நிலவினில் குளிக்கிறாய்!
கரைதொடத்
தவிக்கிறாய்!
முயன்று
முயன்று
வெண்மையாய்
நுரைக்கிறாய்
கடலலையே!
கலையாக்
காவியமாய்
மனமதை
நிறைக்கிறாய்!
மன்மதன்
எய்ததினால்
வான்மதகையே
சுமக்கிறாய்!
தென்றலை
இரசிக்கிறாய்!
மெல்லலை
விரிக்கிறாய்!
சிந்தை
கலங்கிட
மலையென
உயர்கிறாய்!
கல்லான
மனத்திலும்
கனாக்களை
விதைக்கிறாய்!
நீந்திடும்
மீனினம் கரை சேரவா
அலையாய்
அலைகிறாய்?
பிரிய
மனமில்லாமல்
நீண்டே
திரிகிறாய்!
நிலவெனும்
தாரகை நின் தாழ்
நீந்தி
மகிழ்கிறாள்!
மின்னிடும்
விண்மீன்களும்
கண்ணிமைக்காது
பார்க்கும்
உன்னழகையே...
குழவியின்
தீண்டலாய்
கரைதனைத்
தொடுகிறாய்!
நொடிக்கு
நொடி
மனம்
ஆயிரம் பேசும்...
நீ
உடைந்து மறைவது போல்
மறந்தும்
போகும்...
மிதந்திடும்
தோணியாய்
வாழ்க்கையும்....
உன்போல்
கரைசேர
முயன்றதால்
கண்ணீரின்
சுவையும்
உன்னினமே!
அலைகளின்
படிகளில்
நடந்திட
வா!
நடந்தே
வானமும் கடந்திட வா!
தொடுவானம்
உந்தன் எல்லைதானோ?
எழுந்து
வா!
இனி
உன் நாள்!
எல்லாம்
உன்னால்!