12 ஆண்டுகள் ஆட்சி செய்து, திரு அவையின் சிந்தனையிலும் அக்கறையிலும் உத்தரவாதமான மாற்றங்களை ஏற்படுத்திய, வரலாற்றின் முதல் இலத்தீன்-அமெரிக்கத் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது எல்லார் மனத்திலும் இருக்கின்ற கேள்வி: ‘அடுத்த போப் யார்?’ இன்னும் சில நாள்களில் அதற்கு விடை கிடைத்துவிடும். Hopefully !
சில
‘கான்க்ளேவ்கள்’ ரொம்ப
நாள்கள் நடந்திருக்கின்றன. வரலாற்றின் மிக நீண்ட கான்க்ளேவ் 1268-ஆம் ஆண்டு நடந்தது. கால அளவு: 2 வருடம், 9 மாதங்கள். ஊர்க்காரர்கள்
கான்க்ளேவ் நடந்த மாளிகையின் கதவுகளை அடைத்து, உணவு வழங்கலைக் குறைத்து, மேல் கூரையை அங்கங்கே பிரித்துவிட்டு... இப்படிப் பல வகைகளில்
கர்தினால்களைத் துன்புறுத்திய பின்புதான் ஒரு வழியாக அவர்கள் சமரசமாகி, திருத்தந்தை பத்தாம் கிரகோரியைத் தேர்ந்தெடுத்தார்களாம்! இப்போது
அதுபோல நடக்க வாய்ப்பில்லை.
சமீபத்திய
இரண்டு கான்க்ளேவ்களும் 24 மணி நேரங்களில் முடிந்துவிட்டன. 16-ஆம் பெனடிக்டின் தேர்வுக்கு நான்கு சுற்று ஓட்டுகளும், பிரான்சிசுக்கு 5 சுற்றுகளுமே தேவைப்பட்டன. இந்தக் கான்க்ளேவில் 138 கர்தினால்கள் பங்கேற்பார்கள். அவர்களில், 110 பேர் திருத்தந்தை பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள். ஏறக்குறைய 80 %. பிரான்சிஸின்
சிந்தனையை ஒத்த ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால், எதுவும் நிச்சயம் இல்லை.
இத்தாலி
நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ‘The one who enters the conclave as a Pope leaves it as a Cardinal.’
‘நான்தான் திருத்தந்தை’ என்ற
நம்பிக்கையில் கான்க்ளேவுக்குள் நுழையும் ஒருவர் கர்தினாலாகத்தான் திரும்பி வருவார். முன்னணிப் பத்திரிகைகள் வெளியிடும் ஆருடங்கள் பல கான்க்ளேவ்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
கடந்த கான்க்ளேவ் அதற்குச் சிறந்த உதாரணம். 2013-ஆம் ஆண்டு பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பின் நடந்த தேர்வின்போது, ஒரு பத்திரிகை கூட ‘ஹோர்கே’வின் பெயரைக் கூறவில்லை.
‘Papabile’என்ற இத்தாலியன்
வார்த்தைக்கு ‘Pope-able’அல்லது ‘Pope-worthy’ என்று
அர்த்தம். பிரான்சிசுக்கு அடுத்து திருத்தந்தையாகத் தகுதி படைத்தவர் என்று நிபுணர்களும், பத்திரிகைகளும் முன்மொழிகிற பல papabile கர்தினால்களில் ஐவரைப் பற்றிய குறிப்புகள் ‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்காக
இங்கே... இவர்களில் ஒருவர் அடுத்தத் திருத்தந்தை ஆக
லாம் அல்லது ‘மற்றொரு பிரான்சிஸ்’ ஆச்சர்யம்
கூட நிகழலாம்!
கர்தினால் பியத்ரோ
பரோலின்
இத்தாலி நாட்டுக்காரர்.
வயது 70. பிரான்சிஸின் 12 ஆண்டு கால ஆட்சி முழுவதும் அவருடைய Secretary of State - ஆகப்
பணியாற்றியவர். வத்திக்கானில் இந்தப் பதவியின் அதிகாரங்கள் விரிவானவை. திரு அவை அதிகார ஏணியில் இரண்டாவது மிகப்பெரிய பொறுப்பு இது. Second-in-command. ‘துணை
போப்’ என்றும்
கூறலாம். வத்திக்கான் நகரின் பிரதமர் இவரே. ‘Roman Curia’ எனப்படும் வத்திக்கானின் மைய நிர்வாக இயந்திரத்தை ஒருங்கிணைப்பதும், திருத்தந்தையின் ஆவணங்கள், சந்திப்புகள், செய்திக்குறிப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்துவதும் இவருடைய அலுவலகமே. உலக நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான தூதரக உறவுகளுக்கு இவரே பொறுப்பு. திருத்தந்தையின் முதன்மை ஆலோசகர்! பரோலின் அதிர்ந்து பேசாதவர். ‘டிப்ளமேட்டுக்குரிய’ விலகல்
தன்மை கொண்ட நிர்வாகி. நடுநிலைவாதியாக (centrist) கர்தினால்கள் மத்தியில் அறியப்படுபவர். உலகளாவியத் திரு அவை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். ஆயர்கள்
நியமனம் குறித்து சீனாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையில் 2018-ஆம் ஆண்டு கையொப்பமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரி பரோலின்தான்!
அருள்பணியாளராகப்
பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகளில் Diplomatic Service-இல்
இணைந்த பரோலினுக்கு மேய்ப்புப் பணி அனுபவம் எதுவும் இல்லாதது ஒரு குறை. பல மொழிகள் பேசும்
வித்தகர். ஒரு
பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்து, அயர்லாந்து பாராளுமன்றம் சட்டம் இயற்றியபோது அதை “மானுடத்தின் தோல்வி (Defeat of humanity)”
என்று வர்ணித்தார். கடந்த 40 வருடங்களில் இத்தாலியிலிருந்து யாரும் திருத்தந்தையாகவில்லை. இந்த முறை அது மாறலாம்.
கர்தினால் லூயிஸ்
டாக்லே
பிலிப்பைன்ஸ்
நாட்டவர். வயது 67. ஏழைகள், ஓரங்களில் வாழ்வோர், அகதிகள் மீது தனிப்பட்ட கரிசனை கொண்டவர். ‘ஆசியாவின் பிரான்சிஸ்’ என்று
குறிப்பிடப்படுபவர். மணிலாவின் முன்னாள் பேராயர். பெரும்பாலும் மேய்ப்புப் பணிச் சூழலிலேயே இருந்தவரை 2019-ஆம் ஆண்டு பிரான்சிஸ் உரோமுக்குக் கொண்டு வந்து, மறைபரப்புப்
பேராயத்தின் தலைவராக நியமித்தார். இதுவே கர்தினால் டாக்லேவின் முதல் மைய நிர்வாகப் பணி. டாக்லேவுக்குக் கொஞ்சமாவது வத்திக்கான் அனுபவம் வேண்டும் என்பதற்காகவே, பிரான்சிஸ் இதைச் செய்தார் என்று கூறுவோர் உண்டு. பிலிப்பைன்சில் மக்கள் இவரை ‘chito’என்று
பாசமாக அழைக்கிறார்கள். நம் ஊரில் ‘செல்லம்’என்று கூறுவதுபோல! ஒரு பெரிய கத்தோலிக்க நாட்டின் செல்லம் இவர். கருக்கலைப்புக்கு எதிரானவர். 2013-இன் கான்க்ளேவின்போதே டாக்லே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தற்போது ஐந்து கர்தினால்கள் இருக்கிறார்கள். இதில் டாக்லேவிற்கு வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். டாக்லே தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர் ஆசியாவின் முதல் திருத்தந்தையாக இருப்பார்.
கர்தினால் ஃப்ரிடோலின்
பேசுங்கு
காங்கோ
நாட்டுக்காரர். வயது 65. திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய உயர்மட்டக் கர்தினால்கள் ஆலோசகர் குழுவில் (Council of Cardinals) உறுப்பினராக
இருந்த ஒரே ஆப்பிரிக்கக் கர்தினால் இவரே. ‘கின்ஷா’ என்ற
மறைமாவட்டத்தின் பேராயராகக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டில் கிறித்தவர்களை ஒடுக்கும் அரசின் வன்முறைச் செயல்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுப்பவர். மக்கள் பிரபலம். பிரான்சிஸ் இவரை 2019-ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார். திரு அவையின் படிப்பினைகளைப் பொறுத்தமட்டில் பேசுங்கு ஒரு பழமைவாதி. ஒருபாலின இணையர்களுக்கு முறைசாரா ஆசிர்வாதம் கொடுக்கலாம் என்று வத்திக்கான் அறிவுரை வழங்கியபோது, ‘Fiducia Supplicans’ -ஆவணத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா மற்றும் மட காஸ்கர் ஆயர்கள்
பேரவையைத் திரட்டி, வத்திக்கானுக்குக் கடிதம் எழுதினார். 2023-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், “ஆப்பிரிக்காவே திரு அவையின் எதிர்காலம்” என்று
கூறினார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏறக்குறைய 1500 வருடங்களுக்குப் பிறகு திருத்தந்தையாகும் முதல் ஆப்பிரிக்கராகக் கர்தினால் பேசுங்கு இருப்பார்.
கர்தினால் பீட்டர்
எர்தோ
அங்கேரி
நாட்டவர். வயது 65. அறிவாளி! திரு அவைச் சட்டத்தில் வல்லுநர். 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஏழு மொழிகள் தெரியும். கொள்கை அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிசுக்கு அப்படியே எதிர் துருவம். பிரான்சிஸ் கிழக்கு என்றால், எர்தோ மேற்கு. எல்லாக் கதவுகளையும் திறக்க ஆசைப்பட்ட பிரான்சிஸின் தாராளவாத பாப்பிறை ஆட்சிக்கு ஒரு மாற்று அரசியலைக் கொண்டுவர விரும்பும் கர்தினால்களின் தேர்வு எர்தோவாக இருக்கும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாட்டம் உள்ளவர். பல விசயங்களில் பிரான்சிசோடு
முரண்பட்டிருக்கிறார்.
உதாரணமாக, அகதிகள் வரவேற்கப்பட வேண்டும், அவர்கள் அனுசரணையோடு நடத்தப்பட வேண்டும் என்று பிரான்சிஸ் வளர்ந்த நாடுகளை வேண்டிக் கொண்டிருந்த காலத்தில், எர்தோ “வரைமுறையில்லாமல் அகதிகளை அனுமதிப்பது ஆள் கடத்தலுக்குச் சமம்” என்றார்.
‘Neo-evangelization’
என்று கூறப்படும் புதிய நற்செய்தி
அறிவிக்கும் பணியில் ஆர்வமுள்ளவர். ஒரே
பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது, விவாகரத்துப் பெற்றவர்கள் திருப்பலியில் நன்மை வாங்குவது போன்ற விசயங்களில் சம்மதம் இல்லாதவர். பிரான்சிஸின் முற்போக்குப் பாப்பிறையை விரும்பாத வலதுசாரிப் பிரிவினர் எர்தோவைப் பூரணமாக ஆதரிப்பார்கள்.
கர்தினால் மத்தேயோ
சூப்பி
இத்தாலி
நாட்டுக்காரர். வயது 69. உரோமில் பிறந்து வளர்ந்தவர். தற்போது பொலோனா மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸின் ‘alter-ego’என்று கூறலாம். பத்திரிகைகள் இவரை ‘Italian Bergoglio’என்றுதான் அழைக்கின்றன. முற்போக்குச் சிந்தனையாளர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சிஸின் மரபைத் தொடர்வார் என்று நம்பலாம்.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பிரான்சிஸ், சூப்பியை உக்ரைன் நாட்டிற்கு வத்திக்கானின் அமைதியின் தூதராக அனுப்பி வைத்தார். சூப்பிக்கு
வெற்று ஆடம்பரத்தில் ஆர்வமில்லை. பல நேரங்களில், தன்
மறைமாவட்டத்தில் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார். பெட்ரோல் செலவு மிச்சம். ஆளும் நரம்பு மாதிரி, ஆரோக்கியமாக இருக்கிறார். மறைமாவட்டத்தில் யாரும் இவரை ‘ஆயர்’ என்று அழைப்பதில்லை. எல்லாருக்கும் இவர் ‘Father Matteo’தான்! ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மேல் சிறப்பு அன்பு கொண்டவர். அகதிகளுக்குப் பணி செய்வதிலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை வரவேற்பதிலும் இவருக்குத்
தயக்கம் இல்லை. பிரான்சிஸ் விரும்பிய ‘open church’ - எல்லாருக்குமான திரு அவைதான் இவரது கனவும்.
இந்த
ஐவருள் ஒருவர் அடுத்த திருத்தந்தை ஆகலாம். அல்லது இந்தப் பட்டியலில் இல்லாத, ஏன் எந்தப் பட்டியலிலும் இல்லாத, யாருமே நினைத்து பார்த்திராத ஒருவர்
கூட திருத்தந்தை ஆகலாம்.
வாக்குச்
சீட்டுகளில் கர்தினால்கள் யார் பெயரை எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை; கடவுள் யார் பெயரை எழுதி வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்!
யோசித்து எழுதுங்க
ஆண்டவரே!!!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)