news-details
சிறப்புக்கட்டுரை
இறைவேண்டல் எச்சரிக்கைகள்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 43)

இறைவேண்டலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது; அதில் நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று நம்மை எச்சரிக்கிறது இறைவார்த்தை. திரு அவையின் புனிதர்களும் இறைவேண்டல் பற்றிய தங்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். எல்லா இறைவேண்டல்களும் இறைவனுக்கு ஏற்புடையன ஆகாது. எனவே, நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்னும் செய்தியைத் திருவிவிலியத்தின் பல இடங்களிலும் பார்க்கிறோம்.

1. முரண்பாடான இறைவேண்டல்: நம் அனைவருக்குமே பொருந்துகின்ற ஒரு முரண்பாடான இறைவேண்டலைஇம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது (மாற் 7:6) என இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டிச் சுட்டுகிறார் இயேசு. இது குறித்து நாம் எப்போதுமே விழிப்பாயிருக்க வேண்டும்.

2. இறுமாப்பான இறைவேண்டல்: பரிசேயரும் வரிதண்டுபவரும் இறைவேண்டல் செய்தது பற்றிய உவமையில் இயேசு, “பரிசேயரல்ல, வரி தண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்; ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக் 18:14) என்றார். இறைவார்த்தை, இறைவேண்டலில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் பிறரை இகழ்ந்து தீர்ப்பிடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

3. மேலோட்டமான இறைவேண்டல்:அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர் (எரே 12:2) என்று எரேமியா இறைவாக்கினரும், “தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை (ஓசே 7:14) என இறைவாக்கினர் ஓசேயா வழியாகவும் நாம் எச்சரிக்கப்படுகின்றோம். நம் இறைவேண்டல்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்றனவா? என்று ஆய்வு செய்து எப்போதும் விழிப்பாயிருப்போமாக.

4. இறைவனுக்கு ஏற்காத இறைப்புகழ்ச்சி: பல வேளைகளில் நம்மிடம் காணப்படும் இந்த முரண்பாட்டை தூய யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார். “தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?” (யாக் 3:9-11). எனவே, பிறரன்பில்லாத எந்த இறைவேண்டலும் இறைப்புகழ்ச்சியும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உணர வேண்டும்.

5. தகாத இறைப்புகழ்ச்சி:பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது. அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை. ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்பட வேண்டும். ஆண்டவரே அதை வளமுறச் செய்வார் (சீஞா 15:9) என்னும் வரிகள் சில வேண்டல்களை, இறைப்புகழ்ச்சியாக இருந்தாலும்கூட, இறைவன் புறக்கணிக்கிறார் என்று நம்மை எச்சரிக்கின்றன.

6. அறியாமையின் மன்றாட்டு: செபதேயுவின் மனைவி தன் மகன்கள் யாக்கோபு, யோவான் இருவரும் இயேசுவின் ஆட்சியில் வலப்புறமும் இடப்புறமும் அமரும் வரம் கேட்டபோது, இயேசு அவரிடம்நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை (மத் 20:22) என்று பதில் கூறினார். ஆம், சில வேளைகளில் இறைவனிடம் என்ன மன்றாட வேண்டும் என்பதை அறியாமல், இறைவனின் பார்வையில் நமக்குத் தேவையற்றவற்றை மன்றாடுகிறோம். “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்; அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்னும் இயேசுவின் அறிவுரை நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்னும் தெளிவைத் தருகிறது.

7. வெளிவேடம் நிறைந்த வேண்டல்:நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் (மத் 6:5) என்ற இயேசுவின் எச்சரிக்கை நம்மை விழிப்படையச் செய்யவேண்டும். நமது இறைவேண்டல் வாழ்வு பிறரது பாராட்டை, நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல; மாறாக, இறைவனின் ஏற்பிசைவைப் பெறுவதற்காக என்னும் தெளிவு நம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வேண்டும்.

இறைவேண்டலிலும்கூட சிக்கல்கள் இருக்கின்றன என்பதையே மேற்காணும் இறைமொழிகள் எடுத்துரைக்கின்றன. ஆகையால்எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் (லூக் 21:36) என்னும் இயேசுவின் எச்சரிக்கை சொற்களை இதயத்தில் இருத்தி இறைவேண்டல் செய்வோம்.

8. மன்னித்த பின் வேண்டுதல் செய்யுங்கள்: நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள் (மாற்கு 11:25). “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் (சீஞா 28:2).

9. பாவங்களை அறிக்கையிட்டு மன்றாடுங்கள்:என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது; ‘என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!” (தானி 9:4).

10. கட்டுப்பாடுடன் வேண்டுதல் செய்யுங்கள்:எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள் (1பேது 4:7).