இன்று நம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய உடனடிப் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமான ஒன்று பணவீக்கம். இப்பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் தாண்டி, நம்முடைய தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கின்றது. ஏனெனில், நம்முடைய வருமானமே நம்முடைய வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கின்றது. பணவீக்கத்தால் விலைவாசி அதிகரிக்கின்றது. இதனால், நம்முடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மனக் கலக்கம் அடைகின்றோம். ஆனால், நம்முடைய இம் மனக்கலக்கத்திற்குப் பின்பு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களும் வரலாறும் உள்ளன என்றால் அது மிகையாகாது.
ஆதி
மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடித் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். நாகரிக மலர்ச்சியில், இன்று நாம் பணத்தை வேட்டையாடி நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். ஆனால், உண்மையில், இப்பணத்தை அதிகளவு குவித்து வைத்திருக்கும் பெரும் முதலாளிகள் ஏழை, எளியோரின் உழைப்பை வேட்டையாடுகின்றனர்; சந்தையை முன்னிலைப்படுத்துகின்றனர்.
இதனால் மனித மனங்களுக்கான மாண்பு சிதைக்கப்படுகின்றது.
பெரு
முதலாளிகளால் ஆட்டிப்படைக்கப்படும் சந்தையைப் பொருத்தே இவ்வுலகமும், அதனுடைய பொருளாதாரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமக்குத் தேவையா? இல்லையா? என்று யோசிக்காமல், யாரோ ஒருவர் உற்பத்தி செய்யும் பொருளை வாங்கிக் குவிப்பதற்காக நம்முடைய சுயத்தை இழந்து மாய உலகில் வாழ்கின்றோம். நாம் விரும்பும் ஒரு பொருளை வாங்க முடியவில்லை என்றால், அதை நம்முடைய பெரும் இழப்பாகக் கருதவைக்கும் அளவிற்குப் பொருளாதார உலகம், நம்முடைய தனிமனித வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.
தனிப்பட்ட
ஒரு மனிதனின் வாழ்க்கை முறையானது அம்மனிதனின் இனம், மதம், மொழி மற்றும் வாழும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. இருப்பினும், இக்காரணிகள் அனைத்திற்கும் தொடக்கமாக நம்முடைய பொருளாதாரம் அமைகின்றது என்று புரட்சியின் புதல்வன் காரல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். பொருளாதார அடிக்கல்லின் மீதே சமூகத்தின் பிற தூண்கள் ஊன்றப்பட்டுள்ளன என்கிறார். எனவே, ஒரு சமூகத்தின் நடைமுறைகள், கலாச்சார மாற்றங்கள், தேவைகள் என அனைத்தும் அச்சமூகத்தின்
பொருளாதார நிலையை மையமாக வைத்துதான் நகர்கின்றது. சுருக்கமாகக் கூறின், இச்சமூகத்தில் பணம்தான் அனைத்தையும் முடிவு செய்கின்றது. இக் கூற்றை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடினமாக இருந்தாலும், இக்காலச் சூழலில் இதுதான் உண்மை.
தொடக்கத்தில்
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற மனிதன் வாணிபம் புரிந்தான்; இன்று பொருள்களை
வாங்கிக் குவிப்பதற்காகவே வாழும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். நம்முடைய ஆசைகளை வரிசையாகப் பட்டியலிட்டால், அவற்றில் ‘வாங்க வேண்டிய பொருள்களின்’ பட்டியலே
மிகுந்திருக்கும். ‘வாங்க வேண்டும்’
என்ற ஆவலில் வாழ்வை இழந்து, வாழ்வின் சாரம் புரியாமல் ‘எதற்காக உழைக்கின்றோம்? யாருக்காக உழைக்கின்றோம்?’ என்று தெரியாமல் நம் வாழ்வை நாமே கடினப்படுத்திக் கொள்கின்றோம். எனவே, பொருளாதார உலகுக்கும், நம்முடைய வாழ்வுக்கும் உள்ள பிணைப்பை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பொருள்கள்
மற்றும் சேவைகளின் தேவையும், அதற்கான விலையும் அதிகரிக்கும்பொழுது பணவீக்கம் ஏற்படுகின்றது. 2024-ஆம் ஆண்டின் கணக்கின்படி உலகளவில் 5.8% பணவீக்கமும்,
இந்தியாவில் 5.22% பணவீக்கமும்
உள்ளது. இப் பணவீக்கமானது, பெரும் முதலாளிகளின் தந்திரத்தாலும், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் உருவாக்கப்படுகின்றது. இவர்களால் உருவாக்கப்பட்ட பணவீக்கத்தின் சுமையை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள்.
முதலாளிகள்
தங்கள் பணத்தைப் பெருமளவு பெருக்க நினைப்பதாலும், அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த தன்னுடைய தவறுகளை மறைக்கப் பணத்தை அதிகமாக அச்சிடுவதாலும் பணவீக்கம் ஏற்படுகின்றது. ஏதேனும் ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும்பொழுது, அப்பொருளின் விலை அதிகரிக்கின்றது. இதனால் அப்பொருளினை வாங்கும் திறன் மக்களிடத்தில் குறைகின்றது. இந்த மாற்றம் இயற்கையாக நடைபெறுவதில்லை; செயற்கையாக
ஏற்படுத்தப்படுகின்றது.
மக்களின்
தேவைகளை விளம்பரங்கள் மூலம் அதிகரிக்கின்றனர். மக்கள் அந்தப் பொருளை வாங்கும்பொழுது, அப்பொருளைச் சந்தைப்படுத்தாமல் மறைத்து வைத்து, அதனுடைய விலையை அதிகரிக்கச் செய்கின்றனர். இதனால் மக்கள் அப்பொருளை அத்தியாவசியப் பொருளாகக் கருதி, அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இவ்வாறு பணவீக்கமானது பெரும் முதலாளிகளால் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. இந்தச் செயற்கையான பணவீக்கத்திற்குச் சில நேரங்களில் அரசும் துணை நிற்கின்றது. அரசு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், பெரும் முதலாளிகளை மகிழ்விப்பதற்காகப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும்பொழுதும் அரசு இழப்பைச் சந்திக்கின்றது. இந்த இழப்பின் பாரத்தையும் வரி என்ற பெயரில் மக்கள்தான் சுமக்கின்றார்கள்.
இப்படிப்
பணவீக்கம் அதிகரிப்பதற்குப் பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளைத் தாண்டி நம்முடைய சமூக நடைமுறைகளும் ஒரு காரணமாக அமைகின்றது. இதன் மூலமாகவே இந்தப் பணவீக்கம் நமக்கு மன ஏக்கத்தைத் தருகின்றது.
மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் ஏற்றத்தாழ்வுகள் என்பது அவனை ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டது. மனிதன் தன்னுடைய பிறப்பின் அடையாளத்தை மாற்ற முடியாது. எனவே, தன்னுடைய பொருளாதார உயர்வின் மூலம் சமூக மதிப்பைப் பெறுகின்றான். இதைச் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாகப் பாமரனுக்கும்-பணக்காரனுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துகின்றனர்; பொருளாதாரச் சமத்துவமின்மையை உருவாக்குகின்றனர்.
இவ்வுலகின்
10% மக்கள்,
76% வளங்களைத்
தங்கள் வசம் வைத்துள்ளனர். அதே வேளையில், இவ்வுலகின் 50% ஏழைகள்,
மொத்தமாக வெறும் 2% வளங்களைத்
தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வானது பணத்துடனும் பகட்டுடனும் வாழும் வாழ்வைச் சிறந்த வாழ்வாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை இழிநிலையாகவும் உருவகப்படுத்துகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் சாதியமும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று கலந்து நிற்கின்றது. இது ‘உயர்ந்தோர்-தாழ்ந்தோர்’ என்ற
மனநிலையை உருவாக்குகிறது! இது முற்றிலும் தவறானது. இதுபோன்று சமூகத்தில் ஏற்றப்பட்டுள்ள மாயவலைப் பின்னல்களை மக்களை நசுக்க முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பணம்
படைத்தவருக்கு ஒரு கல்வி, அற்றவருக்கு ஒரு கல்வி. இதுபோன்று மருத்துவம், பொழுதுபோக்கு என்ற அனைத்துத் துறைகளிலும் பணமற்றவருக்கு இரண்டாந்தரப் பொருள்களும் சேவைகளுமே கிடைக்கின்றது. இந்த மாயவலையில் சிக்கிக்கொண்டு, பணவீக்கத்தால் வதைப்படும் மனிதர்கள், தங்கள் வாழ்வின் நிலையை எண்ணி ஏக்கம் அடைகின்றனர். இதற்கும் மேலாக, ‘Elite and Premium’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, பொய்யான ஒரு சமூக உயர்வு நிலையை அடைந்து விட்டதாக இன்று சில சிறு பணக்காரர்களும், நடுத்தர வகுப்பினரும் பெருமிதம் அடைகின்றனர். இவையெல்லாம், மதிப்பற்ற ஒரு பொருளை, ‘branded’ என்ற
பெயரில் அதிக விலைக்கு விற்பதற்கான வியாபார யுக்தி என்று அறிந்தும் நாம் அவற்றிற்குப் பலியாகின்றோம்.
இப்பணவீக்கத்திலிருந்து மனஏக்கத்தைக்
களைவதற்கான நடவடிக்கைகளை நாம் ஒரு சமூகப் புரட்சியாக மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்குப் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் தனிமனித மாற்றத்தின் மூலமாகவே தீர்வு காணமுடியும். பொருளாதார அளவில் சுய தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால்
வேலைவாய்ப்பின்மை குறைந்து, மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
அரசியல்
அளவில் அனைத்துச் சாராருக்குமான சரியான பொருளாதாரக் கொள்கைகளைத் தீட்ட வேண்டும். ஜிம்பாவே, வெனிசுலா போன்ற நாடுகளைப்போல பணத்தை மேலும் அச்சிட்டுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யாமல், ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். நாட்டைத் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக அளவில் நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் போலியானவை என்று உணர்ந்து, அனைவரும் சமமாகக் கருத வேண்டும். ‘எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’
என்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பொதுத்துறை நிறுவனங்களால் அதிகக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை உணர்ந்து, நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ்வதன் மூலம் பணவீக்கத்தையும், நம்முடைய மனஏக்கத்தையும் தவிர்க்கலாம்.