news-details
சிறப்புக்கட்டுரை
இளம் மயிலும் செயற்கை நுண்ணறிவும்

அழகிய இளம் ஆண் மயில் ஒன்றிற்கு ஓர் ஆசை. ‘எத்தனை நாள்தான் இப்படி இந்தப் பெரிய தோகைகளை வைத்துக்கொண்டு உடல் வலிக்கப் பறந்து பறந்து இரை தேடுவது? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்என்று எண்ணிக் கொண்டது. கூண்டுக் கிளிகளுக்கு மேல் எப்போதும் அதற்குப் பொறாமை இருந்தது. ‘ஒரே இடத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு, கிடைப்பதை வயிறுமுட்ட தின்றுகொண்டு வீட்டாரின் தோளிலும் மடியிலும் புரண்டுகொண்டு வாழ்வதில் இந்தக் கூண்டுக் கிளிகளுக்கு இருக்கும் சௌகரியம் என் வாழ்வில் இல்லையேஎன்று ஏங்கித் தவித்தது இளம் மயில்.

ஒற்றைக்காலில் பொழுதெல்லாம் காத்திருந்த நாரைக்கு அயிரை மீனே வாய்க்குள் வந்து மாட்டிக் கொண்டதுபோல இளம் மயிலுக்கு ஓர் அரண்மனை இளவரசனின் அறிமுகம் கிடைத்தது. இளம் அரசனுக்கும் பல நாள்களாக ஒரு மயிலைத் தங்கக் கூண்டிலே வைத்து வளர்க்க வேண்டும் என்று ஆசையிருந்தது. இரண்டு பேரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினர். இளம் மயில் மிகக் கண்டிப்பாக இளவரசனிடம் சொல்லிவிட்டது: “என்னைத் தேவையில்லாமல் பறக்கச் சொல்லக்கூடாது, பாடச் சொல்லக்கூடாது, ஆடச் சொல்லக்கூடாதுஎன்று. இளவரசனுக்கும் இந்த டீலிங் பிடித்திருந்தது. ஆனால், ஒரே ஒரு கண்டிசன் மட்டும் போட்டான்: “நீ என் தங்கக் கூண்டில் இருந்தாலே போதும்; ஆனால், நான் எப்போதெல்லாம் உனக்கு ஒரு வாய் உணவு தருகின்றேனோ, அப்போதெல்லாம் உன் தோகையிலிருந்து இறகு ஒன்றைத் தரவேண்டும்என்றான்.

இளம் மயில் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது. “என் இறகுகளால் இனி எனக்கு என்ன பயன்? சுவையான அரண்மனை உணவே நான் இருக்கின்ற இடம் தேடி, வேளா வேளைக்கு வந்துவிடுகின்றது. சிறகடித்துப் பறக்க வேண்டிய தேவையில்லை. உழைக்கச் சொல்லுவார் யாரும் இல்லை. இறகுகள் போனால் என்ன? பார்த்துக்கொள்ளலாம்என்று டீலிங்கிற்கு ஒத்துக்கொண்டது.

வீட்டில் புதிதாகக் கார் வாங்கினால் ஊரார் கண்ணே அந்தக் காரின் மேல் இருப்பதுபோல, மயில் வந்த வேளை அந்தப் பெரிய அரண்மனைக்கே ஒரு புதுப்பொலிவு வந்தது. அரசர், அரசி, பணிப்பெண்கள், சிறார்கள் என்று எல்லாரும் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட இளம் மயிலின் அழகிலே மெய் மறந்து போனார்கள். அடிக்கடி வந்து தவறாது பார்த்துச் சென்றனர். இளவரசன் இளம் மயிலுக்கு ஒவ்வொரு முறையும் உணவு கொடுக்கும்போது மறக்காமல் ஒரு மயிலிறகைப் பெற்றுக்கொள்வான்.

காட்டு வெள்ளம் கண்ணில் எதிர்படும் அனைத்தையும் அள்ளிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல காலம், பல பகல் இரவுகளைச் சுருட்டிக்கொண்டு ஓடியிருந்தது. பெரும்பாலான தன் இறகுகளை இழந்திருந்த மயில் கொழுத்துப்போய் தன் அழகையும் அடையாளத்தையும் இழந்து, மழித்துவிடப்பட்ட தீக்கோழியைப் போலிருந்தது.

இப்போதெல்லாம் அதனைக் காண யாரும் வருவதில்லை. இளவரசன்கூட தன் வேலையாள்களைத்தான் உணவு கொடுக்க அனுப்புவான். தனிமையிலும் வெறுமையிலும் தவித்திருந்த மயில், தன் முடிவு தவறானது என்று உணரும்போது அதன் உயிரும் தங்கக்கூண்டின் கம்பிகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.

மனிதன் தொடக்கக் காலத்திலிருந்தே தன்னை வலிமையானவனாகக் காட்டிக்கொள்ள ஏதாவது துணைக்கருவியை எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கின்றான். கற்காலத்தில் கூர்மையான கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்தி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் விலங்குகளைப் பழக்கப்படுத்தியும், சக்கரங்களைக் கண்டுபிடித்தும், துப்பாக்கி முதல் அணுகுண்டு வரை பயன்படுத்தியும் தன்னைப் பிறரைவிட வலிமையுள்ளவனாக எப்போதும் காண்பித்திருக்கிறான்.

சிலந்திக்கு எட்டுக்கால்கள் இருந்த போதும், அதனுடைய வசதியான பகுதி அதனுடைய சிலந்தி வலை மட்டும்தான்; அதனைத் தாண்டி அதனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் அப்படியல்ல; இரண்டு கால்கள் மட்டுமே இருந்தும் கூட அவனால் இருபது கால் பாய்ச்சலில் வசதிப் பகுதியைத் தாண்டியும் பயணம் செய்ய முடியும். இதற்கு அவனுடைய நுண்ணறிவே காரணம்.

மனிதன் எப்போதுமேஇது போதும்என்று தேங்கி விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு படைத்தலில் ஈடுபட்டிருக்கின்றான். இதன் மூலமாகத் தன்னை வலிமையுள்ளவனாகக் காட்ட விரும்புகின்றான். இது தொடக்கத்திலிருந்தே மனிதனின் இயல்பாக இருந்திருக்கின்றது. இதனுடைய தொடர்ச்சியாகவே செயற்கை நுண்ணறிவை நாம் பார்க்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினியையும் இணையத்தினையும் பயன்படுத்தி, மனித அறிவிற்கு இணையான ஓர் அறிவைச் செயற்கை முறையில் உருவாக்குவது. இது மனிதனின் பணியினை எளிமைப்படுத்துகிறது. சில நேரங்களில் மனிதனையே தன் பணியிலிருந்து வெளியேற்றுகின்றது. செயற்கை நுண்ணறிவு (ai) என்று இன்று பல்வேறு தளங்களில் நாம் பேசினாலும், இத்தகைய சிந்தனை ஆலன் மேத்திசன் டூரிங் (Alan Mathison Turing) என்பவரால் 1940-50-களிலேயே ஆராயப்பட்டது. எனவேதான் இவரைசெயற்கை நுண்ணறிவின் தந்தைஎன்கின்றனர். ‘இயந்திரங்கள் சிந்திக்க முடியுமா?’ (Can machines think?) என்ற டூரிங்கின் கேள்வியே இன்றைய செயற்கை நுண்ணறிவுக்கெல்லாம் அச்சாணியாக அமைந்தது.

செயற்கை நுண்ணறிவை இரண்டாகப் பிரிக்கலாம்: ஒன்றுபலவீனமான செயற்கை நுண்ணறிவு (Weak Artificial Intelligence); இவ்வகை செயற்கை நுண்ணறிவு குறைந்த அறிவுத்திறன் கொண்டும் குறுகிய இலக்கிற்காகவும், குறைந்தபட்ச செயலுக்காகவுமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனாலேயே இதனைநேரோ ஏஐ (Narrow ai) என்றும் கூறுவர். இதன் எடுத்துக்காட்டாகசாட் ஜிபிடிசெயலியைக் கூறலாம். ஒரு குறிப்பட்ட செயலை மட்டும் செய்யும் திறன் கொண்டது. மற்றொன்றுவலுவான செயற்கை நுண்ணறிவு (Strong Artificial Intelligence); இவ்வகை செயற்கை நுண்ணறிவுசெயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence -AGI) மற்றும் செயற்கை அதிநவீன நுண்ணறிவு (Artificial Super Intelligence -ASI) போன்றஏஐதொழில்நுட்பத்தினால் செறிவூட்டப்பட்டிருக்கின்றது.

சிந்திக்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கற்றுக்கொள்ளும் திறன், கணக்கிடும் திறன் என்று மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் இணையான பண்பை இவ்வகை செயற்கை நுண்ணறிவு கொண்டு விளங்குகின்றது. எனினும், மனித அறிவையும் அதன் அதீத ஆற்றலையும் மிஞ்சிச் செல்ல இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் சில காலம் ஆகும் என்றே கருதுகிறேன்.

இன்று மருத்துவத்துறையில், இராணுவத்தில், கல்வித்துறையில், ஊடகத்தில், மனித மேம்பாட்டில், தொழில்புரட்சியில், விண்வெளி ஆய்வில் என்று இன்னும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு என்பது அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சியை முப்பரிமாணக் கோணத்தில் நமக்குக் காட்டுகின்றது. ஒருபுறம் வளர்ச்சி அறிவியலின் புரட்சி என்று மார்தட்டினாலும், மறுபுறம்ஏஐதொழில்நுட்பத்தினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சைபர் குற்றங்கள், நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய போலிச் செய்திகள் மற்றும் காணொளிகள், அதில் இருக்கக்கூடிய நெறிமுறை சார்ந்தக் குழப்பங்கள் நம் மற்றும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை இன்றே நமக்கு உணர்த்துகின்றது.

தங்கக் கூண்டும், வேளா வேளைக்குச் சாப்பாடும் என்றிருந்த இளம் மயில் தன் தோகையை இழந்து, தன் தன்மை இழந்து தீக்கோழியான கதையைப் போல, உதவிக்கு வந்தவனே நம்மை உருக்குலைக்க வருகிறான் என்பதைத் தெரிந்து விழிப்பாய் இருப்பது நல்லது.