news-details
தலையங்கம்
எல்லை தாண்டிய பயங்கரவாதமும் கருத்துப் பேதமும்!

பகல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும்... என்ற பதங்கள் கடந்த இரு வாரங்களாக உலகளவில் ஊடகத் தலைப்புச் செய்திகளாயின.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பகல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் நாள், 26 பேரை உயிர்ப்பலி கொண்ட பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு, அண்மைக்காலங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மிகவும் கொடூரமானது என்றே கணிக்கப்படுகிறது. இதுவரை நடந்திராத வகையில் பெண்கள், குழந்தைகளின் முன்னிலையில் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதும், கண்முன்னே தம் கணவரை இழந்த மனைவியரின் கண்ணீர் கதறலும் நாட்டையே உலுக்கியிருந்தன.

இக்கொடுஞ்செயலின் வேதனையின் வெளிப்பாடாகத்தான்பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது; கோழைத்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவர்; பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும்வரை இந்த அரசு ஓயாதுஎன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்தார்.

இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்கும் இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உலக நாடுகள் பேராதரவு அளித்ததும், தேசியப் புலனாய்வு முகமையின் (national Investigation Agency - NIA) பல்வேறு குழுக்கள் களமிறக்கப்பட்டு ஆதாரங்களைத் திரட்டிய விதமும் பாராட்டத்தக்கவை. இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பு, எதிரிகளின் சுவடுகளைத் துடைத்தெறியும் வீரச்செயலாக எழுந்ததுதான்ஆப்ரேஷன் சிந்தூர்.’

வரலாறு இங்கு மீள்பார்வை செய்து பார்க்கப்பட வேண்டும்! இந்தியா-பாகிஸ்தான் உறவு தொப்புள்கொடி உறவாக இருந்தாலும், பாகிஸ்தானில் வேரூன்றி வரும் பயங்கரவாதம், எல்லை தாண்டி வளரும் நச்சுக்கொடியாகவே படர்கின்றது; அது இன்றும் தொடர்கின்றது. பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பதற்குப் பல சாட்சியங்கள் இருந்தாலும், அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப்பும், பிலாவல் புட்டோவும் வெளிப்படையாகவேஎங்களது அரசு பயங்கரவாதிகளை ஆதரிக்கிறதுஎன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவேதான், “பாகிஸ்தான் மூர்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டதுஎன்கிறார் நம் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்.

காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பள்ளிகள், கல்லூரிகள் துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில், உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சனநாயகம் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நேரத்தில், மக்களின் வருவாய் பெருகிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி உறுதிசெய்யப்படும்; தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் சதிகாரர்களுக்கும் மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்எனச் சூளுரைத்த நாட்டின் பிரதமர் மோடி, ‘ஒற்றுமையும் 140 கோடி மக்களின் ஒருமைப்பாடுமே மிகப்பெரிய பலம்எனத் தெரிவித்திருந்தார்.

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட இந்த எதிர்வினையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாததும், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தாததும், இராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பயங்கரவாதிகளின் தளங்களை மட்டுமே தகர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரோஷி ஆகிய இரு பெண் அதிகாரிகள் இத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியிருப்பது நாம் இன்னும் பெருமைப்படக்கூடியதே!

ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பங்களிப்பு திறன்மிக்கதாகக் கணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையைக் கடக்காமலேயே அந்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் வல்லமையுடன் இந்தியப் போர் விமானங்கள் செயல்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டையும், நாம் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பதையும் உலகிற்கு நாம் உணர்த்தியிருக்கிறோம்.

மே 7-ஆம் தேதி தொடங்கியஆப்ரேஷன் சிந்தூர்பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்படி கடந்த 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஆனால், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இப்போரைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது மற்றொரு பேசுபொருளாகியிருக்கிறது.

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது; அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்தது. அதன் பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலனை செய்தது. ஆயினும், இந்தச் சண்டை நிறுத்தம் தற்காலிகமானது. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கும்என்கிறார் நம் பிரதமர்.

அவ்வாறே, ‘ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதுவரை இந்தியா-அமெரிக்கா இடையிலான எந்த ஒரு விவாதத்திலும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. மேலும்இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவிற்கோ, அந்நாட்டு அதிபருக்கோ எந்தப் பங்குமில்லைஎன்கிறார் நம் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.

இவ்வாறாக, உலக நாடுகளின் பார்வை நம்மீது இருக்கும் இச்சூழலில், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக மீண்டும் நம் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க 1994-இல்  நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை அரசு மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.

மேலும், இந்தியாவின்மீது பாகிஸ்தான் கொண்டிருக்கும் தொடர் வன்மத்தை அது மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் ஆக்கிரமிப்புகளிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும். காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதையும் எல்லைகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும் இனி பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் அடியோடு விட்டுவிட வேண்டும் என்று உலக நாடுகள் விரும்பும் வேளையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கையின் மூலம் இலஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முகமது போன்ற  பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தகர்க்கப்பட்ட சூழலில், மீண்டும் அவற்றைக் கட்டமைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலானது தேசப் பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளின் விளைவாக இருக்கலாம்என்று காங்கிரஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் சந்தேகிக்கும் வேளையில், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவுமே பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், “இந்தியாவின் பாதுகாப்புக் குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணம்என்னும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் தவிர்க்க இயலாது!

இந்நிலையில், பயங்கரவாதச் செயல்பாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பிற நாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும், தீவிரவாதிகளுக்குத் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவி செய்வது... எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே  தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்கவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் தலையீட்டை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? பாகிஸ்தானுடன் நடு நிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காகச் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா அடிபணிந்திருக்கிறதா? போன்ற கேள்விகள் மக்கள் மனத்தில் எழுகின்றன.

ஆகவே, இந்தியா-பாகிஸ்தான் மோதலால் உலக அரங்கில்எல்லை தாண்டிய பயங்கரவாதம்விவாதப் பொருளான சூழலில், தாக்குதல் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவது கருத்துப் பேதமாகவே பார்க்கப்படுகிறது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்