தமிழ்நாடு துறவியர் பேரவையும், சென்னை மாநில சேசு சபை குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு, சென்னை இலயோலா கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராக இருந்தாலும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களால் மட்டுமல்லாது, அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக இருந்தவர்” எனப் புகழாரம் சூட்டினார்.
மேலும்,
“2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அன்பு, அமைதி, இரக்கம், எளிமை ஆகிய நற்பண்புகளின் அடையாளமாகவும் உலக அமைதி, மனிதநேயம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்” என்றும்,
முற்போக்குச் சிந்தனைகள் கொண்டு கத்தோலிக்கத் திரு அவையை வழிநடத்திப் பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். மேலும், அகதிகள் பிரச்சினை பற்றியும், புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும், திரு அவையின் மேல்மட்ட நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும், மரண தண்டனைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாது என்றும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்” என்றும்
திருத்தந்தையின் மானுடநேயப் பண்புகளை விவரித்துக் கூறினார்.
அவ்வாறே,
“பூமி மற்றும் அதன் பலன்களைக் காப்பாற்ற வேண்டியது மதக்கடமை என்றும், இயற்கை வளங்களை அழிப்பது
பெரும் பாவம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், சமயத்தின்
வழியே இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்திய மாபெரும் செயல் வீரர் என்றும், அனைத்து மதங்களையும் ஒன்றாகக் கருதுகிற தன்மை, இரு நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் எழுகின்றபோது அமைதியை ஏற்படுத்தும் தூதுவராகவும், இஸ்லாமிய நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு உடன் தோழர்களாக அவர்களை அரவணைத்துக் கொண்டதும் பல்சமய உரையாடலுக்கான அவருடைய முன்னெடுப்புகளும் கத்தோலிக்க ஊடகத்தையும் தாண்டி அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தன” என்றும் நினைவுகூர்ந்தார்.
இந்த
நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் உயர்திரு. நாசர், திருச்சி கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருள்முனைவர் ஜோ.அருண், இலயோலா
கல்லூரி அதிபர் அருள்முனைவர் இராபின்சன், சென்னை மாநில சேசு சபைத் தலைவர்
அருள்முனைவர் செபமாலை ராஜா, தமிழ்நாடு துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி பிலோ, தூய பிரான்சிஸ்க்கு சகோதரிகள் சபையின் தலைவர் அருள்சகோதரி ஆரோக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செய்தி:
திருமதி.
டாரத்தி, ‘நம் வாழ்வு’ சென்னை மண்டல செய்தியாளர்