கறுத்துத் திரண்ட பகைமேகங்கள் கலையத் துவங்கியுள்ளன. பீரங்கிகளும் ட்ரோன்களும், நாடுவிட்டு நாடு தாவும் ஏவுகணைகளும் அவைகளை இயக்கிய இராணுவமும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. நம் எல்லைப்புற மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதை நம்மால் கேட்க முடிகிறது.
ஏப்ரல்
மாதம் 22-இல் தொடங்கி மே மாதம் 7-இல்
உச்சத்தைத் தொட்ட சில இந்தியக் காட்சி ஊடகங்களின் ‘கூச்சல்’ இன்னும் ஓய்ந்தபாடில்லை. இரண்டு நாடுகளிலும் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களின் பேரிழப்புகளுக்கும் பெரும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு யுத்தத்தை ஐ.பி.எல்.
கிரிக்கெட் போட்டியைப்போல வணிகப்படுத்தி வியாபாரம் செய்த அவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. செய்திகளைச் சுவைப்படச் சொல்ல சிறிது ‘மசாலா’ தேவை என்பதை நம்மால் புரிய முடிகிறது; ஆனால், செய்தி முழுவதுமே ‘மசாலா’ என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? ‘தேசிய ஊடகங்கள்’
என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக்கொள்ளும் சில பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளுக்கும் (Visuals), களத்தில்
நடந்தவைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உண்மை கண்டறியும் பல நடுநிலை ஊடகங்கள்
வலுவான ஆதாரங்களோடு நிரூபித்துள்ளன. அவற்றை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்.
முதலில்,
நமது இராணுவத்தின் முப்படைகளுக்கு நமது மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்! ‘சிந்தூர் நடவடிக்கைகள்’ தொடங்கிய
நாளில் இருந்து, முடிந்த நிமிடம் வரை பாகிஸ்தான் அரசையும், அவர்களது இராணுவத்தையும், தீவிரவாதக் குழுக்களையும் கலங்கடிக்கச்செய்து அவர்களை நிலைகுலையச் செய்த நம் இராணுவத்தினரின் வீரதீர சாகசங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்! எதிரியின் அடிமடியிலேயே கைவைத்து, தங்களது அசைக்கமுடியாத, வலிமையான யுத்த ஏற்பாடுகள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடங்களுக்குள் எல்லாம் எளிதாக நுழைந்து எதிரிகளின் உயிர்த்தளங்களைச் சில நிமிடங்களிலேயே நிர்மூலமாக்கும் நமது இராணுவத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகளையும், அவைகளை மிகவும் இலாவகமாகக் கையாளும் நமது வீரர்களின் திறமைகளையும் துணிச்சலையும் பார்த்து, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலக நாடுகளே பிரமிப்படைந்துள்ளன. நமக்குச் சேதங்களே இல்லை என்பது அல்ல; யுத்தக் களத்தில் சேதம் இல்லாமல் இருப்பது எப்படிச் சாத்தியம்?
‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட செலவுகளும் இழப்புகளும் ரூபாய் 50,000 கோடி என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இராணுவ நடவடிக்கைகளின்போது உயிரிழந்த வீரர்களுக்கும், பாகிஸ்தான் இராணுவத்தின் முறையற்ற தாக்குதலால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் நமது வீர வணக்கம்!
‘போர்’ என்று அறிவிக்கப்படாத இந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பாகிஸ்தானின் எல்லை தாண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அவர்களோடு நாம் யுத்தம் நடத்துவதும் இது ஒன்றும் முதல்முறையல்ல. ஒவ்வொரு முறையும் நம்மோடு மோதுவதும், மோதித் தோற்றபின் அவமானப்படுவதும் பாகிஸ்தானுக்குப் புதிதல்ல. நமது கடந்தகால அனுபவங்களை நினைவில் கொண்டு, புதிய சூழ்நிலைகளின் கட்டாயங்களை உள்வாங்கி, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அத்துமீறல்களை முழுமையாகத் தவிர்க்கும் அணுகுமுறைகளின் அடிப்படையில் ‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகளை நாம் நிறுத்தியுள்ளோமா? என்கிற கேள்வியினைப் பல புவிசார் அரசியல்
நோக்கர்கள் முன்வைத்துள்ளனர்.
1965-இல் நாம்
யுத்தத்தை நிறுத்தியதும் அயூப்கான் அரசு கவிழ்ந்தது. 1971-இல் நம் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, அதன் பூகோளத்தையே மாற்றி அமைத்தார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. 1999-இல் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை அமெரிக்கா உள்பட உலக நாடுகளால் ‘இரவுடிகளின் தேசம்’
(Rogue State) என்றழைக்கப்பட்டு,
கார்க்கிலில் இருந்து நமது இராணுவத்தால் பாகிஸ்தான் படைகள் அவமானத்துடன் வெளியேற்றப்பட்டன. இம்முறை நமது இராணுவம் வெற்றி முகத்தில் இருந்தபோது, வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்குப் பாகிஸ்தான் பலவீனப்பட்டு நிற்கின்றபோது, இனிமேல் அவர்கள் விரும்பினாலும் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தில் ஒருநாளும் ஈடுபட முடியாத ஓர் ஏற்பாட்டை உருவாக்கும் சாத்தியம் இருந்த வேளையில், அந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோமோ என்ற வினாவை என்னால் தவிர்க்க இயலவில்லை.
கடந்தகால
யுத்தங்களின்போது நமக்குக் கிடைக்காத பல அனுகூலங்களும், சாதகமான
சூழ்நிலைகளும் இம்முறை நமக்கு இருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. இம்முறை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், குடிமைச் சமூகமும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவினை ஒன்றிய அரசுக்கு வழங்கின. தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் குறிப்பாக, இசுலாமியப் பெருங்குடி மக்களும் பயங்கரவாதத்தின் விளைநிலமாக இருக்கின்ற பாகிஸ்தான் இராணுவத்தின் விஷப்பற்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதிலே ஒன்றுபட்டு நின்றனர். இசுலாமிய நாடுகளும் பயங்கரவாதத்தினை ஒழிக்கவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை ஒன்றுபட்டு ஆதரித்தன.
கடந்த
யுத்தங்களின்போது இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து, ஆயுதங்கள் உள்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்கா இப்போது நமது நட்பு நாடு. அதன் அதிபர் டிரம்ப் நமது பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பர்.
நமது
நாடு உலகின் வல்லரசுகளில் ஒன்று. நாம் இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரச் சந்தை. உலகில் மிக அதிகமாக நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடு. இவ்வளவு வசதிகள் இருந்தும், பாகிஸ்தான் எனும் பயங்கரவாத நாட்டின் முதுகெலும்பை உடைக்கவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதை நமது பிரதமருக்கு யார் கூறுவது?
யுத்தத்தின்
வெற்றிப்பிடி நம் கையில் இருக்கும்போது, தோல்வி பயத்தில் எதிரி துவண்டு கிடக்கும்போது ‘உன்னை மன்னித்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துகிறோம்’ என்று
நமது பிரதமர் அல்லவா அறிவித்திருக்க வேண்டும்! அதனை எப்படி அமெரிக்கக் குடியரசு தலைவர் அறிவிப்பது? அது நமது இறையாண்மைக்கு அவமானமல்லவா?
“இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் உங்கள் இரண்டு நாடுகளோடும் அமெரிக்கா எவ்வித வியாபாரத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது’ என்று
நான் எச்சரித்தவுடன், இரண்டு
நாட்டு பிரதமர்களும் அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக இராணுவத் தாக்குதல்களை நிறுத்திவிட்டனர்” என்று அதிபர் டிரம்ப் பேசுவதை நமது பிரதமர் மோடி எப்படிச் சகித்துக்கொள்கிறார்? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஓர் அஞ்சாநெஞ்சன் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் நமது பிரதமர், பலமுறை பல சர்வதேச அரங்குகளில்
டிரம்ப் இப்படித் தொடர்ந்து பேசிவருகின்றபோது அமைதி காக்கவேண்டிய அவசியம் என்ன?
நாட்டு
மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “நமது இராணுவத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நமது இராணுவத் தளபதியிடம் ‘தாக்குதல்களை நிறுத்துங்கள்’ என்று
கெஞ்சிக் கேட்டார். அதனால் தாக்குதல்களை நிறுத்திவிட்டோம்” என்று
பேசினார். ஆனால்,
நமது பிரதமர் பேசுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே பாகிஸ்தான் மக்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,”நாம் இந்தியாவை வென்றுவிட்டோம்; இந்த வெற்றிக்கு உதவி செய்த சீனா, அமெரிக்க அதிபர்களுக்கு நன்றி” என்று எப்படிப்
பேசினார்? நமது தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நாட்டின் பிரதமர் இப்படிப் பேசக்கூடுமா? இப்படி மமதையுடன் பேசும் அவர்கள் எதிர்காலங்களில் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பிரதமர்
இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பாராளுமன்றத்திற்கும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கும் ‘சிந்தூர்’
இராணுவ நடவடிக்கைகள் மூலம் தாம் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தாக்குதலுக்குப்
பின்னரும், இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளாததைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்திய சனநாயகத்தில் தவிர்க்கக்கூடாத எதிர்க்கட்சிகளைச் சந்திப்பதை ஏன் அவர் தவிர்த்தார் என்பது நமக்குப் புரியவில்லை.
பகல்காம்
சம்பவங்களுக்குப் பாதுகாப்புக் குறைவின்மை ஒரு காரணம் என்பதை ஆராய்ந்து, அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற பயங்கரவாதிகளின்
பதுங்கிடங்களைக் கண்டு நூறு பயங்கரவாதிகளை அழித்தொழித்த நமது படைகளால், நமது நாட்டுக்குள் இருநூறு கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அப்பாவி பொதுமக்கள் இருபத்தாறு பேரைக் கொன்றுவிட்டு தங்களது வசதிப்படி தப்பிச்சென்ற பகல்காம் பயங்கரவாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் வருந்துகிறது. அவர்களைப் பிடித்துச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, நியாயம் காணும்வரை தங்கள் குடும்ப ஆண்களை இழந்த நமது பெண்கள் எப்படி அமைதியடைவர்?
பிரதமர்
உரையில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று: “நமது ஒற்றுமையே நமது பலம்.” பிரதமரின் இந்தக் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன். பிரதமர் போற்றும் தேச ஒற்றுமையைக் குலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தேச விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தேசத்தின் ஒற்றுமையினைப் பிரதமர் காப்பாற்ற வேண்டும்.
ஆனால்,
பிரதமர் கூறுவதை அவரது சொந்தக் கட்சியினரே பின்பற்றுவதாகத் தெரியவில்லையே! பகல்காம் சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அந்தப் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்புபடுத்தி தேசம் முழுவதும் இசுலாமிய எதிர்ப்புணர்வினை உருவாக்குகின்ற வகையில் வலதுசாரி பாசிச மதவெறி சக்திகள் ஒரு பெரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று உணராத அவர்களது வெறுப்புப் பிரச்சாரத்தை, அப்படுகொலைகளால் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அநியாயமான அந்த விஷமப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள் மீதும் மிகவும் கேவலமான தாக்குதல்களை மதவெறி சக்திகள் வன்மத்துடன் தொடர்ந்தன.
கொல்லப்பட்ட
கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷி அகர்வால் “இந்தத் துன்பியல் சம்பவத்திற்குக் காஷ்மீரிகளையோ, முசுலிம்களையோ குறைசொல்ல வேண்டாம்”
என்று இணையதளத்தில் தெரிவித்ததற்குப் பா.ச.க.
உள்பட பலர் அவரை மிகவும் கொச்சையாக விமர்சித்தனர். இறந்துபோன திருவனந்தபுரம் இராமச்சந்திரன் என்பவரின் மகள் திருமதி. சரத் அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னோடு இறுதிவரை நின்று உதவி செய்த இரண்டு இசுலாமியக் காஷ்மீரி இளைஞர்களைப் பார்த்து, “தந்தையை இழந்து நின்ற எனக்கு இறைவன் கொடுத்த இரண்டு சகோதரர்கள்” என்று
கூறியதையும் வலதுசாரி மதவாதச் சக்திகள் கடுமையாக, கொச்சையாக விமர்சித்தன.
பயங்கரவாதச்
சம்பவங்களுக்குத் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்கள் செய்த அனைத்து உதவிகளையும் செய்திகளாக வெளியிட்ட உள்ளூர் தொலைக்காட்சிகளையும், பத்திரிகையாளர்களையும் வன்முறையாளர்கள் கடுமையாக மிரட்டினர். காஷ்மீரத்துச் சாமானிய மக்கள் - குதிரை ஓட்டுவோர், சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்றவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்து உதவி செய்தனர். ஆனால், தேசிய ஊடகங்கள் உள்பட பெரும்பாலான ஊடகங்கள் இந்த நல்ல செய்திகளை இருட்டடிப்பு செய்தன.
பகல்காம்
பயங்கரவாதப் படுகொலைகள் நடப்பதற்குப் பாதுகாப்புக் குறைபாடுகளும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வியைக் கேட்பதே தேச விரோதச் செயல் என்று அவர்கள் கொக்கரிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? இதனைப் பற்றிய விவாதங்கள் பொதுத்தளத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. இதற்காகவே இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை வேகப்படுத்துகிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது. அதற்காகச் சில நேரங்களில் அவர்கள் எல்லைகளை மீறும்போது தேசத்தின் எதிர்காலம் பற்றிய நமது கவலை அதிகமாகிறது.
நீண்ட
அனுபவம் உள்ளவரும், இராஜதந்திர நடவடிக்கைகளில் நிறைந்த அனுபவம் உள்ளவருமான நமது வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது என்பதை அறிவித்ததற்காக அவர் மோடியின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சமூக ஊடகங்களில் அவர்மீது பழிசுமத்தி அவரையும், வெளிநாட்டில் வாழும் அவரது மகளையும் வரைமுறையில்லாமல் திட்டித்தீர்த்த சங்கிகளின் மூர்க்கத்தனத்தைத் தடுத்து நிறுத்தி, தட்டிக்கேட்டுத் தவறிழைத்தவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் சங்கத்திற்கு இருந்த உணர்வுகூட ஒன்றிய அரசிடம் இல்லையே! கடைசியில் தனது சமூக ஊடகக்கணக்கையே மூடிவைப்பதைத் தவிர மிஸ்ரிக்கு வேறொன்றும் செய்ய இயலவில்லை! அதைவிடப் பெரும் கொடுமை ‘மதச்சார்பற்ற இந்திய இராணுவத்தின்’ முகமாகச்
சர்வதேச ஊடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் சர்வதேச ஊடகங்களுக்குச் சிறப்பாக அறிவித்துக் கொண்டிருந்த கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று மத்தியப் பிரதேசத்தின் பா.ச.க.
அமைச்சர் விஜய்ஷா பகிரங்கமாக அறிவித்ததுதான். தேசம் முழுவதும் உள்ள குடிமைச் சமூகமும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பின்னரும் பிரதமரும் பா.ச.க.வும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது ஆச்சரியமாக இருக்கின்றது.
தேச
ஒற்றுமையின் ஆணிவேரை அழித்துவிடத் துடிக்கும் இப்படிப்பட்ட தேசவிரோதிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்படித் தேச ஒற்றுமையைக் காப்பது என்பதைப் பிரதமர் நமக்கு விளக்க வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கே தேச ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டின் எதிர்காலம் என்ன?
எங்கள்
பிரதமரே! எனக்கு நம்பிக்கை இல்லாத, தனது சிந்தனையில், செயல்பாட்டில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு தத்துவத்தை நான் மற்றவர்களுக்குப் போதிப்பதால் என்ன மாற்றம் வந்துவிடும்? சொல்லுங்களேன்!