news-details
சிறப்புக்கட்டுரை
பொதுநிலையினரை முன்னிலைப்படுத்திய திருத்தந்தை

பிரான்சிஸ்எனும் பெயருடன் கர்தினால் பெர்கோ லியோ திரு அவையின் தலைமை ஆயராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அதற்குள் அவருடைய பல மரபுமீறிய முன்னோடிச் செயல்பாடுகள் கத்தோலிக்கத் திரு அவையை அவர் மக்கள் திரு அவையாக மலரச் செய்யப் போகின்றார் என்பதை ஏற்கெனவே முன்னறிவித்துக் கொண்டிருந்தன. தலைமை ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே மக்கள் கூட்டத்தின் முன்புநான் ஒரு பாவிஎன அவர் அறிக்கையிட்டது, புனித வாரத்தில் உரோமையிலுள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த பல சமயத்து ஆண்-பெண் குற்றவாளிகளின் காலடிகளைக் கழுவியது என்பன அவற்றுள் சில.

இந்நிலையில் ஒரு நாள் (30-10-2013) புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கூடியிருந்த தாத்தா-பாட்டியருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4-5 வயதுள்ள ஒரு சிறுவன் எவ்விதத் தயக்கமும் இன்றி, திருத்தந்தை உரையாற்றிக் கொண்டிருந்த மேடையின்மீது ஏறி வந்தான்; கூட்டத்தைச் சில நொடிகள் கண்ணோட்டம் இட்டான். ஆனால், எத்தகைய தடங்கலோ தடுமாற்றமோ இன்றித் திருத்தந்தை புன்முறுவலுடன் தன் உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் பின்புறம் சென்று அவரது இருக்கையில் ஏறி அமர்ந்து சற்று நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான். கூட்டத்தினர் அனைவரது முகத்திலும் பெரும் அதிர்ச்சி! ஆனால், திருத்தந்தை அதைக் கண்டுகொள்ளாது தன் உரையைத் தொடர்ந்தார். பின்பு அச்சிறுவன் திருத்தந்தையின் இருக்கையிலிருந்து இறங்கி வந்து உரையாற்றிக் கொண்டிருந்த திருத்தந்தையின் காலைக் கட்டிப் பிடித்தான். திருத்தந்தையும் தன் உரையைத் தொடர்ந்தவாறே அவனது தலைமீது தனது கையை வைத்து அவனுக்கு ஆசி வழங்கினார்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி முன்னைய எந்தத் திருத்தந்தையின் முன்னிலையிலும் அரங்கேறியிருக்க முடியுமென நம்மால் கற்பனைகூட செய்திருக்க இயலாது. ஏனெனில், அத்தகைய நிகழ்வுகள் மக்களிடமிருந்து அவர் சற்றுத் தொலைவில் நிற்க, எவருடைய எத்தகைய இடையூறும் இன்றி உரிய ஒழுங்குமுறைப்படி சீராக நடைபெறும். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் எளிமை, குழந்தைகள்-சிறுவர்கள் உள்பட எல்லாரையும் நெருங்கி இனிதாகப் பழகும் பாணி, மனிதநேயத்தை முன்னிறுத்தி மரபுசார் நெறிமுறைகளைக் கைவிடும் போக்கு, ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் தங்களை உயர்நிலையினர் எனக் கருதிக்கொண்டு, மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் நிலையை விடுத்து, அவர்கள்ஆடுகளின் நெடி தங்கள்மீது படிந்திருக்கும் அளவுக்கு அவர்களுடன் தோழமை கொண்டிருக்க வேண்டும்  (நற்செய்தியின் மகிழ்ச்சி- 24) என அவர் விடுத்த தொடர் அழைப்பு என்பவைதாம் மேற்கூறிய நிகழ்வு நடந்தேற வாய்ப்பளித்தன எனலாம். திருத்தந்தையின் இருக்கையில் ஏறி அமர்ந்ததன் வழியாகத் திருத்தந்தை செயல்படுத்த விரும்பிய ஓர் அரிய, அழகான உண்மையை அச்சிறுவன் தன்னை அறியாமலேயே அடையாள முறையில் அனைவருக்கும் உணர்த்திவிட்டான். அது திரு அவையில் அனைவரும் முதன் முதலில் சகோதரர்-சகோதரிகள் என உறவானவர்கள்; சமமான மாண்பும் பொறுப்பும் உடையவர்கள்; திரு அவையின் இறையாட்சிப் பணியிலும் ஆட்சிப் பொறுப்பிலும்கூட அனைவரும் சம உரிமை உடையவர்கள் என்பதே.

நீங்கள் யாவரும் சகோதரர்-சகோதரிகளே!

திரு அவையின் உறுப்பினர் அனைவரும் தாம் ஆற்றும் பணிகளில்தான் திருநிலையினர்-பொது நிலையினர் என வேறுபடுகிறார்களே அன்றி தங்கள் சீடத்துவ இயல்பிலோ, இறைவனின் பிள்ளைகளுக்குரிய மாண்பிலோ, இறையாட்சிப் பணியாற்றும் பொதுவான பொறுப்புரிமையிலோ அல்ல; ஏனெனில், அவர்கள் அனைவரும்அரசரும் குருவும் ஆசிரியருமாகிய இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெற (திருமுழுக்குச் சடங்கு) குருக்களாக அருள்பொழிவு பெற்றவர்கள்; திருமுழுக்கில் பெறப்படும் அத்திருநிலைப்பாடு முதன்மையானது  மட்டுமல்ல; அடிப்படையானதும் ஒப்புயர்வற்றதும் ஆகும்.

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் இறையாட்சிப் பணிப்பொறுப்பிலும் சமமானவர்கள்என்கிறது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். ஆனால், சங்கம் முடிந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பும் அப்படிப்பினைகளை நடைமுறைப்படுத்த  எத்தனை தயக்கங்கள், தடுமாற்றங்கள், தடைகள், பின்னடைவுகள்! அவற்றையெல்லாம் தாண்டி, அப்படிப்பினையை நடைமுறைப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸின் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு வகைகளில் முனைந்தார்.

திருநிலையினர் ஆதிக்கத்தைக் கண்டித்தவர்

திருநிலையினர் ஆதிக்கம் ஒரு முள்; ஒரு கொடிய நோய்; அது ஆண்டவரின் மணமகளது (திரு அவையினது) முகத்தைக் கறைபடுத்தும் ஒரு வகை உலகியல் போக்கு; அது புனித நம்பிக்கையாளர்களாகிய கடவுளின் மக்களை அடிமைப்படுத்துகிறது.” இவை திருத்தந்தை பிரான்சிஸ் 2023, அக்டோபர் 25 அன்று ஆற்றிய உரையில் தனது வழக்கத்திற்கு மாறாகப் பயன்படுத்திய கடுமையான சொற்கள். திருநிலையினர் ஆதிக்கத்தை ஒரு பெருந்தீமை எனத் தனது தலைமை ஆயர் பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அவர் வன்மையாகத் தொடர்ந்து கண்டித்துள்ளார். “அருள்பணியாளர்களாகிய நாம் பொதுநிலையினரின் மேலதிகாரிகள் அல்லர்; மாறாக, அவர்களுடைய ஆயர்கள்என்றும் 2024 அக்டோபர் 1-இல் ஆற்றிய உரையில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுநிலையினருக்கு முன்னிலை

பொதுநிலையினரின் தனி அழைப்பு தங்களது சாட்சிய வாழ்வாலும் நற்செய்தி விழுமியங்களாலும் உலகியல் துறைகள் அனைத்தையும் ஊடுருவி இறையாட்சிக்கு ஏற்ப அவற்றை உருமாற்றுவதே. எனினும், திரு அவையின் அகவாழ்விலும் பணிகளிலும்கூட அவர்களுக்குச் சம உரிமையும் பொறுப்பும் உண்டு. ஏனெனில்பொதுநிலையினர் திரு அவையில் விருந்தினர்கள் அல்லர்; அது அவர்களது வீடு. தங்களது வீட்டைப் பராமரிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்... பொதுநிலையினரும், குறிப்பாகப் பெண்களும், அவர்களுடைய மனித மற்றும் அருள்வாழ்வுசார் திறமைகளும் அருங்கொடைகளும் பங்குகள் மற்றும் மறைமாவட்டங்களின் வாழ்வில் அதிகம் மதிக்கப்படுவது அவசியம்எனக் குறிப்பிடுகிறார் (2023, பிப்ரவரி 16-18).

பங்குகள் மற்றும் மறைமாவட்டங்களின் பணிப்பொறுப்புகளில் பொதுநிலையினரையும் தத்தம் அருங்கொடைகளுக்கு ஏற்ப சம உரிமையுடன் பங்கேற்கச் செய்யும் வகையில் அவரே பல முன்னோடிச் செயல்பாடுகளையும் ஆற்றியுள்ளார். திரு அவையின் பல்வேறு பணிகளில் பொதுநிலையினரைத் தலைமைப் பொறுப்புடன் பணியாற்ற அழைத்ததுடன், பொதுநிலையினர் திருப்பணிகளையும் பரவலாக்க ஊக்கப்படுத்தினார். மறைமாவட்ட தலைமைச் செயலகங்களில் கீழ்நிலைச் செயலர்களாக மட்டும் அல்ல; பொறுப்புரிமை உள்ள அதிகாரிகளாகப் பொதுநிலையினர் நியமிக்கப்படும் வகையில் வத்திக்கான் பேராயங்களின் முதல்வர்களாக பொதுநிலையினரும் பெண்களும் நியமனம் பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றினார்.

கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான ஆயர் மாமன்றம்

திரு அவையில் திருநிலையினரும் பொதுநிலையினரும் சகோதர உறவுடனும் சமத்துவப் பணிப் பொறுப்புடனும் இணைந்து செயல்படத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னெடுத்த மாபெரும் முயற்சிதான் 2023-2024 ஆண்டுகளில் நடந்த ஆயர் மாமன்றம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பதை மைய ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது அடிமட்டத்திலேயே நடந்த கலந்துரையாடல்களில் தொடங்கியது. அனைவருடைய கருத்துகளும் கேட்டு  மதிக்கப்பட்டு, அனைத்து நிலையினருடைய பதிலாள்களுடன் இணைந்து முடிவுகள் எடுக்கும் ஒரு புதிய நடைமுறையை அனுபவம் ஆக்கியுள்ளது. அதனால் இதுவரை ஆயர்கள் மட்டுமே பங்கேற்ற ஆயர் மாமன்றம் அனைத்துலகத் திரு அவையின் மாமன்றம் ஆகியது.

இறுதியாக...

ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களை முன்னிறுத்தியே இன்றும் செயல்படும்  திரு அவைக்கு அவர்கள் பொதுநிலையினருடன் இணைந்து பயணிக்கும் மக்கள் திரு அவையாக வளரவும் மலரவும் திருத்தந்தை பிரான்சிஸ் பாதை காட்டியுள்ளார். அதே பாதையில் அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒரே அரச குருத்துவக் குலமாக இணைந்து பயணித்து, இறையாட்சியின் அடையாளமாகவும் கருவியாகவும் செயல்படுவதே வருங்காலத் திரு அவைக்கு அவர் விட்டுச்செல்லும் மாபெரும் அழைப்பும் அறைகூவலும் ஆகும்.