7. ‘ஆன்மிகக் கொடைகள்’ குறித்து எழும் சில கேள்விகள்
மரியா
காட்சி அனுபவங்களிலிருந்து வெளிப்படும் நேர்மறை வரன்முறைகளில் முக்கியமானதாக ‘ஆன்மிகக் கொடைகள்’ மேற்கண்ட புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, செப ஆர்வம், மனமாற்றம், இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி போன்றவை ஆன்மிகக் கொடைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொதுவாகத் தனிப்பட்ட ஒரு பக்தி முறையை வெளிப்படுத்துகிறதே அன்றி, இன்றைய பிரச்சினைகளைத் தொட்டு, சமூக அக்கறையும் ஈடுபாடும் கொண்ட நம்பிக்கை வாழ்க்கை முறையைக் கட்டியமைப்பதாகத் தெரியவில்லை. இந்நிலைக்கு மூன்று எடுத்துக்காட்டுகளை இங்குக் குறிப்பிடலாம்:
1) இந்தியா
உள்பட சமயப் பக்தியிலும் பற்றிலும் சிறந்து விளங்குவதாகக் கருதப்படும் பல நாடுகள் ஊழல்
மலிந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களைப் பிடித்துள்ளன. அதேவேளையில், சமயப் பற்றும் பக்தியும் குறைந்த, மறைந்த நாடுகளாகக் கருதப்படுபவை ஊழல் குறைந்த நாடுகளாக அறியப்படுகின்றன. இப்பின்புலத்தில் சமூகச் சீர்கேடுகளைத் தொட்டுக் களையாத ‘பொதுமக்கள் பக்தியை’
(popular devotion) எப்படிப் புரிந்துகொள்வது?
2) ‘பொது வீடு’ என்றழைக்கப்படும்
நமது பூமிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இன்று உருவெடுத்திருப்பது சூழல் மாசு. லீட்ஸ் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், உலகளவில் நெகிழிக்கழிவின் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது இந்தியா என்றும், இங்கு ஆண்டுக்குப் பத்து மில்லியன் டன் நெகிழிக் கழிவைக் கொட்டிச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘பக்தகோடிகள்’ என்றழைக்கப்படும்
திருப்பயணிகள் கூடும் திருத்தலங்கள், அவற்றைச் சுற்றியுள்ள வளாகங்கள், கடற்கரைகள், ஆறுகள், குளங்கள் போன்றவை நச்சுக்கழிவுகளால் நாசமாக்கப்படுவதை அறியாதவர் இல்லை. இதேபோல் சமய விழாக்களிலும், திருத்தலங்களிலும் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், விண்ணைப் பிளக்கும் வெடிகள் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுகள் மனிதர்களையும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாக்கும் கொலையாளிகளாக உருவெடுத்துள்ளன. அதனால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் ஆன்மிகக் கனிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டுமல்லவா!
3) தனிப்பட்ட
பக்திமுறை வாழ்வை எடுத்துக் கொண்டாலும், மரியா காட்சி கொடுத்த பல திருத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள்
உண்மையான மனமாற்றம் பெறுகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனது பணித்தள அனுபவத்திலிருந்து நான் பார்த்தது சிந்தனைக்கு உரியது. ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் வேளாங்கண்ணிக்குத் திருப்பயணம் செல்லும் பக்தர்கள் உண்டு. ஆனால், இந்தத் திருப்பயணம் இவர்களின் குடும்ப / குழும வாழ்வில் ஆண்டுக்கணக்காகக் குமைந்து கொண்டிருக்கும் பிளவுகள், பிணக்குகள், வன்மங்கள், குரோதங்கள், பகைமைகள் போன்ற எதையும் தொட்டு மாற்றம் ஏற்படுத்தியதாக நான் பார்த்ததில்லை. இதேபோல், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருப்பயணத்திற்குப் பின்னர் மீண்டெழுந்ததாகவும் கூறுவதற்கில்லை.
மேலும் சொல்வதென்றால், காட்சி அனுபவங்களின் திருத்தலங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கக் கிறித்தவர்களில் பலர் தங்களது பங்குகளில் நடைபெறும் ஞாயிறு திருப்பலிகள், திருவிவிலிய மதிப்பீடுகளை உள்ளடக்கிய சமூக ஈடுபாடு மற்றும் பிறரன்புப் பணிச் செயல்பாடுகளில் பங்கேற்பதும் இல்லை. இவ்வாறு கிறித்தவ வாழ்வின் புதுப்பித்தலிலும், திரு அவையின் அருள்பணியிலும் ஈடுபாடில்லாத ‘பொதுமக்கள் பக்தியை’ எப்படிப் புரிந்துகொள்வது?
(தொடரும்)