13. வார்த்தை மனுவுருவான மறையுண்மையில் நிறைவேறும் எசாயாவின் இறைவாக்கு (எசா 7:14). (Isaiah’s prophecy fulfilled in incarnation)
1. பழைய ஏற்பாட்டில் மரியாவைப் பற்றிச் சிந்திக்கையில், இரண்டாம் வத்திக்கான் சங்கமானது (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55) மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் தொடக்கக் காலக் கிறித்தவர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்த இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டைச் சுட்டிக்காட்டுகிறது: “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்” (எசா 7:14).
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பின் பொழுது, “அவர் கருத்தரித்திருப்பது தூய ஆவியாரின் வல்லமையால்தான்” என்று கூறி
மரியாவை அவரின் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு யோசேப்புவை அழைத்த வானதூதரின் வார்த்தைகளில் அந்த இறைவாக்குக்கு நற்செய்தியாளர் மத்தேயு கிறித்தியல் மற்றும் மரியியல் அர்த்தத்தைக் கொடுக்கின்றார். உண்மையில், “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று
இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது
பொருள் (மத் 1: 22-23) என்பதையும் அவர் சேர்த்துக் கூறுகின்றார்.
2. எபிரேய
திருவிவிலிய மூலத்தில் இந்த இறைவாக்கானது இம்மானுவேலின் கன்னியிடமிருந்தான பிறப்புப் பற்றித் தெளிவாக முன்னறிவிக்கவில்லை. உண்மையில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற
‘almah’ என்ற
எபிரேயச் சொல்லானது ‘ஒரு கன்னி’
(virgin) என்ற பொருளில் இல்லாமல், வெறுமனே ஓர் இளம் பெண்ணைத்தான் குறிக்கின்றது. மேலும், யூத மரபானது ‘என்றென்றைக்கும் கன்னி’ என்ற கருத்தை (idea of perpetual virginity) ஏற்றுக்கொள்ளவில்லை
மற்றும் கன்னித்தாய்மை (idea of virginal motherhood) என்ற
கருத்தையும் அந்தக் கலாச்சாரம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை.
ஆண்டவர்தாமே உங்களுக்கு
ஓர்
அடையாளத்தைத்
தருவார்
எவ்வாறாயினும்
கிரேக்க மரபில் ‘almah’ என்ற
இந்த எபிரேயச் சொல்லானது ‘parthenos’அதாவது ‘virgin’ என்று
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு பண்புக் கூறாகவே எண்ணத் தோன்றுகின்ற இந்நிகழ்வில், மெசியாவின் வியக்கத்தக்க பிறப்பைப் புரிந்துகொள்வதற்கு நம்மைத் தயாரிப்பதற்காக எசாயாவின் வார்த்தைகளுக்குத் தூய ஆவியாரினால் வழங்கப்பட்டதொரு வியக்கத்தக்க விளக்கமளிக்கின்ற
நிகழ்வாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், ‘கன்னி’ என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பானது, வழக்கத்துக்கு மாறானதொரு கருத்தரித்தலின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் வழியாக, எசாயாவின் நூலானது கன்னி கருத்தரித்தலின் அறிவிப்பிற்குத் தயாரிக்கின்றது; அதனை ஒரு தெய்வீக அடையாளமாகக் காட்டுகின்றது. இக்காலத்தில் ஓர் இளம்பெண் தன் கணவனுடன் இணைந்த பிறகு ஒரு மகனைக் கருத்தரிப்பது என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல; இருப்பினும், எசாயாவின் இறைவாக்கானது கணவனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அப்படியானால்,
இவ்வகையான முன்வரைவானது பின்னர் கிரேக்க மூலத்தில் கொடுக்கப்பட்ட பொருள் விளக்கத்தைப் (interpretation) பரிந்துரைத்தது.
3. எசாயாவின்
இறைவாக்கானது (எசா 7:14); அதன் உண்மையான சூழலில் அண்டை நாட்டு மன்னர்களின் படையெடுப்பினால் அச்சுறுத்தப்பட்டு, அசீரியாவிடமிருந்து தனது மற்றும் தனது நாட்டின் பாதுகாப்பைத் தேடிய ஆகாசு மன்னனின் நம்பிக்கை குறைவிற்கானதோர் இறைப்பதிலாக இருந்தது. அவனது நம்பிக்கையைக் கடவுளில் மட்டுமே வைக்கவும், அசீரியர்களின் அபாயகரமான தலையீட்டை
மறுக்கவும் அவனை அறிவுறுத்தி, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதற்கு கடவுள்
சார்பாக எசாயா இறைவாக்கினர் அவனைப் பின்வரும் வார்த்தைகளால் அழைக்கிறார்: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்.” மனிதனின் உதவியில் அவனது விடுதலையைத் தேடுவதற்கு விரும்பி அந்த அரசர் கடவுளிடம்
ஓர் அடையாளத்தைக் கேட்க மறுக்கின்றபொழுது, இறைவாக்கினர் நன்கு அறியப்பட்ட இந்த முன்னறிவிப்பைச் செய்கிறார்: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? ஏன் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடுவார்” (எசா
7:14).
இம்மானுவேலின்
அடையாளமான ‘கடவுள் நம்மோடு’ என்ற அறிவிப்பு, வரலாற்றில் கடவுளின் உடனிருத்தலின் வாக்குறுதியைக் குறிக்கிறது. இது வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளிற்கு முழு அர்த்தம் பெறவிருக்கின்ற நிகழ்வு வழியாக அதன் முழு அர்த்தத்தைக் காணும்.
4. இம்மானுவேலின்
அற்புதமான பிறப்பின் அறிவிப்பில், கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் அறிகுறியானது, அவளது மகனில் நடந்தே தீர வேண்டியதோடு, தாயையும் தொடர்புபடுத்தும் நோக்கத்தைக் காட்டுகிறது. ஒரு
மாதிரி அரசைக் கட்டியெழுப்புவதற்காக, அதாவது மெசியாவின் அரசை (messianic kingdom) ஓர் அரசர்
குறித்து வைக்கப்படுகிறார். மேலும், பெண்ணின் பங்கை எடுத்துக்காட்டும் சிறப்புமிக்க இறைத் திட்டத்திற்கானதொரு பார்வையையும் இது வழங்குகிறது.
உண்மையில்
அந்த அடையாளமானது குழந்தையை மட்டுமல்ல; மாறாக, பின்னாளில் அந்தப் பிறப்பில் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை நிறைந்த நிகழ்வாகிய வியக்கத்தக்க அந்தக் கருத்தரிப்பானது, தாயின் மிக முக்கியமானதொரு பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இம்மானுவேல்
பற்றிய முன்னறிப்பானது, சாமுவேல் இரண்டாவது புத்தகத்தில் நாம் வாசிக்கின்றவாறு, தாவீது அரசருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பின்புலத்திலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கு அரசரிடம் அவரின்
சந்ததிகளுக்கான கடவுளின் இரக்கத்தை இறைவாக்கினர்
நாத்தான் பின்வரும் வார்த்தைகளில் உறுதியளிக்கிறார்: “எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்”
(2சாமு 7:13-14).
தாவீது
குடும்பத்திலிருந்து கடவுளின் மகனைப் பிறக்கச் செய்ததன் வழியாக, அதன் முழுமையான மற்றும் உண்மையான அர்த்தத்தைத் தர புதிய ஏற்பாட்டில்
கடவுள் தாவீதின் வழிமரபிடம் ஒரு
தந்தைக்குரிய பங்கை ஆற்றுவதற்கு விரும்புகிறார் (ஒப்பிடுக. உரோ 1:3).
5. இதே
எசாயா இறைவாக்கினர் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றுமோர் ஏட்டில், வழக்கத்திற்கு மாறான இம்மானுவேலினுடைய பிறப்பின் இயல்பை உறுதி செய்கின்றார். இதோ அவரின் வார்த்தைகள்: “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்” (எசா
9:6). இவ்வாறாக, இறைவாக்கினர் இந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டிருந்த வெவ்வேறு பெயர்களில், அந்தக் குழந்தையின் அரசருக்குரிய பணிகளைப் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்: ஞானம், வலிமை, தந்தைக்குரிய அன்பு மற்றும் சமாதானம் செய்தல். இங்குத் தாயானவள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மெசியாவின் அரசில் மக்கள் நம்பக்கூடிய அனைத்தையும் கொண்டுவரக்கூடிய மகனை உயர்த்தியிருப்பதென்பது அவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்த பெண்ணிலும் பிரதிபலிக்கப்படுகின்றது.
6. இறைவாக்கினர்
மீக்காவின் நன்கு அறியப்பட்டதோர் இறைவாக்கும் இம்மானுவேலின் பிறப்பை மறைமுகமாகக் குறிப்பிடுகின்றது. இறைவாக்கினர் மீக்கா இவ்வாறு கூறுகிறார்: “நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக்காலமாய் உள்ளதாகும்” (மீக்
5:2-3). இந்த வார்த்தைகள் மகிழ்ச்சி மற்றும் மீட்பைக் கொண்டு வருகின்ற வியக்கத்தக்க நிகழ்வு வழியாக நினைவுகூரப்படுகின்ற மற்றும் பெருமைப்படுத்தப்படுகின்ற அந்தத் தாயில், மரியாவின் பங்கை மறுபடியும் கோடிட்டுக் காட்டி, மெசியா
பற்றிய நம்பிக்கை நிறைந்ததொரு பிறப்பின் எதிர்பார்ப்பை மீண்டும் எதிரொலிக்கின்றன.
முன்னறிவிப்பானது
கன்னித்தாய்மையின்
வெளிப்பாட்டிற்குத்
தயாரிக்கின்றது
7. மரியாவின்
கன்னித்தாய்மையானது பொதுவாக
ஏழை எளியவர்களுக்கான கடவுளின் தயவினால் ஏற்படுத்தப்பட்டது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55).
அவர்களின்
முழு நம்பிக்கையையும் ஆண்டவரிடத்தில் வைக்கக்கூடிய அவர்களது மனநிலையினால், அவர்கள் மரியாவின் கன்னிமையின்
ஆழமான அர்த்தத்தை முன்கூட்டியே அறிந்திருந்தனர். மனிதத் தாய்மையின் மகத்துவத்தை நிராகரித்து, அவர் அவரின் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளத்தையும் கடவுளிடமிருந்து
எதிர்நோக்கியிருந்தார்.
ஆகையால்,
பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட கன்னித் தாய்மையின் முறையானதோர் அறிவிப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு (எசா 7:14) இந்த மறையுண்மைக்கான
வெளிப்பாட்டிற்குத் தயாரிக்கின்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியாக்கத்திலும் இவ்வாறே கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட முன்னறிவிப்பை மேற்கோள்காட்டி, மரியாவின் கன்னிக் கருவறையில் (in Mary’s virginal womb) இயேசுவின்
கரு உருவானதன் வழியாக அதன் முழுமையான நிறைவேற்றத்தை மத்தேயு நற்செய்தியானது எடுத்துரைக்கின்றது.
மூலம்:
John Paul II, Isaiah’s prophecy fulfilled in incarnation, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 7 February 1996, p. 11.