news-details
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு; 11-05-2025) திப 13:14,43-52; திவெ 7:9,14-17; யோவா 10:27-30

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்று அழைக்கின்றோம்நல்ல ஆயரான இயேசுவைப் பின்பற்றி வாழ திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவே நல்ல ஆயர்! நம் ஒவ்வொருவருக்கும் முன்சென்று பாதுகாக்கின்றார்; பராமரிக்கின்றார்; வழிநடத்துகின்றார்; நாம் அவரை விட்டுப் பிரிந்து சென்றாலும், தேடி வந்து நம்மைத் தம்முடைய மந்தையில் சேர்த்து அணைத்துக்கொள்கின்றார்; தமது வார்த்தையால் நமக்கு அன்றாடம் இளைப்பாறுதலைத் தருகின்றார்; சோர்ந்த  நேரங்களில் நமக்குப் புத்துயிர் அளிக்கின்றார். தம்முடைய உயிர்ப்பின் வழியாகப் புதுவாழ்வையும் நமக்குக் கொடுக்கின்றார். இயேசுவை நம்முடைய வாழ்வில் ஆயராகக் கொண்டு வாழும் போது எந்தக் குறையும் இருக்காது. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை இல்லைஎன்ற திருப்பாடல் வரிகளை இதயத்தில் பதித்து, நல்லாயர்  இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவர் பின் செல்வோம். கீழ்ப்படிதலுள்ள நல்ல ஆடுகளாக நாம் மாறுவோம்நம்முடைய நற்செயல்கள் வழியாக நமது குடும்பத்திற்கும் பங்கிற்கும் சமூகத்திற்கும் நல்ல ஆயராக நாம் மாறிட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உயிர்த்த இயேசுவின் வல்லமையைப் பெற்ற சீடர்கள் இயேசுவைப் பற்றி அறிவிப்பதையே தங்களின் ஏக்கமாகவும் நோக்கமாகவும் கொண்டிருந்தார்கள். இயேசுவின் வார்த்தையை அறிவிப்பதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். கடவுளின் வார்த்தையின் மகத்துவத்தை அனைவருக்கும் அறிவிக்கிறார்கள். கடவுளின் வார்த்தையை வாசிப்பதில், வாழ்வதில் ஆர்வம் கொண்டு வாழ நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசகம் முன்னுரை

நல்ல ஆயர் இயேசு தமது உயிரைக் கொடுத்து புதிய வாழ்வைத் தந்துள்ளார். நாம் அனைவரும் இறைவனை அறிந்து அன்பு செய்யும் ஆற்றலைப் பெற தூய ஆவியைத் தந்து நாளும் நம்மைக் காத்து வருகின்றார். வாழ்வு தருகின்ற நீரூற்றான வார்த்தையின் வடிவில் வழிநடத்தி வருகின்ற நல்ஆயரான இயேசுவில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயர் நானேஎன்று மொழிந்த எம் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள், நல்ல ஆயரான உம்மை அனைத்து மக்களும் அறிந்திட இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் நீரே துணை நின்று காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆயரே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு நல்ல ஆயனாக இருந்து வழிகாட்டவும், இறைவார்த்தையின் வழியாக நீர் எமக்குக் கூறும் அறிவுரைகளின்படி நாங்கள் எம் வாழ்வை அமைத்துக்கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மை வழிநடத்தும் ஆயரான இறைவா! எமது பங்கில் உள்ள அனைத்துக்  குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உம்மைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நலம் தரும் நல்லாயரே இறைவா! பல்வேறு நோய்களால் துன்பப்படும் அனைவரும் உமது இரக்கத்தால் முழுமையான விடுதலை பெற்று மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.