news-details
தமிழக செய்திகள்
கடையருக்கும் எழுந்தேற்றம்!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நன்றி!

அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், ஏப்ரல் மாதம் 16-ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.   இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில் இந்த மசோதாக்கள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கின்றன.

இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 நபர்கள், கிராமப் பஞ்சாயத்துகளில் 12913 நபர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 388 நபர்கள், மாவட்ட ஊராட்சிகளில் 37 நபர்கள் என, சுமார் 14,000 மாற்றுத் திறனாளிகள் உரிமை பெறுவர். இது மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 667 கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் ரூபாய் 1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நம் சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் மாற்றுத்திறன் படைத்த சகோதர- சகோதரிகளுக்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் அதிக உரிமைகளையும் சமூக நலன்களையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

கடையருக்கும் எழுந்தேற்றம்என்ற குறிக்கோளோடு சமூக நீதிக்கான அரசாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கும் சிறப்பாக, தமிழ்நாடு முதல்வர் திரு. மு. . ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக குறிப்பாக, கிறித்தவ மக்கள் சார்பாக தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை சிறப்பான நன்றியை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு மக்கள் அனைவரின் நலனுக்காகவும் பணிகள் செய்து இந்த அரசு தொடர்ந்து உதவிட வேண்டும், உழைத்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை மற்றும்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்