பழைய ஏற்பாடு தாய்மையைக் கடவுளின் கொடையாக மட்டுமல்லாமல், அன்னையர்கள் மற்றும் அவர்களின் மகன், மகள்களின் நோக்கத்தின் சிறப்பான இணைப்பாகவும் பரிந்துரைக்கின்றது.
1. தாய்மை
என்பது கடவுளின் ஒரு சிறந்த கொடையாகும். காயினைப் பெற்றெடுத்த பின் ஏவாள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்
(தொநூ 4:1). இந்த வார்த்தைகளோடு தொடக்க நூலானது படைத்தவரின் நற்குணத்திலிருந்து ஊற்றெடுக்கும் அருள் மற்றும் மகிழ்ச்சியாக மனித வரலாற்றின் முதல் தாய்மையைக் காட்டுகின்றது.
2. இதைப்போலவே,
ஈசாக்கின் பிறப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொடக்க வரலாற்றிலிருந்து விவரிக்கப்படுகின்றது.
பிள்ளைகளின்றி
இருந்த மற்றும் முதிர்ந்த வயதை எட்டியிருந்த ஆபிரகாமுக்கு வானத்து நட்சத்திரங்களைப் போன்று எண்ணற்ற வழிமரபினருக்குக் கடவுள் வாக்களிக்கின்றார் (ஒப்பிடுக. தொநூ 15:5). மனிதனுக்கான கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் இந்த வாக்குறுதியானது குடிமுதல்வரால் (Patriarch) நம்பிக்கையோடு
வரவேற்கப்படுகிறது. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்”
(தொநூ 15:6).
இந்த
வாக்குறுதியானது ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்த வேளையில் ஆண்டவர் கூறிய பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தப்படுகின்றது:
“உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்” (தொநூ
17:4).
இந்த
வழக்கத்திற்கு மாறான மற்றும் இரகசியமான நிகழ்வுகள் மனித எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து ஓர் உயிரைப் பெற்றெடுத்த சாராவின் தாய்மையானது கடவுளுடைய இரக்கத்தின் கனியை அனைத்திற்கும் மேலாக வலியுறுத்துகின்றது: “அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்”
(தொநூ 17:15-16).
தாய்மையானது
கடவுளின் தீர்க்கமானதொரு கொடையாகக் காட்டப்படுகின்றது. கடவுள் நிகழ்த்தவிருக்கும் வியக்கத்தக்க மற்றும் எதிர்பாராத மாற்றத்தைக் குறிக்கும் வண்ணம் குடிமுதல்வரும் (Patriarch) அவரின்
மனைவியும் புதியதொரு பெயர் கொடுக்கப்படுவார்கள்.
தாய்மையின் கொடையால்
ஆண்டவர் மகிழ்கின்றார்!
3. திரு
அவைத் தந்தையர்களால் திரித்துவத்தின் ஒரு முன்னடையாளமாக விளக்கப்பட்ட மூன்று அதிசய மனிதர்களின் வருகையானது மிக வெளிப்படையாக ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் நிறைவாகவே அறிவித்தது: “பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிராம் தன் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தன் அருகில் நிற்கக் கண்டார்”
(தொநூ 18:1-2). ஆபிரகாம் மறுத்தார்: “நூறு வயதிலா எனக்குக் குழந்தைப் பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தைப் பெறப் போகிறாள்?” (தொநூ 17:17; உக. 18:11-13). அந்த இறைவிருந்தினர் இவ்வாறு பதிலளித்தார்: “ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்\" (தொநூ 18:14; உக. லூக்1:37).
அந்த
விவரிப்பானது அதுவரை மலடியாக இருந்தவளின் திருமண உறவை வளமையாக்கிய இந்த இறைச்சந்திப்பை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து எல்லா நம்பிக்கைக்கும் எதிராக ஆபிரகாம் ஒரு தந்தையாகின்றார். மேலும் அவர் ‘நம்பிக்கையின் தந்தை’;
ஏனென்றால், அவரின் நம்பிக்கையிலிருந்தே தேந்தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையானது தொடங்குகின்றது.
4. தாய்மையின்
கொடையோடு ஆண்டவரால் மலட்டுத்தன்மையிலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட மற்ற பெண்களின் வரலாற்றோடு இதைத் திருவிவிலியம் தொடர்புபடுத்துகின்றது. மனிதத்தன்மையில் நம்பிக்கையின்றி இருப்போரின் இதயப்பூர்வமான செபங்களை ஏற்பதனால் அடிக்கடி ஏற்படும் வேதனை மிகுந்த சூழ்நிலைகள் கடவுளின் தலையீட்டினால் மகிழ்ச்சியின் அனுபவங்களாக மாறுகின்றன. உதாரணமாகத் தன் வழியாக யாக்கோபுக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால் இராகேல் தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தன் கணவனை நோக்கி “நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும்; இல்லையேல் செத்துப் போவேன்” என்றார். யாக்கோபு அவர்மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்” என்றார்
(தொநூ 30:1-2).
ஆனாலும்,
உடனடியாகத் திருவிவிலியமானது இவ்வாறு கூறுகின்றது: பின்பு கடவுள் இராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார். அவரும் (இராகேல்) கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து ‘கடவுள் என் இழிவைப் போக்கினார்’ (தொநூ
30:22-23) என்றார். யோசேப்பு என்ற இந்த மகன்தான் எகிப்திலிருந்து குடிபெயர்ந்த காலத்தில் இஸ்ரயேலுக்கு மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றுகின்றார்.
மற்ற
கதையாடல்களில் இருப்பதைப் போன்றே இதிலும், பெண்ணினுடைய மலட்டுத்தன்மையின் ஆரம்ப நிலையில் அவர்களின் துயரங்களை அடிக்கோடிட்டுக் காட்டி, கடவுளின் அற்புதமான தலையீட்டை முன்னிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. அதேவேளையில், இது எல்லாத் தாய்மையிலும் இருக்கின்ற உள்ளார்ந்த பெருந்தன்மையைப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றது.
5. சாம்சனின்
பிறப்புப் பற்றிய விவரிப்பிலும் இதே மாதிரியானதொரு நடைமுறையை நாம் காணலாம். ஒரு குழந்தையை ஒருபோதும் கருத்தரிக்க இயலாதிருந்த மனோவாகுவின் மனைவி வானதூதரிடமிருந்து
ஆண்டவருடைய பின்வரும் அறிவிப்பைக் கேட்கின்றாள்: “நீ மலடியாய் இருந்ததால்
இதுவரை குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை; ஆனால், இனி நீ கருவுற்று ஒரு
மகனைப் பெற்றெடுப்பாய்” (நீதி
13:13). சிம்சோன் வழியாக ஆண்டவர் செய்ய விரும்பாததை இந்த எதிர்பாராத மற்றும் அற்புதமான கருத்தரிப்பு அறிவிக்கின்றது.
சாமுவேலின்
தாயான அன்னாவின் மகப்பேற்றின் வழியாக, இறை வேண்டலின் சிறப்பான பங்கானது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றது. அன்னா மலடியாக இருப்பதால் அவமானத்தினால் துன்பப்படுகிறாள். ஆனால், இந்தத் துன்பத்தை வெற்றிகொள்வதற்கு அவளுக்கு உதவ வேண்டி தொடர்ந்து ஆண்டவரை நோக்கி வேண்டுகின்றாள். கோவிலில் ஒருநாள் அவள் பின்வரும் உறுதிமொழியை எடுக்கின்றாள்: “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன்” (1சாமு
1:11).
அவளுடைய
இந்தச் செபமானது கேட்கப்பட்டது: “ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ‘நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்’
என்று கூறி, அவள் அவனுக்குச் ‘சாமுவேல்’
என்று பெயரிட்டார்” (1சாமு
1:19-20). அவளுடைய வாக்குறுதியில் நிலைத்திருந்து அன்னா அவளின் மகனைப் பின்வருமாறு கூறி ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்: “இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்” (1சாமு
1:27-28). கடவுளால் அன்னாவுக்குக் கொடுக்கப்பட்டு, பின்னாளில் அன்னாவால் கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட சிறுவனான சாமுவேல், அன்னா மற்றும் கடவுளுக்கு இடையேயான உயிரோட்டமான உறவினுடைய ஒப்பந்தத்தின் சாட்சியாகின்றார்.
இவ்வாறு
சாமுவேலின் பிறப்பானது மகிழ்ச்சியின் அனுபவமாகவும் நன்றி கூறுவதற்கானதொரு நேரமாகவும் இருக்கின்றது. சாமுவேல் முதல் புத்தகமானது மரியாவின் புகழ்ச்சிப்பாடலை முன்பே அறிவிக்கும் அன்னாவின் புகழ்ச்சிப் பாடலாக அறியப்படும் ஒரு பாடலைக் கொண்டுள்ளது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!” (1சாமு 2:1).
அன்னாவின்
இடைவிடாத செபத்தினால் கடவுள் அவளுக்குக் கொடுத்த அந்தத் தாய்மை என்னும் அருளானது அவளைத் தாராளக் குணத்தினால் நிரப்பப்பட்ட ஒரு புதிய பெண்ணாக மாற்றியது. சாமுவேலின் அருள்பொழிவானது, கடவுளுடைய இரக்கத்தின் கனியை அவளின் குழந்தையில் கண்டுகொண்டு, அவரின் கொடைக்குப் பதிலாக அவள் இதுநாள் வரை எந்தக் குழந்தைக்காக ஏங்கினாளோ அந்தக் குழந்தையையே அவருக்காக ஒப்படைக்கின்ற ஒரு தாயினுடைய நன்றியின் பதிலாக இருக்கின்றது.
கடவுள் மனித
வரலாற்றின்
முக்கியமான
தருணங்களில்
தலையிடுகின்றார்
6. நாம்
இப்பொழுது நினைவுகூர்ந்த இந்த அற்புதமான தாய்மை பற்றிய நிகழ்வுகளில், மகன்களுடைய பணியில் அவர்களின் அன்னையர்களுக்கும் முக்கியமானதொரு பங்கைத் திருவிவிலியம் கொடுப்பதை நாம் எளிதாகக் கண்டுகொள்ளலாம். சாமுவேலின் நிகழ்வில், அவரைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான முடிவெடுப்பதில் அவள் தீர்க்கமானதொரு பங்கைப் பெற்றிருக்கிறாள். இதற்கு இணையான தீர்க்கமானதொரு பங்கானது யாக்கோபுக்காகச் சந்ததிகளைப் பெற்றுக்கொடுத்த மற்றொரு தாயாகிய இரெபேக்காவினால் ஆற்றப்படுகின்றது (தொநூ 27). திருவிவிலியத்தில் விவரிக்கப்பட்ட இந்த அன்னையர்களின் தலையீடானது,
கடவுளின் உயரியத் திட்டத்திற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவியின் அடையாளமாக இருப்பதாகவும் விளக்கப்படலாம். அந்தக் கடவுள்தான் தந்தையின் ஆசிரையும், பரம்பரைச் சொத்தையும் பெற்று, அதன் காரணத்தினாலேயே அவருடைய மக்களின் ஆயர் மற்றும் தலைவராக… இளைய மகனாகிய யாக்கோபுவைத் தேர்ந்தெடுக்கின்றார். அவர்தான் சுதந்திரமான மற்றும் விவேகமான முடிவுகளால் ஒவ்வொருவருடைய வாழ்வின் இலக்கையும் தீர்மானிக்கின்றார் மற்றும் வழிநடத்துகின்றார் (சாஞா 10:10-12).
தாய்மை
தொடர்பான திருவிவிலியச் செய்தியானது முக்கியமான மற்றும் எல்லாக் காலத்திற்குமானதொரு பார்வையை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, மலட்டுப் பெண் சம்பந்தமான விசயம், பெண்ணுடனான கடவுளின் தனிப்பட்ட உடன்படிக்கை, தாய் மற்றும் மகனின் முன்பே வகுத்தமைக்கப்பட்ட முடிவில் இருக்கும் சிறப்புப் பிணைப்பு போன்றவைகளில் வெளிப்படும் தாராள மனப்பான்மையின் அம்சங்களை இது வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
அதேநேரத்தில்,
மக்களுடைய வரலாற்றின் முக்கியமான தருணங்களில் கடவுளின் தலையீடானது சில
மலட்டுப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்கின்றது மற்றும் காலம் நிறைவுற்றபோது அவருடைய மகனின் மனுவுருவாதலுக்காக ஒரு கன்னியையும் வளமைமிக்கவளாகச் செய்கின்ற கடவுளின் தலையீட்டில் நம்பிக்கை வைப்பதற்கு நம்மைத் தயாரிக்கின்றது.
மூலம்:
John Paul II, Motherhood is God’s special gift, in «L’Osservatore
Romano», Weekly Edition in English, 13 March 1996, p. 11.