news-details
சிறப்புக்கட்டுரை
எது எளிது? அரசியலா? ஆன்மிகமா?

பொதுநலமா? சுயநலமா? விவசாயிகளின் தற்கொலையா? அரசாங்கத்தின் கடன் தள்ளுபடியா? மனிதன் சுட்டுக் கொல்லப்படுவதா? ஸ்டெர்லைட் காப்பர் கம்பெனி மூடப்படுவதா? சேலம் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதா? எட்டு வழிச்சாலை கைவிடப்படுவதா? மீனவர்களின் வாழ்வு முக்கியமா? மீனவர்களின் இருப்பிடத்தை அழிக்கும் துறைமுகங்கள் முக்கியமா? கலாச்சாரப் பண்பாட்டைக் காப்பதா? கறவை மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதா?

ஏன் இந்த அமைதி? ஏன் இந்தப் பொறுமை? எவரோ ஒருவர், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும்போது வருகின்ற கொந்தளிப்பு, ஏன் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பாயம் வரவில்லை? அமைதி, பொறுமை, காலதாமதம் இவையெல்லாம் மனிதனின் வாழ்விற்கா? இல்லை, அவனின் அடிமட்ட அழிவிற்கா? ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ தலைநிமிர்ந்து நிற்பதைக் காட்டிலும், தலைகுனிந்து நடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். குற்றம் நடக்கின்ற இடத்தில், குற்றம் என்று தெரிந்தும் அவ்விடத்தில் அமைதிக் காப்பவன் தியாகி அல்ல; மாறாக, அவர் ஒரு தீவிரவாதி என்று நாம் படித்திருக்கிறோம்.

ஆம்! நாம் ஏன் இன்னும் அமைதி காக்கின்றோம்? அப்பாவி விவசாயிகளின் அழுகுரல் நம்முடைய காதுகளைத் துளைக்கவில்லையா? குண்டுகள் துளைத்து மண்டையிலிருந்து வெளிவந்த இரத்த ஆறுகளில் நம் மனம் ஈரமாகவில்லையா? எத்தனையோ தற்கொலைகள், எத்தனையோ கொலைகள்! ஆனால், ஊடகங்களில் மட்டும் வெளிவரவில்லை... ஏன்? குரல் கொடுக்கும் குரல்களின் அடையாளம் மறைக்கப்படுவதாலா? ஹெல்டர் கேமரா இவ்வாறு கூறுகின்றார்: “நான் ஏழைக்கு உதவி செய்யும்போது என்னைப் புனிதன் என்கிறார்கள்; நானோ இவன் ஏன் ஏழையாக இருக்கிறான் என்று கேள்வி எழுப்பும்போது என்னைப் பயங்கரவாதி என்கிறார்கள்.”

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிஉரிமை இருக்கின்றது. மனிதா நீ போராடு! உரிமை உன் கையில் உள்ளது. எழுதுகோல் எடுத்து வாழ்வுக்கு எழுத்து, மூச்சுக் கொடுப்பவன் நீ! நீ போராளிதான். போராடினால் மட்டும் போதாது. நாம் எதை முன்வைக்கிறோமோ அதை நாம் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும். “செபிக்கும் உதடுகளைவிட, உதவும் கரங்களே மேலானவைஎன்கிறார் புனித அன்னை தெரேசா. கோவில் கட்டுவதற்கும், கோபுரம் எழுப்புவதற்கும் உதவுதல் மட்டும் அல்ல நம்பிக்கை வாழ்வு; மாறாக, நம்மை நாடி வருவோருக்கு ஒரு வேளை உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தலே ஆகும். மனிதா, எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி உடையும்போது, ‘என் வீட்டுக் கண்ணாடி உடையவில்லை, எனக்கென்ன கவலை?’ என்று இருந்துவிடாதே. இன்று எதிர்வீட்டு சன்னல் கண்ணாடி, நாளை உன் வீட்டுக் கதவுக் கண்ணாடி!

பதவியும் பணமும் தலைவிரித்தாடும் இக்களத்தில் இரண்டும் இல்லாத நான் என்ன செய்வது என்று எண்ணாதே? அன்று சிறுவன் தாவீது, கோலியாத்தைப் பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால் ஆண்டவரின் ஆற்றல் அச்சிறுவனிடமிருந்து வெளிவராமல் போயிருக்கும். அன்று பவுலாக மனமாறிய சவுல், உரோமை ஆட்சியை நினைத்து, இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால், இன்று கிறித்தவம் உலகெங்கும் பரவியிருக்குமா?

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டுஎன்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை மனத்தில் பதித்து, ‘என்னாலும் செய்ய இயலும்என்ற மனப்பக்குவத்தோடு, நம் அயலாருக்கு நம்மால் முடிந்ததைச் செயலாக்கிட முயல்வோம்.

அன்பு ஆயுதமாகிறது! ஆயுதம் அறமாகிறது!

அநீதிகளை அழிக்க! ஆணவங்களை ஒழிக்க!

அன்பாய் வாழ்வோம்! அறமாய்ச் செயல்படுவோம்!

அரசியலில் ஆன்மிகம் தேவையாகலாம்; ஆனால், ஆன்மிகத்தில் ஒருபோதும் அரசியல் கூடாது. ஏனென்றால், அரசியலும் ஆன்மிகமும் இரண்டும் அவ்வளவு எளிது அல்ல; ஆனால், இரண்டும் பல நேரங்களில் சுயநலத்தை நாடியே அமைந்துள்ளது. ஆகவே, அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும் பொதுநலம் கருதி மக்களுக்காக, மனிதநேயத்திற்காகப் பணிபுரிய வேண்டும். வீறுகொள்! உனது அறிவு எனும் தராசில் ஆன்மிகத்தையும், அரசியலையும் சரிவரப் பேணு! கேள்விக்குறியாய் இருக்கும் உன் வாழ்வு, உலகத்திற்கே ஆச்சரியக் குறியாய் மாறும்.

வாழ்க வளத்துடன்!