news-details
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தை பிரான்சிஸ் விளிம்புகளின் வித்தகர்!

மையங்கள் கவர்ச்சிகரமானவை. சாதாரண மனிதர்களின் கவனக்குவியலை எளிதாக ஈர்ப்பவை. சுயமதிப்பையும் மாண்பையும் வெளியில் தேடுபவர்கள் தங்கள் கவனத்தையும் பயணத்தையும் மையம் நோக்கியே திருப்புவர். மையம்தான் இவர்களின் சேருமிடம். மையத்தைத் துறந்தால், தாங்கள் மறைந்துவிடுவோம், மாயமாகிவிடுவோம் என அஞ்சி, மையத்தைப் பற்றுவதையும், பற்றியிருப்பதையுமே தங்கள் குறிக்கோளாகக் கொள்வர். மையத்தில் தங்களை மறைத்துக்கொண்டு, தங்கள் சுயமதிப்பின் கனத்தைச் சார்ந்திருக்கும் இடங்களிலும், பதவிகளிலும் தேடுவர். ஆனால், மானிட மாண்பின் வேர்களை அறிந்தவர்கள், அகத்திலே தங்கள் கவனத்தைச் செலுத்துவர். அசாதாரணமான இந்த மனிதர்களுக்கு மையம் என்பது வாழ்வின் மையமல்ல; ஏனென்றால், இவர்களின் மாண்பின் மகத்துவம் இடம் சார்ந்ததல்ல; மாறாக, ஆளுமை சார்ந்தது. அப்படி மானிட மாண்பின் ஊற்று, அவர்கள் இறை உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதிலே என்பதை நன்கறிந்தமக்களின் திருத்தந்தைதான்ஆடுகளாகிய நம்மைத் தவிக்கவிட்டுப் பிரிந்த நமது தலைமை ஆயர் பிரான்சிஸ்.

இவரது அடையாளமும் ஆளுமையும் மதிப்பும் இடம் சார்ந்ததோ, பதவி சார்ந்ததோ அல்ல; அதனால்தான் இவரது வாழ்வியலும் மையங்களைத் தாண்டி, விளிம்புகளை நோக்கியதானது. மையம் என்பது இவரது விளிம்புகளை நோக்கிய பயணத்தின் புறப்பாடு; வெற்று தங்குமிடமில்லை. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைவிளிம்புகளின் வித்தகர்என்றழைப்பது பொருத்தமே. ‘விளிம்புகள்திருத்தந்தையின் சிந்தனை, சொல், செயல்களின் மையம் மட்டுமல்ல; மாறாக, அவரது இவ்வுலகப் பயணமே விளிம்புகள். மைய வாழ்வுதான் என்பதைப் பின்வரும் அவரது சான்று வாழ்வின் பரிமாணங்கள் வழியாக நன்கறியலாம்.

புத்தாக்கத் தலைமைத்துவம்

திருத்தந்தை பிரான்சிஸ் தன்னை வெறும் திருத்தந்தையாக மட்டும் கருதவில்லை; தான் கிறிஸ்துவின் சீடர் என்பதை அடிக்கடி நினைவு கூர்ந்தார். சிலுவையோடு பயணிப்பதையும் சிலுவையோடு கட்டியெழுப்புவதையும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவைப் போதிப்பதையும் உண்மையான சீடத்துவத்துவம் என்றார். தன்னுடைய தலைமைத்துவத்தை, இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளைத் தாழ்ச்சியோடு பிரதிபலிக்கின்ற சுயதுறப்புப் பணிக்கான அழைப்பு என்றார். அதனால்தான்பிரான்சிஸ்என்பதைத் தனது பெயராகத் தேர்ந்ததோடு, எளிமை மூலமாக எழுச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவராக வாழ்ந்தார். அவரின் தலைமைத்துவத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், தொடர்ந்து நம்மை வியக்க வைக்கும் ஒரு புத்தாக்கத் தலை மைத்துவத்தை வாழ்வாக்கினார். எல்லைகளை நோக்கிய இவரது பார்வையும், இதயத்திலிருந்து தோன்றிய வார்த்தைகளும் இவரை மானிடர் மையத் தலைவராக வாழ வைத்தன.

விளிம்புகளை நோக்கி...

மருத்துவராக வேண்டும் என்ற தொடக்க கால விருப்பை உதறாமல், ஆன்மாக்களைக் குணமாக்கும் மருத்துவராகத் தன்னைச் செதுக்கினார். “நோயற்றவர்க்கு அல்ல; நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை (மாற் 2:17) என்பதை உணர்ந்த திருத்தந்தை, மானிட சமூகத்தில் சிதைந்து, உருவமற்று, முகவரியற்று கவனம் பெறாத அனைவரையும் திரு அவையின் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவர முயன்றார். தீண்டத்தகாதோரைத் தீண்டுவதையும், புறக்கணிக்கப்பட்டோரை உள்ளடக்குவதையும் விரும்பிச் செய்தார். சமூகத்தின் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு, ஆன்மிக, சமய, அறநெறி, நிலவியல் விளிம்பிலுள்ளவர்களுக்கு விலாசமும் விடியலும் கொடுத்து, அவர்களையும் கிறிஸ்துவில் ஒளிரச்செய்ய தனது வாழ்வின் எல்லைவரை அவர்களை நோக்கிய தேடலையும் பயணத்தையும் அரவணைப்பையும் தொடர்ந்தார். இவரைவிளிம்புகளின் திருத்தந்தைஎன அழைப்பதில் வியப்பேதுமில்லை.

மானிட மாண்பு

அனைவரும் ஒரே இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட சம மாண்புடையவர்கள் என்ற உண்மையை மதிக்காமையைச் சாடினார். ஏற்றத்தாழ்வே சமூகநோயின் ஆணிவேர் என்றதோடு, அனைவரும் ஒரே உடலாக இருக்கிறோம் என்பதை உரக்கக் கூறினார். இந்த உறுதிப்பாடுதான், நரம்பு நார்க்கட்டியால் பாதிக்கப்பட்ட, உருக்குலைந்திருந்த வினிசியோவைக் கட்டி முத்தமிடச் செய்தது. மேலும், ஒருவரின் வெளி அடையாளங்கள் நிரந்தரமற்றவை; மானிடர் ஒவ்வொருவரும் புனிதமானவர், அன்பிற்குரியர்; அவர்களில் இயேசுவைக் காண அறிவுறுத்தினார்.

நிலவியல் விளிம்புகள்

விளிம்புகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு திரு அவைக்குத் தொடர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வழக்கமாக அடிக்கடிச் சந்திக்காத நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஈராக்கிற்குச் சென்ற (2021) முதல் திருத்தந்தை இவரே. பொறுப்பேற்ற ஒருசில மாதங்களிலேயே (2013) லம்பேடுசா என்ற இத்தாலியத் தீவைப் பார்வையிட்டார். ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்பவர்களின் தலையாயப் புகலிடமான இந்த இடத்திற்கான பயணம், புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கான இவரது நிலைப்பாட்டை வெள்ளிடைமலையாக்கியது. இங்குதான் உலகமயமாகும் கண்டுகொள்ளாமையைக் கடுமையாகச் சாடினார். மேலும், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பயணங்கள், உலகின் விளிம்புகளாகக் கருப்படும் மக்களுக்கான இவரது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகள்.

ஆடுகளின் வாடை

காணாமல்போன ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல, சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டக் காயப்பட்டோரைத் தேடிச்சென்று, அவர்களின் காயங்களுக்கு மருந்திடுவதே திரு அவையில் ஆயர்களின் பணி என்பதை அடிக்கடி நினைவூட்டினார். ‘விமானத்தளஆயர்களாக இல்லாமல், சேரிப்புறங்களுக்குச் சென்றுஆடுகளின் வாடையைஅறிந்து, அவர்களின் துயர் போக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல், விளிம்பு நிலையினருக்கான அவரது நிலைப்பாட்டின் மற்றொரு சான்று. துறவிகள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்றார்.

நம்பிக்கையாளர்களின் முதன்மை

பெரும்பான்மையினரான கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களே திரு அவையின் மையம் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். குடும்பம் மற்றும் சமூகத்தின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர இவர்கள் அழைக்கப்படுகின்ற னர். அவர்களோடு உடன் நடந்து, ஊக்கமூட்டி, உதவிசெய்து, அவர்களின் முயற்சியிலும் முன்னெடுப்புகளிலும் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அளித்து, இவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது, அருள்பொழிவு செய்யப்பட்ட சிறுபான்மையினரின் கடமைஆடுகளின்றி ஆயனில்லை; ஆடுகளுக்காக ஆடுகளோடிருந்தே ஆயன் மேய்ப்புப் பணியாற்றுகிறார்.

ஏழைகளுக்கான திரு அவை

ஏழையான கிறிஸ்துவோடும், நற்செய்தியின் தூதுவரான புனித பிரான்சிஸ் அசிசியாரோடும் திருத்தந்தை தன்னை அடையாளப்படுத்தி ஏழையான, ஏழைகளுக்கான திரு அவையே தனது கனவு (2013) என்றார். ஏழைகள் பிறரன்பின் பயனாளிகளல்ல; மாறாக, கிறித்தவ அகமகிழ்வின் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள். எனவே, நமது பாதுகாப்பான சூழல்களிலிருந்து விளிம்புகளை நோக்கிப் பயணித்து, நோயுற்ற குழந்தைகளைப் பேணும் அன்புத்தாய் போல, நாம் ஓரங்கட்டப்பட்ட ஏழைகளுக்காகப் பணியாற்ற வேண்டும். இதுவே காலஞ்சென்ற நமது காவியத் திருத்தந்தைக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள நினைவஞ்சலி!