திருப்பலி முன்னுரை
இன்று
ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்றைய விழா நற்செய்தியைப் பறைசாற்றவும், கடவுளின் சாட்சிகளாய் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு நலம் கொடுக்கும் நண்பராகவும், துன்பம் போக்கும் தூயவராகவும், ஏழைகளின் தஞ்சமாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுப்பவராகவும் விளங்கினார். தாம் முன்னுரைத்தவாறு உயிர்த்தெழுந்து நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றம் நாம் மண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட அன்பு, மன்னிப்பு, நம்பிக்கை, உடனிருப்பு, விட்டுக் கொடுத்தல், மென்மையான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற விண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ அழைப்பு விடுக்கின்றது. நாமே நடமாடும் நற்செய்தியாக
மாறி இயேசுவை வாழ்க்கையால் அறிவிப்போம். எத்தகைய நிலையிலும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்து, அனைத்து மாந்தரையும் இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைச் சுவைக்கச் செய்வோம். விண்ணகப் பயணிகளாகிய நாம் சந்திக்கின்ற துன்ப துயரங்கள், இடையூறுகள், சவால்கள் போன்றவற்றில் தேங்கிவிடாமல், இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் முறியடித்து இயேசுவோடு,
இயேசுவில் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில் .
முதல் வாசகம்
முன்னுரை
தம்மோடு
இருக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு சீடர்களை அழைத்தார். சீடர்களுக்குத் தமது வாழ்க்கையால் போதித்தார். உயிர்த்தபின் பலமுறை சீடர்களுக்குத் தோன்றித் திடமளித்தார். சீடர்களைப் பக்குவமாய் வழிநடத்திப் பலன் கொடுக்கச் செய்த இறைவன் நம்மையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
மனச்சாட்சியே
மனிதர்களின் உண்மையான நீதிமன்றம். மனச்சான்று தூய ஆவி வாழும் ஆலயம். உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்கும்போது ஆண்டவரை எளிதில் அணுகிச்செல்ல முடியும். ‘நான் உங்களோடு இருப்பேன்’
என்று வாக்களித்த இறைவன் நம்பிக்கைக்கு உரியவர். வாழ்நாளெல்லாம் இறைநம்பிக்கையில் வேரூன்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘நீங்கள் போய்
எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்’ என்று
மொழிந்த ஆண்டவரே! உமது சீடத்துவப் பணிக்காக நீர் அழைத்த எம் திரு அவைத் தலைவர்கள் உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழத் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘உலகம் முடியும்வரை
உங்களோடு இருப்பேன்’
என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எப்பொழுதும் உம்மை விட்டு நீங்காது, உம்மில் உம்மோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நீங்கள் என்
சாட்சிகள்’ என்று
மொழிந்த ஆண்டவரே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்பின், மகிழ்ச்சியின், உறவின், சமத்துவத்தின் திருப்பயணிகளாய் வாழ்ந்து, இறுதிவரை உறுதியுடன் உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்மோடு
வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் நல்ல முறையில் படித்து, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றியைக் கண்டிட தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.