போர், பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல், காற்று-நீர் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியைத் தொலைத்துள்ளன. எல்லா மனிதர்களுமே எந்த நெருக்கடியுமற்ற ‘அமைதியான வாழ்வு’ அமைய வேண்டும் என்றே விரும்புகின்றனர். நமது தேடல் எப்போதுமே நீதி மற்றும் அமைதியை நோக்கியே இருக்கிறது. குடும்பங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். நம்மைச் சுற்றிய சமூகம் அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நமது நாடு அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். ‘உலக அமைதி’ என்பது ஒவ்வொரு மனிதருக்கான உன்னதத் தேவையாகிறது.
இன்று
ஆண்டின் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. அடுத்த ஞாயிறு ஆண்டவரின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். விரைவில் இயேசு தங்களை விட்டுச் சென்றுவிடுவார் என்ற வேதனையில் இருக்கும் சீடருக்கு இயேசு ஆறுதலும் அமைதியும் கொடுத்து ஊக்கப்படுத்துவதே இன்றைய வாசகங்களின் மையச்செய்தியாக அமைகின்றது.
இன்றைய
நற்செய்தியில் இயேசு தம்மீது அன்பு கொள்பவர் செய்யக்கூடிய செயல்களையும் தூய ஆவியாரின் செயல்பாடுகளையும், தம்முடைய அமைதியைப் பற்றியும் தெளிவூட்டுகிறார். முதலில், இயேசுவை அன்பு செய்யக்கூடியவர்கள் செய்யக்கூடிய செயல்கள் என்பவை தந்தை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், அவருடன் கொண்டிருக்கும் ஆழமான உறவும் என்பதாகும். தாம் தொடர்ந்து இவ்வுலகில் இருக்கப்போவதில்லை என்பதை எடுத்துக்கூறி, தமக்குப் பின்வரும் தூய ஆவியார் சீடரோடு தொடர்ந்து இருப்பார்; தம்மைப் போன்று சீடருக்குக் கற்றுக்கொடுப்பார் (யோவா 14:26); நினைவூட்டுவார்; சான்று பகர்வார் (15:26); முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் (16:13) என்கிறார். இவ்வாறு துணையாளர் (14:17) வழியாகத் தாம் சீடரோடு இருந்து செயல்படுவதாக உறுதி கூறுகிறார்.
இயேசு
அமைதியையே அளிக்க வந்தவர். அவர் பிறப்பின்போதே “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
என வானவர் பாடினர். அவர் பலரை நலப்படுத்தியபோது “அமைதியோடு போ” என்றுதான் கூறினார். அவர் உயிர்பெற்று எழுந்து சீடரைச் சந்திக்கும்போதெல்லாம் “உங்களுக்கு அமைதி உண்டாகுக”
என வாழ்த்தினார். தமது பிரிவின் நேரத்திலும் தம் சீடருக்கு ‘அமைதி’ எனும் கொடையை வழங்குகிறார்.
இயேசு
தரும் அமைதி உண்மையானது; நீதியானது. எனவேதான் “நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். அமைதி இருவகைப்படும்: ஒன்று, உலகம் தரும் அமைதி; மற்றொன்று, இயேசு தரும் அமைதி. உலகம் தரும் அமைதி என்பது போரும் வன்முறையும் இல்லாத ஒரு நிலை என நினைக்கிறோம். இராணுவத்திற்கும்
போர்க்கருவிகளுக்கும்
பல இலட்சம் கோடி செலவிடுவதால் கிடைப்பதே அமைதி என உலக நாடுகள்
தங்கள் செயல்களை நியாயப்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி ஆயுதங்களாலும் அடக்குமுறைகளாலும் கட்டமைக்கப்படுகின்றன. இது ஒரு போலியான, மயான அமைதி! ஆனால், இயேசு தரும் அமைதி உண்மையிலிருந்தும் நீதியிலிருந்தும் பிறப்பது. அது அவரது இதயத்திலிருந்து வெளிப்படுவது.
இயேசு
உணர்த்தும் அமைதி என்பது அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார அறம் காத்தல், சமய-இன-மொழி-நாடு
வேறுபாடுகளைக் களைதல், நேர்மையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், உடன்பிறந்த உறவுடன் வாழ்தல், மாண்பைப் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்குதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொள்ளல். இவையே அமைதிக்கான அரண்கள். இவை அனைத்தும் நம் உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும். வேற்றுமை பாராது அருகில் வாழும் சக மனிதர்களை அன்போடும்
உடன்பிறந்த உணர்வோடும் பழகும்போது அங்கே அமைதி மலரும். இச்சிந்தனைக்கு எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம்.
முதல்
வாசகம் திரு அவையின் முதலாவது பொதுச்சங்கம் ‘எருசலேம் திருச்சங்கம்’ தோன்றிய
வரலாற்றுத் தேவையைப் பற்றியும் அதில் எடுக்கப்பட்ட முடிவைப் பற்றியும் விவரிக்கிறது (திப 15:1-29). தொடக்க காலத் திரு அவையில் முதலில் இணைந்தவர்களும் அனைத்துத் திருத்தூதர்களும் யூத மதத்திலிருந்து வந்தவர்களாகவோ அல்லது யூதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களாகவோ
இருந்தனர். தொடக்கத் திரு அவையில் கிறித்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாத பிற இனக் கிறித்தவர்களும் திரு அவையில் இணைந்து கொள்கின்றனர். திரு அவை எருசலேமை விட்டு வெளியில் சென்றபோது, முக்கியமாக அந்தியோக்கியாவிற்கும், அத்துடன் பவுலுடைய மறைபரப்புப் பணியினால் சின்ன ஆசியாவிற்கும் பரவத் தொடங்கியபோது திரு அவையில் இணைந்து கொண்ட யூதரல்லாதவர்கள் இவர்கள்.
இந்த
வேளையில் யூதக் கிறித்தவர்களுக்கும், யூதரல்லாத கிறித்தவர்களுக்கும் மோசேயின் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பல விவாதங்களும் கருத்து
முரண்பாடுகளும் தோன்றின. யூதக் கிறித்தவர்கள் தங்கள் மோசேயின் சட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய விருத்தசேதனத்தை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடுகின்றனர். பிற இனக்
கிறித்தவர்கள் மோசே சட்டத்தைக் கடைப்பிடிக்காவிடில் ஒழுக்க விழுமியங்கள் பலமற்றுப் போகும்; யூதக் கிறித்தவர்களின் தனித்தன்மை திரு அவையில் குறைகையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அவர்கள் நலிந்து விடுவர் என அஞ்சினர். ஏனெனில்,
உரோமை அரசு தன் எல்லைக்குள் யூத மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்தப்
பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பேதுரு தான் கொர்னேலியு வீட்டில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு யூதச் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என விளக்குகிறார் (திப
10:44-47). பவுலும் பர்னபாவும் தங்களது மறைபரப்புப் பணி அனுபவத்தில், ‘இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல’ எனப் பேசுகின்றனர் (கலா 3:24-25). இறுதியாக “நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?”(திப 15:10) என்று பேதுருவும், “இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் சுமத்தக் கூடாது”
(15:28) என்று யாக்கோபுவும் திருவிவிலியச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி, ‘கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது’
என்று இரண்டு குழுக்களுக்கும் பொதுவான ஒரு முடிவை எடுத்தனர். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டனர். இயேசு இறப்பதற்கு முன்னதாகத் தம் சீடருக்கு வாக்களித்ததுபோல, தூய ஆவியார் திருத்தூதர்களோடு இருந்து வழிநடத்தியதையும் கற்றுக்கொடுத்ததையும் அமைதியை ஏற்படுத்தியதையும் இன்றைய முதல் வாசகத்தில் காண முடிகிறது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், எருசலேம் ஆலயம் உரோமையரால் தரைமட்டமாக்கப்பட்ட பின்னணியில் (கிபி 70) யோவான் கண்ட காட்சியை விவரிக்கும்போது, கடவுளும் ஆட்டுக்குட்டியுமான இயேசுவே கோவில் என்றும், கோவில் இல்லாத குறையை இயேசுவே நிரப்புவார் என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான இருளை அகற்றும் ஒளி இயேசுவே என்றும் தம் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி.
போர்,
வன்முறை, பகைமை, ஆதிக்கம், பேராசை போன்ற குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில், இயேசு தரும் அமைதி என்னென்ன?
அ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையிலிருந்து விளையும் கனி; அதாவது, ஆயிரம் துன்பங்களுக்கு நடுவிலும் இறைவனை மனதார நினைத்து, நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வாழ்வோரிடம் தங்கும் அமைதி.
ஆ)
இயேசு தரும் அமைதி என்பது எதிர்நோக்கினால் விளையும் அமைதி. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருப்பதில் கிடைக்கும் அமைதி (தீத் 2:13).
இ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுளிடமே நம்மையே முழுமையாகச் சரணடைதலில் கிடைக்கும் அமைதி. அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறியதுபோல!
நிறைவாக,
இயேசு தரும் அமைதி என்பது நல்ல உறவில் பிறக்கும் அமைதி. திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள்” என்பதை
உள்ளத்தில் ஏற்று, அனைவரோடும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதால் மலரும் அமைதி. உயிர்களை நேசிப்பதும், இயற்கையைக் காப்பதும், மனித உரிமைகளை மேம்படுத்தலும், மனித உயிர்களைப் பேணுதலும், ஏழைகளை மதித்தலும், ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும், சமய சுதந்திரத்தைக் காப்பதும், வன்முறையைத் தவிர்ப்பதுமே இயேசு தரும் அமைதியின் திறவுகோல்கள்!