news-details
சிறப்புக்கட்டுரை
“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது என் வாழ்நாளில் கிடைத்த பெரும்பேறு”

திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான திரு. இனிகோ S. இருதயராஜ் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டது  குறித்துநம் வாழ்வுவார இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

சார், வணக்கம். முதலில் உலகின் 140 கோடி கத்தோலிக்கக் கிறித்தவர்களின் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இரங்கல் செய்தியும், தமிழ்நாடு சட்டமன்றம் இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. குறிப்பாக, நீங்களும் தமிழ்நாடு சிறுபான்மை நல அமைச்சர் திரு. S.M. நாசர் அவர்களும் தமிழ்நாடு மக்கள் சார்பாக உரோமைக்குச் சென்று திருத்தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளீர்கள். உங்களுக்கும், அமைச்சர் திரு. நாசர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும்நம் வாழ்வுவார இதழ் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருத்தந்தை பிரான்சிஸ் எல்லாருக்குமே மிகவும் பிடித்தமான ஒரு தலைவர். அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுங்களேன்...

நம் வாழ்வுவாசகர்களுக்கு வணக்கம்! உலகம் முழுவதும் இருக்கின்ற கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் திரு அவையை அலங்கரித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அவர் இன்று நம்மிடையே இல்லை என்ற மிகக் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்நேரத்தில் தமிழ்நாடு கிறித்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் சார்பாகவும், என் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருத்தந்தை மிகவும் எளிமையான ஒரு மனிதர். அவரைப் பற்றிக் கேள்விப்படும்போது பொதுப் பேருந்தில் பயணித்தவர்; தனக்கான உணவைத் தானே சமைத்து உண்டவர்; திருத்தந்தையாகத் தேர்வான பிறகு, காலங் காலமாகத் திருத்தந்தையர்கள் வாழ்ந்து வந்த வசதியான வத்திக்கான் மாளிகையில் தங்காமல், குருக்களும் கர்தினால்களும் தங்குகின்றசாந்தா மார்த்தாஇல்லத்தில் எளிமையாகத் தங்கியவர்; ஏழையாக வாழ்ந்த இவர், ஏழைகள்பால் மிகுந்த கரிசனை கொண்டவர்; புரட்சிகரமான செயல்களைத் திரு அவையில் நடைமுறைப்படுத்தியவர். திரு அவையில் பொதுநிலையினருக்கான பங்கேற்பை ஊக்கப்படுத்தியவர்; பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக வாழக்கூடிய மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தவர்; புலம்பெயர்ந்தவர்களும் நாட்டில் வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டவர்; பல நாடுகளுக்கும் சென்று அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர் என்று அவரைப்பற்றிக் கூறிக்கொண்டே இருக்கலாம். உண்மையில் அவர் இந்நூற்றாண்டு கண்ட ஒரு புரட்சியாளர்!”

திருத்தந்தையின் பணிப்பொறுப்பில் அவர் செய்த புரட்சியான செயலாக எதைப் பார்க்கிறீர்கள்?

அவரது 12 ஆண்டு காலத் தலைமைப் பணியில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளே திருத்தந்தைக்குரிய ஆடம்பர ஆடைகளை அணிந்து வராமல், சாதாரண அங்கியையும் அவர் ஏற்கெனவே அணிந்திருந்த சிலுவைச் செயினையும் அணிந்து மக்களைச் சந்தித்ததே மிகப்பெரிய புரட்சிதான். பெண்களுக்கான உரிமை திரு அவையில் வழங்கப்பட வேண்டும் எனக் கருதி அவர்களை வத்திக்கானில் மிக உயர்ந்த பொறுப்புகளில் பணியமர்த்தியவர். திருத்தந்தைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. அவர் ஒன்றைக் கூறினால் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வர். அவருடைய கருத்துக்கு யாரும் மறுப்புக் கூற முடியாது; ‘ஏன் முடிவெடுத்தீர்கள்?’ என்று கேட்கவும் முடியாது. ஆனால், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எண்ணி 2013-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அவ்வாண்டே, செப்டம்பர் 28-ஆம் தேதிC-9’ என்ற கர்தினால்களின் உயர்மட்ட அவையை உருவாக்கி, அக்டோபர் மாதம் முதல் தேதி அதன் முதல் கூட்டத்தை வழிநடத்தினார். இன்று எந்தத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வார்? திருத்தந்தையின் இந்தச் செயலைப் புரட்சியான ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.”

நன்றி சார்! கடந்த ஆண்டு திருத்தந்தையை நேரடியாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. பலருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு அது. உங்கள் இதயத்தைத் தொட்ட நிகழ்வு ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூற முடியுமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் நாள் அனைத்துச் சமயத் தலைவர்களோடு திருத்தந்தையைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு மிகப்பெரிய ஓர் ஆச்சரியம் என்னவென்றால், மாபெரும் தலைவர் அவர்; உலகமே பார்த்து வியக்கின்ற தலைவர் அவர்; உலகத் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கிய அவரைச் சந்திக்கும்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும் என்று நினைத்தேன். நாங்கள் கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட ஒரு குழு சென்று, அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றோம். அப்போது அங்குச் சென்றபொழுது எந்தப் பரிசோதனையும் இல்லை. ஓர் இடத்தில் மட்டும் நிறுத்தி, ‘ஏதாவது பொருள்களை வைத்திருந்தால் வைத்துவிட்டுச் செல்லுங்கள்என்று ஒரே ஓர் அறிவுரை மட்டும் கூறினார்கள். அப்போது எங்களோடு வந்திருந்த ஒரு சீக்கிய மதக் குரு ஒருவர் அவருடைய சமய அடிப்படையிலே ஒரு வாள் வைத்திருந்தார். வாள் வைத்திருந்த அவரைப் பாதுகாவலர்கள் திருத்தந்தையைச் சந்திக்க உள்ளே அனுமதிக்கவில்லை. நான் உடனே பாதுகாவலர்களிடம், ‘இது அவர்களுடைய மத அடிப்படையில் வைத்திருப்பதுதான். நீங்கள் திருத்தந்தையிடம் போய் தெரிவியுங்கள். அவர் நிச்சயமாக அதை அனுமதிப்பார்என்று கூறினேன். திருத்தந்தையிடம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர், ‘மத அடிப்படையிலே இருந்தால் அதை ஒன்றும் செய்ய வேண்டாம். அவரையும் அழைத்து வாருங்கள்என்று கூறி, அன்போடு அருகில் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

எனக்கு ஒரு 15 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ‘நீங்கள் இந்தியாவிற்கு வருகின்ற பொழுது உங்களை எங்கள் முதல்வர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார். நாங்கள் உங்கள் வருகைக்குத் தயாராக இருக்கிறோம்என்று கூறியபோது, ‘வருகிறேன்என்று மகிழ்ச்சியோடு கூறினார். அந்தச் சந்திப்பு வாழ்நாளில் கிடைக்கப்பெற்ற பெரும்பேறு!”

திருத்தந்தையின் அடக்க நிகழ்வில் பங்கெடுத்தது குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்களேன்...

முதலமைச்சர் அவர்கள் நானும், சிறுபான்மை நலத்துறையின் அமைச்சர் அண்ணன் நாசர் அவர்களும் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்குத் தமிழ்நாடு மக்கள் சார்பாக இறுதி மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள் என உத்தரவிட்டார்கள். இதற்காக இந்த ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களின் சார்பாக நாங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம். முதலமைச்சரின் ஆணைப்படி, கடந்த 25-ஆம் தேதி நாங்கள் உரோமாபுரி சென்று திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். இதெல்லாம் வாழ்க்கையில் கிடைக்காத பெரிய பாக்கியம்! எங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் வத்திக்கான் நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது. அவருடைய அடக்க நிகழ்வுகள்கூட திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கிணங்க மிக எளிமையாகவே நடைபெற்றது.

இந்தியத் திரு அவை தலைவர்களையும் சந்தித்தோம். ‘தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சார்பாகப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருப்பது நெகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதுஎன்று கர்தினால் ஆஸ் வால்டு கிரேசியஸ் அவர்களும், கர்தினால் பசேலி யோஸ் கிளேமிஸ் அவர்களும் கூறினர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நேரத்தில் 267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் தலைமைப் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.”

மிக்க நன்றி சார்! திருத்தந்தையைச் சந்தித்து மகிழ்ந்து உரையாடிய தருணம் ஒன்று; மற்றொன்று துயரம் மிகுந்து உணர்ச்சி பொங்க அவருக்கு அஞ்சலி செலுத்திய தருணம். இது ஓர் உணர்வுப்பூர்வமான பகிர்வு. தாங்கள் பகிர்ந்த கருத்துகளுக்கு நன்றி. உங்கள் பணி தொடரநம் வாழ்வுவாழ்த்துகிறது!

நேர்காணல்: அருள்பணி. ஞானசேகரன், நம் வாழ்வு துணை ஆசிரியர்