“நான் அருண். ஃபாதர் பிரேமும் நானும் பிரண்ட்ஸ். பள்ளியிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். இப்போ ஃபாதராகி எங்க ஊர்லதான் இருக்காரு. போன வாரத்தோட அவர் எங்க ஊருக்கு வந்து இரண்டு வருசம் ஆச்சு. பள்ளியில ‘நீ’, ‘வா’, ‘போ’னு தான் பேசிக்கிட்டிருப்போம். இப்போ ‘நீங்க’, ‘வாங்க’ன்னு சொல்லுறேன். ஃபாதர்னா எப்போதும் மரியாதை கொடுக்கணும்னு சொல்லியே அப்பா எங்களை வளர்த்தாரு.
ஊர்ல
முக்கியமான பிரச்சினைக்கெல்லாம் என்கிட்ட கேட்டுட்டுதான்
ஃபாதர் முடிவெடுப்பார். நானும் ஃபாதர் ஆகணுமுனு சிறுவயசுல நெனச்சேன். ஆனா முடியல. இப்போ மேரேஜ் பண்ணிக்கிட்டு ஃபாதர் ஆகலாமுனு இருக்கேன். இப்போ நான் கார் ஓனர். எப்போ கார் வேணுமுனாலும் பிரேம், சாரி! ஃபாதர் பிரேம் என்னைத்தான் கூப்பிடுவாரு. நானும் காரை எடுத்துக்கிட்டு வந்திடுவேன். ‘ஆமா! நீங்க இந்தக் காலேஜ்ல என்ன வொர்க் பண்ணுறீங்க?”
எப்படியோ
இப்போதாவது பேச்சை முடித்தானே... என்றிருந்தது உமாவிற்கு. “நான் இங்க பிரின்ஸ்பாலா இருக்கேன்”
என்று சுருங்கத் தன் பதிலைக் கூறிக்கொண்டு தூரத்தில் சிலரோடு பேசிக்கொண்டிருந்த ஃபாதர் பிரேம் அவர்கள் அருகே வந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். “காலேஜ் பிரின்ஸ்பால்கிட்டையா இவ்வளவு நேரம் ரீல் சுத்திக்கிட்டிருந்தேன்!” அதிர்ந்து அவ்விடமிட்டு நகர்ந்தான் அருண்.
“ஃபாதர், வந்து எங்களுக்காகச் செபித்ததற்கு ரொம்ப தாங்ஸ்” என்று ஒரு கவரை அவர் பக்கம் நீட்டினாள். ஃபாதர் பிரேம் அதனை வாங்கித் தன் அங்கிப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விடைபெற்றார். பிரின்ஸ்பால் ஃபாதர்கிட்ட தன்னை மாட்டிவிட்டுவிடுவாரோ என்ற பதற்றத்தோடயே காரை ஓட்டிக்கொண்டு போனான் அருண்.
ட்ராபிக்
சிக்னலில் நின்றிருந்தபோது பெண் ஒருவர் ஒரு கைக்குழந்தையுடன் வந்து ஃபாதர் பக்கமாகக் கார் கதவைத் தட்டினாள். “இவங்களுக்கு வேறு வேலையே இல்ல. இருக்கிற டென்சன்ல நம்ம உயிர வாங்குறாளுங்க” என்று
அலுத்துக்கொண்டான் அருண்.
அந்தப்
பெண் அந்த இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. ஃபாதர் சில்லறை ரூபாய்க்காகத் தன் பர்ஸைத் தேடினார். பர்ஸை எடுத்து வராதது தெரிந்தது. “இவங்களுக்கு நம்ம அஞ்சோ பத்தோ கொடுக்குறதாலதான் அடிக்கடி வந்து நம்மளத் தொந்தரவு பண்ணுறாங்க. இவங்களுக்கும் கொள்ளைக்கூட்டத்திற்கும் லிங் இருக்கு. காசு கொடுக்காதீங்க.” அருண் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இருக்கவேயில்லை. எப்போதும் முன்சார்பு எண்ணம் கொண்டே இருந்தான்.
பிரின்ஸ்பால்
உமா கொடுத்த கவருக்குள் கண்டிப்பாக ஐந்நூறு அல்லது ஆயிரம் இருக்கும் என்பது ஃபாதர் பிரேமுக்குத் தெரியும். தன்னிடம் பணம் இருப்பது தெரிந்திருந்தும் கார் கண்ணாடியைக் கீழே இறக்கி “காசு இல்ல, நீ போ” என்றார்.
அந்தப்
பெண் “காசு பணம் வேணாம் சாமி, என் பிள்ளைய ஆசிர்வாதம் பண்ணு” என்று சொல்லிக் கைக்குழந்தையை நீட்டினாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனார் ஃபாதர். நாம என்னவோ நினைக்க, இந்தப் பெண் வேறெதுவோ நினைத்திருக்கிறாளே... என்றிருந்தது அவருக்கு. எளிதில் ஒருவரைத் தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும், பாக்கெட்டில் காசிருந்தும் இல்லை என்று சொல்லிவிட்டோமே என்ற குற்றவுணர்வும் அவரைக் குத்தூசியாய் ஆயிரம் முறை குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.
குழந்தையை
ஆசிர்வதித்துவிட்டு அக்குழந்தையின் கண்களைக் கூர்ந்துப்பார்க்கக்கூட முடியாமல் கார் கண்ணாடியை வேகமாக இழுத்தடைத்துக்கொள்ள நினைத்தபோது, தன்னிடமிருந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண். ஒரு மனிதனை இப்படியும் தண்டிக்கலாமா? ‘இவரை விட்டு விடு போதும்’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அருணுக்கு. “வேணாமா, நீயே வச்சுக்கோ”
என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பச் சொன்னார் ஃபாதர்.
ட்ராபிக்
சிக்னல் சிவப்பிலேயே இருந்தது. அந்தத் ‘திக்... திக்...’ நிமிடங்கள் நரகத்தின் கோரப் பிரதிபலிப்பு போலிருந்தது. அங்கிப் பாக்கெட்டுக்குள் இருந்த பணம் அவருக்குப் பெரும் பாறாங்கல்லாய் கனத்தது. பச்சை சிக்னல் விழுந்து கார் கிளம்பியது. கிடைத்த வண்டு ஒன்றைக் கொன்று தின்ன இழுத்துச்செல்லும் கட்டெறும்புகள்போல அதிமிக வாகன நெரிசலில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தக் கார்.
ஒருவர்
மற்றவரைப் பற்றிய முன்சார்பு எண்ணங்கள் (Bias) ஒருவரின்
நன்மைத்தன்மையை அறியவிடாமல் செய்கிறது. சமூகங்களில் பிரதிபலிக்கும் இத்தகைய மனப்பாங்கு இன்று செயற்கை நுண்ணறிவுத் தளங்களிலும் பரவலாகக் காணக்கிடக்கின்றது. இதனால் பல்வேறு குழப்பங்களும் தாக்கங்களும் பிளவுகளும் சமூகத்தில் ஏற்படுகின்றன.
செயற்கை
நுண்ணறிவு பெரும் தரவுகளை (Big Data) அடிப்படையாகக்
கொண்டே இயங்குகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இவ்வகைத் தரவுகள் முன்சார்புடையதாக அதாவது ஒரு மொழிக்கோ அல்லது ஒரு சமயத்திற்கோ அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமாயின், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும். பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மிகுந்து கிடக்கும் தரவுகளைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றில் அந் நாட்டு மொழிகள், கலாச்சாரம், ஆளுமைகள், கருத்தியல்கள் மிகுந்து காணப்படும். இந்தியா போன்ற நாடுகளின் தரவுகள் அதில் அதிகம் இடம் பெறவில்லை என்பதனாலேயே இதனை ‘பிரதிநிதித்துவ சார்பு’
(Representation Bias) என்கிறோம்.
பல
நேரங்களில் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்கின்ற நிறுவனங்கள் சமூகத்தை, அதன் சிந்தனைத் திறனை மடைமாற்றம் செய்திட அதன் அல்காரிதச் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால்
நாம் எதைப் பார்க்கவேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? யாருக்கு வாக்குச் செலுத்த வேண்டும்? என்ன வாங்கவேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுக்க நாம் மறைமுகமாக நிர்பந்தப்படுத்தப்படுகிறோம்.
இதனை ‘அல்காரித சார்பு’
(Algorithmic Bias) என்கின்றனர்.
இத்தகைய அணுகுமுறை மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளையும் பிரிவினைகளையுமே விளைவிக்கின்றன. இதனால் செயற்கை நுண்ணறிவின் ‘சோசியல் இன்ஜினியரிங்’ செயல்பாடு
நம்மை ஆளுமைசெய்து, நம் முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்துகிறது.
செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையாத நிலையிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் பல சிக்கல்கள் நாளுக்கு
நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு முன்சார்புத்தன்மையற்ற தளங்களாக இருப்பதை அரசுகளும் பெரும் நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் மேற்கூறப்பட்ட கதைமாந்தர்களான அருண் மற்றும் ஃபாதர் பிரேம் செய்த தவற்றைச் செயற்கை நுண்ணறிவும் செய்துகொண்டே இருக்கும்.