மாமன்றக் கலந்துரையாடல் அனுபவத்தின் காரணமாக முதலில் திரு அவையின் கூட்டொருங்கியக்கத் தன்மை பற்றிய புரிதலில் ஆழமும் தெளிவும் பிறந்துள்ளன. இதை மாமன்ற அறிக்கை பின்வருமாறு எடுத்துரைக்கிறது: “அதைச் செய்து பார்த்ததால் அதனை நாங்கள் முன்பைவிட நன்குப் புரிந்துகொள்கிறோம்; அதன் பயனையும் நாங்கள் அறிய வந்துள்ளோம்” (முஅ - முன்னுரை). இந்த நடைமுறையின் ஒரு விளைவு திரு அவையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கும் அனைத்து அமைப்புகளிலும் ஆட்சிப் பொறுப்புகளில் இருப்போர் அல்லது பதவிகள் வகிப்போர் தாங்களே முடிவெடுத்து, அம்முடிவுகளை ஏனையோர்மீது திணிக்கும் இன்றையப் பரவலான நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்பது.
“நீதிமுறைக்கு ஏற்ப வாழும் எந்தச் சமூகத்திலும் இருப்பது போலவே திரு அவையிலும் அதிகாரம் செயல்படுத்தப்பட வேண்டும். அதாவது, தன்னிச்சையாக அது தனது விருப்பத்தை (பிறர்மீது) திணித்தல் கூடாது”
(இஅ 91). மாறாக, “கூட்டொருங்கியக்கத் திரு அவையை வளர்த்தெடுப்பதற்கான வழி, முடிவெடுக்கும் முறைகளில் இயன்ற அளவு இறைமக்கள்
அனைவரின் பங்கேற்பையும் அதிகமாக ஊக்குவிப்பதே” (இஅ
87). அதாவது,
அனைவரும் சமப்பொறுப்பும் உரிமையும் உடைய சகோதரர்கள் எனும் புரிதலின் அடிப்படையில் எல்லாருடைய கருத்துகளும் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டு, திறந்த உள்ளத்துடன் கலந்தாய்வு செய்யப்பட்டு, அனைவரும் விட்டுக்கொடுத்து, எல்லாரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இணைந்து முடிவெடுக்கும் முறை வழக்கத்திற்கு வரவேண்டும். இவ்வாறு, முடிவெடுக்க முடியாத சிக்கல்களைப் பற்றி அனைவரும் இன்னும் அதிகமாகவும் அமைதியாகவும் சிந்தித்து, ஒத்தக் கருத்து உருவாகும் நிலை வரும் வகையில் பின்வரும் அமர்வுகளுக்கு அவற்றைத் தள்ளிவைக்கலாம்.
இவ்வாறு,
அனைவருடனும் கலந்துரையாடுவது பொறுப்புள்ள அதிகாரிகள் முடிவு எடுப்பதும் ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையோ முரணானவையோ அல்ல; மாறாக, இறைத் திருவுளத்தை அறிந்து செயல்படுத்தத் திரு அவை இணைந்து செல்ல வேண்டும். இத்தகைய கூட்டொருங்கியக்க நடைமுறை வழியில் திரு அவையில் முடிவுகள் எடுப்பதால் ஆயர்கள், அவர்களது குழு, திருத்தந்தை என்போரின் அதிகாரம் மறுக்கப்படுவது இல்லை; மாறாக, ஒன்றிப்பையும் முறையான பன்மையையும் காக்க அது உதவ வேண்டும். “கலந்துரையாடல் முறையில் கண்டுணர்ந்த திசையைக் கண்டுகொள்ளாது, அதை விட்டுவிடல் ஆகாது. மாறாக, பங்கேற்பு அமைப்புகளில் நிகழும் கலந்துரையாடல் வழியில் எட்டப்படும் முடிவுகளுக்கு இது சிறப்பாகப் பொருந்தும்” (இஅ
92).
மேற்கூறியத்
தெளிவை மாமன்ற அறிக்கை பின்வருமாறு எடுத்துரைக்கிறது: “கூட்டொருங்கியக்கத்தன்மை என்பது கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்து, இறையாட்சியை இலக்காகக் கொண்டு, கிறித்தவர்கள் மனித குலம் முழுவதோடும் பயணிப்பது ஆகும். அதன் நோக்கம் நற்செய்திப் பணியே. அதை நடைமுறைப்படுத்த அவசியமானவை திரு அவை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றுகூடி வருவதும், ஒருவர் ஒருவருக்குக் காதுகொடுத்துக் கேட்டு உரையாடல் நடத்துவதும் தெளிந்து தேர்வதாகும் ...” (முஅ 1h). இத்தகைய
“கூட்டொருங்கியக்கமே திரு அவையின் வருங்காலத்தை அடையாளப்படுத்துகிறது” (முஅ
1i).
அருள்வாழ்வும்
இறைவாக்குத்தன்மையும்
இந்தக்
கூட்டொருங்கியக்கத்திற்கு
அருள்வாழ்வுப் பரிமாணமும் உண்டு. எவ்வாறெனில், “கூட்டொருங்கியக்க அருள்வாழ்வு தூய ஆவியாரின் செயல்பாட்டிலிருந்து ஊற்றெடுக்கிறது. இறைவார்த்தையைக் கேட்டல், ஆழ்ந்த அருள்சிந்தனை செய்தல், அமைதி, மனமாற்றம் என்பவற்றை அது கோருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் மாமன்ற இரண்டாம் அமர்வின் தொடக்கவுரையில் கூறியதுபோல, ‘நமது முதல் கடமை தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பது; ஏனெனில், அவர் ஒவ்வொருவர் மற்றும் எல்லாவற்றின் வழியாகவும் பேசுகிறார்.’ மேலும், தன்னொறுத்தல், மனத்தாழ்மை, பொறுமை, மன்னிக்கவும் - மன்னிப்புப் பெறுவதற்குமான மனநிலை என்பனவையும் கூட்டொருங்கியக்க அருள்வாழ்வுக்கு அவசியம். அது ஆண்டவரது பணிக்காகத் தூய ஆவியார் பகிர்ந்தளித்துள்ள பல்வேறு கொடைகளையும் பணிகளையும் நன்றியுணர்வுடனும் மனத் தாழ்மையுடனும் வரவேற்கிறது (1கொரி 12:4-5). பேராசை, பொறாமை, அடக்கியாளும்- கட்டுப்படுத்தும் விருப்பம் என்பவற்றை விலக்கி, அது தம்மை வெறுமையாக்கி அடிமையின் தன்மை ஏற்ற இயேசுவின் அதே உளப்பாங்கை வளர்த்துக்கொண்டு அவ்வாறு செயல்படுகிறது (பிலி 2:7)” (இஅ 43).
தமது
பாலஸ்தீனப் பணிப் பாதைகளில் தம்மைச் சந்திக்க வந்தவர்களுக்குச் செவிமடுத்தவராகவே இயேசுவை நற்செய்தி நூல்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆணோ-பெண்ணோ, யூதரோ-பிற இனத்தாரோ, திருச்சட்ட அறிஞரோ- வரிதண்டுவோரோ, நீதியாளரோ-பாவியோ... எவராயினும் அவருக்காக நின்று, அவர் கூறுவதைக் கேட்டு, அவருடன் பேசாமல் இயேசு யாரையும் அனுப்பவில்லை (இஅ 51); மாறாக, அவர் “தாம் சந்தித்தவர்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைக்கும் செவிமடுத்து, தம் சொற்களாலும் செயல்களாலும் பதிலிறுப்பதன் வழியாக நலமளிக்கும் உறவுப் பாதையைத் திறந்து, அவர்களுடைய வாழ்வை அவர் புதுப்பித்தார்” (இஅ
51). தம்மைப் போலவே தம் சீடர்களும் அனைவருக்கும் செவிமடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
அவரைப்போல செவிமடுப்பது என்பது தன்மையப் போக்கிலிருந்து விடுபட்டு, அடுத்தரை வரவேற்கும் நற்பண்பு. அது இயேசுவின் தன்வெறுமையாக்கலில் (பிலிப் 2:6-7) பங்கேற்பது. “அது ஒவ்வொருவரையும் தன்னுடைய வரம்புகளையும், தனது பார்வையின் ஒரு சார்புத் தன்மையையும் கண்டுணரச் செய்யும் ஒரு கடினமான தவமுயற்சி ஆகும். இதனால் திரு அவையின் எல்லைகளுக்கு அப்பால் இருப்போரிடம் கடவுளின் ஆவியாரின் குரலைக் கேட்டு மாற்றம், மனமாற்றம் எனும் பயணத்தைத் தொடங்குவதற்கான வாயில் திறக்கப்படுகிறது” (முஅ
16c).
மேலும்,
தனது கூட்டொருங்கியக்க முறை வழியாக இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை அது ஆக்கப்பூர்வமான முறையில் சந்திக்கத் திரு அவை அதற்குச் சிறந்த மாதிரி காட்ட முடியும். ஏனெனில், ஏற்றத்தாழ்வுகள் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றன; மரபு முறையிலான மக்களாட்சி முறைமீது மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதேச்சதிகார, சர்வாதிகாரப் போக்கும், வலுவற்ற மக்கள் மற்றும் இயற்கை மீதான அக்கறையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பும் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் உரையாடலுக்கு மாற்றாக வன்முறைவழி தீர்வுகளைத் தேடும் சோதனையும் ஏற்படுகிறது. இப்பின்னணியில் திரு அவையின் கூட்டொருங்கியக்க முறை இன்று இறைவாக்குக் குரலாக ஒலிக்க உதவுகிறது (இஅ 47).
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. மக்கள்
பங்கேற்பை இன்னும் விரிவாக்கவும், அதற்கு எழுந்துள்ள தடைகளையும் எதிர்ப்புகளையும் தவிர்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (முஅ 1 m,n).
2. தலைமுறைகளுக்கு
இடையிலும் கூட்டொருங்கியக்கப் பண்பாடு பரவலாக்கப்பட வேண்டும். அதன் விளைவாக, இளைஞர் தங்கள் குடும்பத்தினர், சம வயதினர், அருள்பணியாளர்கள்
மற்றும் ஆயர்களுடனும் சுதந்திரமாகப் பேசிட இணையதளம் உள்பட, பல்வேறு தளங்களும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் (முஅ 1h).
3. கூட்டொருங்கியக்கத்தன்மை
பற்றிய சொல்லாட்சிகள், புரிதல்கள், நடைமுறைகள் என்பன இன்னும் அதிகம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் (முஅ 1p).
4. “அருள்பணிசார் அதிகாரம்
உடையோர் கலந்துரையாடலில் பங்கேற்போருக்குச் செவிமடுக்க வேண்டும்; ஒத்தக் கருத்தை உருவாக்கிய கலந்துரையாடல்களின் முடிவுகளிலிருந்து தவிர்க்க இயலாத காரணம் இன்றி, அவர்கள் தடம் மாறக் கூடாது (இஅ 91).
5. முடிவெடுத்தல்
தொடர்புடைய அனைவருடனும் கலந்துரையாடியே அருள்பணிசார் பொறுப்புள்ளவர்கள் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். இதனால், திரு அவைச் சட்டத்தில் இடம்பெறும் ‘ஆலோசனைத்தன்மை மட்டுமே உடைய வாக்கு’ எனும் பதத்தில் தெளிவின்மை விளக்கப்பட்டு ‘மட்டுமே’ எனும் சொல்லை நீக்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும் (இஅ 92).