news-details
ஞாயிறு மறையுரை
மே 11, 2025, பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) நல்லாயன் - இறையழைத்தல் ஞாயிறு; திப 13:14,43-52; திவெ 7:9,14-17; யோவா 10:27-30 - ஆயர் எவ்வழி... அவ்வழி நாம்!

உயிர்ப்புக் காலத்தின் 4-ஆம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்றும், ‘இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள்என்றும் சிறப்பிக்கின்றோம். நல்லாயராம் இயேசுவை நினைவுகூரும் இன்றைய வாசகங்கள் அவரைப் போன்று பொறுப்புடன் ஆயரின் வழியில் நடக்க நம்மை அழைக்கின்றன.

ஆடுகளும் ஆயனும் திருவிவிலியத்தில் மிக முக்கிய உருவகங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த இஸ்ரயேல் மக்கள் அத்தொழில் அடிப்படையிலான உருவகங்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆயர் பணி இஸ்ரயேல் மக்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும் கலாச்சாரமாகவும் இருந்துள்ளன. ஆடுகள் எப்போதும் மென்மையானதாகவும் ஆயரின் குரலைக் கேட்பவையாகவும் காணப்பட்டன. மந்தையைச் சுற்றி எப்போதும் ஆபத்துகளும் நிறைந்திருந்தன. எனவே, ஓர் ஆயரின் மிக முக்கியமான பணி தம் மந்தையை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், மேய்ச்சல் நிலத்திற்குக் கூட்டிச் செல்லுதல், தண்ணீர் இருக்கும் பகுதியை அடையாளம் காணுதல், நேரிய வழியில் நடத்திச் செல்லுதல், சினையாடுகளைப் பாதுகாத்தல், குட்டி ஆடுகளைத் தூக்கிச் சுமத்தல் போன்றவையாகும்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் ஆயர்களாக இருந்திருக்கிறார்கள். தாவீது மந்தை மேய்ப்பவராக இருந்து பின்னர் இஸ்ரயேலின் ஆயராக மாறினார் (2சாமு 7:8). பின்னாளில் இஸ்ரயேல் மக்கள் தம் அரசர்களையும் (1அர 22:17; எரே 10:21; 23:1-2) தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயராகப் பார்த்தனர். ஓர் ஆயருக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் தம் அரசர்களில், தலைவர்களில் எதிர்பார்த்தனர். இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்புப் பெற்றிருந்த ஆயர்கள் படிப்படியாகத் தங்கள் மதிப்பை இழந்தனர்.

ஆயர்கள்-தலைவர்கள் நல்லவர்களாக இல்லை; அவர்கள் ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்களாக இருந்தனர். எசேக்கியேல் இறைவாக்கினர் நீதி நேர்மையற்றுச் செயல்பட்ட ஆயர்களான அரசர்கள், மேய்ப்பர்கள், தலைவர்கள் போன்றவர்களின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார் (எசே 34:1-10). இந்த ஆயர்கள் மக்களுக்காக வாழாமல், தன்னலம் நிறைந்த அதிகாரத்தோடு மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர் (34:7-8).

தலைவர்களும் அரசர்களும் தவறியபோது அவர்களைக் கண்டித்த இறைவன், தம்மையே நல்ல ஆயராக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் (எரே 10:21; எசேக் 34:11-31; செக் 10:3; எசா 44:28). தாவீதின் மரபிலிருந்தே நல்ல ஆயர் தோன்றப்போவதாக உறுதி கூறுகிறார் (எசே 34:23-24). அந்த நல்ல ஆயரே வரவிருக்கும் மெசியா (எசா 40:11). இன்றைய நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயராகக் காட்டுகிறார்.

நல்லாயன் என்றதுமே இயேசு ஓர் ஆட்டுக் குட்டியைத் தம் தோள்மீது அல்லது மார்போடு அணைத்துச் சுமந்துசெல்லும் அமைதியான இயேசுவின் உருவம்தான் முதலில் நம் உள்ளங்களில் பதிகின்றது. ‘நல்ல ஆயர்என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. நல்ல ஆயர் தம் ஆடுகளின் பெயர் அறிந்தவராக, அவற்றின்மீது அக்கறை கொண்டவராக, அவற்றை வழிநடத்தப் பாதை தெரிந்தவராக, ஆபத்து காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிரிகளை எதிர்த்துப் போராடுபவராக, தக்க வேளையில் உணவளிக்கின்றவராகத் தம்மை அடையாளப்படுத்துகின்றார் (யோவா 10:1-15). நல்ல ஆயர் ஆடுகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்; ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுக்க முன் வருவார். இன்றைய நற்செய்தியில் யோவான் இயேசுவைத் தலைசிறந்த, தன்னிகரற்ற ஒரு நல்ல ஆயராகக் காட்டுகிறார்.

முதலாவதாக, நல்ல ஆயர் என்பவர் தம் ஆடுகளை நன்கு அறிபவராக இருப்பார். இயேசுவே நல்ல ஆயர். அவர் சமுதாயத்தில் அடையாளமிழந்து, ஒடுக்கப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுடன் தம்மை அடையாளப்படுத்தி, அவர்களின் பெயர்களை நன்கு அறிந்து தம் மந்தையை அழைத்தார் (யோவா 10:3). நல்ல ஆயர் தம் ஆடுகளின் நிலை அறிந்து செயல்பட்டார். நலிவுற்ற ஆடுகளைத் திடப்படுத்தினார்; தளர்வுற்ற ஆடுகளைத் தம் தோள்மீது சுமந்து சென்றார். வீழ்ந்து கிடக்கும் ஆடுகளுக்கு வலுவூட்டினார். காயப்பட்ட ஆடுகளை நலமாக்கினார். ஆடுகளின் தேவைகளை முதன்மையாக்கிச் செயல்பட்டார். இயேசுவே நல்ல ஆயராக இருந்து செயல்படுவதால், ஆடுகளுக்கு யாதொரு குறையுமில்லை (திபா 23). ஆயரான இயேசுவின் திருமுழுக்குப் பெற்ற நாம் அவர் மந்தையைச் சேர்ந்த ஆடுகள். இன்றைய பதிலுரைப் பாடலும், “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்என்கிறது. நமது பலவீனத்தையும் இயலாமையையும் தேவைகளையும் நன்கு அறிந்து, நம்மைக்  கரிசனையோடு காக்கும் நல்லாயனாம் இயேசுவின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவதாக, நல்ல ஆயர் என்பவர் தம் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களைப் பாதுகாக்க வல்லவராக இருப்பார். ஆயர் தனது ஆடுகளைத் திருடரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் காப்பாற்றுகிறார். ஆடுகளுக்கு ஓநாயாலும், மற்றப் பிற காட்டு விலங்குகளாலும் ஆபத்துகள் ஏற்படுவது போல, மக்களுக்கும் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும்போது, அவற்றை இனங்கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் ஆயரின் தலையாயக் கடமை. இப்பணி ஆபத்தானதும் கூட. ஆடுகளைக் காப்பாற்றும் பொருட்டு ஆயருக்கு ஓநாய்களாலும், பிற கொடிய விலங்குகளாலும் ஆபத்து ஏற்படுவதுபோல, தீய சக்திகளும் தலைவரைத் தாக்கலாம்; உயிரையே பறிக்கலாம் (இந்தியாவில் அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணி. ஸ்டேன் சுவாமி, மறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் போன்றோர் கொல்லப்பட்டதுபோல). இருப்பினும், ஆடுகளுக்காகத் தன்னுயிரையும் கையளிக்க முன்வர வேண்டும். இயேசு நல்ல தலைவர், நல்ல ஆயர். அவர் தம் மக்களின் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு மக்களை அன்பு செய்தார் (10:12). நல்லாயராம் இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் வறியோர், நோயாளிகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், சமுதாய விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர் யாவரும் மனித மாண்போடு, சமத்துவத்தோடு வாழ்ந்திட தம் உயிரையே கையளித்தார் (10:15).

இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் மூலம், பிறருக்காகவே பணியாற்றும் தன்னிகரற்ற புதிய தலைமையை, பிறரின் மாண்புநிறை வாழ்விற்காகப் பணியாற்றும் தலைமைத்துவத்தின் புதிய பண்பாட்டைத் தொடங்கி வைத்தார். இயேசுவைப் போன்ற நல்ல ஆயர்களைக் கடவுள் காலத்தின் தேவை உணர்ந்து திரு அவைக்குத் தந்து கொண்டிருப்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இந்நாளில் 12 ஆண்டுகள் திரு அவையின் ஒப்பற்ற பணியாளராக, மக்களின் திருத்தந்தையாக, போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுவற்றவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து, நல்ல ஆயராகப் பணியாற்றி இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

2013, மார்ச் 19-ஆம் நாள் புனித யோசேப்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவையின் தலைவராகப் பணியேற்ற அவ் வேளையில், பணியேற்புத் திருப்பலிக்கு முன் திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம் நீட்டி அவரால் தொடமுடியவில்லை. உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, அப்போதே மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓர் இளகிய, மென்மையான மனத்தையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் எப்போதும் வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், “தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்லஎன்றும்தலைவர் அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாதுஎன்றும் தெளிவாக்கினார்.

ஏழைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாதுஎன்று அடிக்கடி வலியுறுத்திய திருத்தந்தை போர், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தைக் கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியும் நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர்-சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்தார். “மக்களைப் போலவே நானும் ஒரு பாவிஎன்றும், “மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணிஎன்றும் கூறி, கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக, சிறந்த முன்மாதிரிகையாக, நல்ல ஆயராகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை மூவொரு  கடவுளின் எல்லையற்ற இறை இரக்கத்தில் அர்ப்பணித்துச் செபிப்போம்.

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறித்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் இன்று மட்டுமல்லாது, என்றென்றும் தொடர்ந்து முளைக்கும் என்பது திண்ணம்.