news-details
தலையங்கம்
குடிமைப் பணியும் தமிழ்க் குடியும்!

நம் நாட்டின் எல்லாத் துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் பெற்று, நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளுமைகள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants). அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் உருவாக்கத்திலும் அதை அமல்படுத்துவதிலும் குடிமைப்பணி அதிகாரிகளின் பங்களிப்பு அளப்பரியது. இப்பணிக்கு, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் விருப்பமும், கல்விப் புலமையுடன் கூடிய நிறைந்த அனுபவமும் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்தும் இத்தேர்வில் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க விடாமுயற்சியும் பயிற்சியும் உயிர்நாளமாய் அமைய வேண்டும். தெளிவான இலக்கு, கூர்மைப்படுத்தப்பட்ட நோக்கம்திட்டமிட்ட பயிற்சி, பொது அறிவு, கூடுதல் திறமைகளில் கவனம், மனவலிமை, ‘வெற்றி நிச்சயம்எனும் தன்னம்பிக்கை ஆகிய படிநிலைகளில் பயணிக்கின்றபோது, வெற்றி என்பது யாவருக்கும் எளிதில் கைகூடுகிறது.

அகில இந்தியப் பணிகள், மத்திய குடிமைப் பணிகள் (குரூப் A, குரூப் B) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வுகளில், 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்ட யாவரும் பங்கெடுக்க வயதுவரம்பு இருந்தபோதிலும், சிறப்புப் பிரிவின் கீழ் தனி இடஒதுக்கீட்டின்படி 40 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வின் முதற்கட்டத் தேர்வு அறிவிப்பிலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலான முழு செயல்முறையும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நடைபெறுகிறது. தொடர் வெற்றி காணும் ஒரு பங்கேற்பாளரின் தேர்வு நேரம், ஒரு வருட கால முழுமையான செயல்முறையில் 32 மணி நேரம் தேர்வில் பங்கேற்கிறார்.

ஒன்பது தாள்கள் கொண்ட முதன்மைத் தேர்வு முடிந்ததும் ஆளுமைத் தேர்வு எனப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இந்த நேர்காணலின் நோக்கம், ஒரு பணிக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டு அமர்வே தவிர, பங்கேற்பாளரைத் திணறடிப்பதற்கான முயற்சி அல்ல! திறமையான பாரபட்சமற்ற தேர்வுக் குழுவால்  நடத்தப்படும் இந்த ஆளுமைத் தேர்வு, பங்கேற்பாளரின் மனத்திடத்தையும் அறிவுத்திறனையும் மதிப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளருடைய அறிவுசார் குணங்களை மட்டுமல்ல, சமூகப் பண்புகள், நடப்புச் செயல்பாடுகள்மீது கொண்டிருக்கும் ஆர்வம், அதை மதிப்பிடும் விதம், மனவலிமை, சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கும் திறன், விமர்சனப் பார்வை, தெளிவான தக்க ரீதியான விளக்கம், தீர்ப்பின் சமநிலைபன்முகத்தன்மை, கொண்டிருக்கும் ஆர்வத்தின் ஆழம், சமூக ஒற்றுமை பற்றிய புரிதல், தலைமைத்துவத்திற்கான திறன், அறிவுசார் செயல்பாடு, தார்மீக ஒருமைப்பாடு யாவும் மதிப்பிடப்பட வேண்டிய குணங்களாகக் கணிக்கப்படுகின்றன. நேர்காணல் என்பது நுட்பமான, கடுமையான குறுக்கு விசாரணை என்ற மன நிலையைத் தவிர்த்து, இது அறிவார்ந்த ஓர் ஆளுமையைத் தேடுவதற்கான முயற்சி எனக் கொள்ள வேண்டும்.

2024-இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில், இந்திய அளவில் 5.83 இலட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் 1009 பேர் (2.5%) முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த காலங்களைவிட தற்போது  இத்தேர்வில் சிறப்பாகத் தடம் பதித்திருக்கிறார்கள். 2023-இல் தமிழ் நாட்டிலிருந்து 45 பேர் தேர்வாகியிருந்த நிலையில், 2024-இல் 54 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாடு எதிர்பார்த்த அளவில் தேர்ச்சி காணாத நிலையில், இந்த முறை நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன. அதேவேளையில், 2023-இல் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டில் முதன்மையான மாணவராகத் தேர்வானவர் தேசிய அளவில் 107-வது இடத்தையே பெற்றார். உயர்கல்வியின் மொத்தச்சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருந்தும், குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது கவலையளிக்கும் செய்தியாகவே நீடித்தது.

இவ்வேளையில், குடிமைப் பணிக்குப் பயிற்சி நிறுவனங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் எனவும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும்நான் முதல்வன்திட்டத்தின் வாயிலாகக் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு பத்து மாதங்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் பாராட்டத்தக்கதே! மேலும், நேர்முகத் தேர்வுவரை செல்பவர்களுக்கு, ரூபாய் 50,000/- வரை வழங்கப்படும் என இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாகக் குடிமைப்பணித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் குடும்பப் பின்னணியோ, பொருளாதாரச் சூழலோ  அமையாததால், இத்தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; குடிமைப் பணியின் சிறப்புகள் குறித்துப் பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டப்பட வேண்டும்; பாடக்கல்வியுடன் சிந்திக்கும் திறன், பகுப்பாய்வுத் திறன் போன்றவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அரசு முன்னெடுக்கும் பல முயற்சிகளில் கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்பதையும் நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்!

வானம் வசப்படும்; வானவில்லும் கைப்படும்என்று வீண் வசனம் பேசுவதைத் தவிர்த்து, கடின உழைப்பிலும் விடாமுயற்சியிலும் தன்னம்பிக்கையிலும் இளையோர் உறுதிபட வேண்டும். வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது; நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை! ‘நாளை இருப்போம்என்ற நம்பிக்கையில்தான் நாம் இன்று பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, ‘கைகூடும்என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றபோதுதான் எதுவும் இங்கே சாத்தியமாகும்!

என்னால் முடியும்என்ற நம்பிக்கையே விடியலைத் தரும். ‘எனக்குத் தேவையான அனைத்து ஆற்றலும் எனக்குள்ளேயே உண்டுஎன உணர்பவன்தான் வெற்றிப் படியில் எட்டி நடக்கிறான். புறச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நம்மை நாமே ஆழ்மன எண்ணங்களால் ஊக்குவித்துக் கொண்டு, நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சேர்த்து உயர்த்தக்கூடிய மேலான குறிக்கோளோடு இன்றைய  இளையோர்  பயணிக்க வேண்டும்.

பொத்தாம் பொதுவாகப் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்காமல், என்னவாக வேண்டும் என்ற குறிக்கோள் நம்மில் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்; அதை அடையத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் துறையில் சாதித்தவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களைவிடச் சிறந்த சாதனை புரிய என்ன செய்ய வேண்டும் எனவும், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தையும் கவனத்தையும் செலவழிக்காமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒருநாள் நாம் நம் இலட்சியத்தை அடைய முடியும்.

இதற்குச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் வைர வரிகள் வளமான வாழ்வியலை நமக்கு முன்வைக்கின்றன:

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்:

உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;

செல்லும் தேஎத்துக்கும் உறுதுணை தேடுமின்!’

அதாவது, சிறந்த சான்றோர்கள் ஒன்றுகூடும் அவையில் அமர்ந்து, அந்த மேன்மக்கள் வழங்கக் கூடிய மிகச்சிறந்த கருத்துகளை எல்லாம் உள்வாங்கி, அதன்படி வாழ்வைச் செம்மைப்படுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அறத்துக்குப் புறம்பான சிந்தனைகளைக் கொண்டவர்கள் கூடும் இடத்தை விட்டு அகல வேண்டும். கிடைத்தற்கரிய வாழ்நாளை வீணாக்கி விடாது, ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். கடமைகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அந்தக் கடமைகள் அனைத்திலிருந்தும் விலகிவிடாமல் பொறுப்புடன் வாழ்ந்து, அதை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு தருணத்தையும் நன்முறையில் பயன்படுத்த வேண்டும். மறுமை வாழ்வுக்குச் செல்லும்போது இம்மண்ணில் பின்பற்றிய அறம் என்பதைத் துணையாக அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆகவே, பெற்றோரே, ஆட்சியாளர்களேவளமான நாட்டிற்கு நலமான கல்வியாளர்கள் வேண்டும். நம் இளையோர் உயர்ந்த கல்வியாளர்களாகவும் நேரிய ஆட்சியாளர்களாகவும் நிர்வாகத் திறன் கொண்ட தலைவர்களாகவும் சிறந்த, வளமான, வலிமையான இந்தியாவைக் கண்முன் கொண்ட சிற்பிகளாகவும் உருவாக அவர்களை ஊக்குவிப்பது நமது கடமையாகிறது!

இளையோரே! எழுந்து வாருங்கள்...

வென்று காட்டுங்கள்!

நாளைய இந்தியா உங்கள் கைகளில்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்