news-details
சிறப்புக்கட்டுரை
வலையும் வாழ்வும் – 12

சித்ராவின் சக்கர நாற்காலி சத்தம் கேட்டவுடன் எழுந்து இடம் கொடுத்து விட்டு நகர்ந்து சென்று படுத்துக்கொண்டது ஜிம்மி. இருபத்தைந்து வயதிலிருந்தே இருசக்கர நாற்காலிக்குள் அடங்கிப்போயிருந்தது சித்ராவின் வாழ்க்கை. அருகாமையில் உள்ள பள்ளியில் மாலை 4 மணிக்கு அலறும் மணியின் சத்தம் சித்ராவிற்கான சிக்னல். அவள் எங்கு இருந்தாலும் பள்ளி மணி அடித்ததும் அந்தச் சக்கர நாற்காலி நகர்ந்து சன்னலோரம் வந்து நிற்கும். வீடு திரும்பும் பள்ளி மாணவர்களின் உற்சாகத் துள்ளல், வரிசை மீறும் ஆட்டோக்கள், ஓடிவரும் மழலையரை அணைத்துக்கொள்ளும் அம்மாக்கள், சாலையோரப் பாட்டிக் கடையில் தேனீக்களுக்குப் போட்டியாய் மொய்த்துக் கிடக்கும் மாணவர்கள், மாணவர்கள் வீடு திரும்பும் முன்பே முண்டியடித்துக் கொண்டு வீடு பறக்கும் ஆசிரியர்கள் என்று சன்னலோரக் கம்பிகளின் வழியாக நிகழும் காட்சிக் குவியலுக்குள் சித்ராவின் கண்கள் யாரையோ எதையோ தேடும்!

அப்படி என்னதான் பாப்பியோ? யாரைத்தான் தேடுறியோ? கேட்டா சொல்லவும் மாட்டேங்குற. பார்த்தது போதும். காப்பி போட்டு வச்சிருக்கேன், எடுத்துக் குடி. ஆறிடப் போகுது.”

கண்டிப்புக் கலந்த கரிசனையில் சொன்னாள் சித்ராவின் தாய். சித்ரா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள்தான். தந்தை மஸ்கட்டில் 15 ஆண்டுகள் டிரைவர் வேலை பார்த்து விட்டு இப்போது சென்னைப் புறநகர் புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகைக் கார் ஓட்டுகிறார். ஊபர், ஓலா, ராபிடோ ஓட்டங்கள்தான். இரவு-பகல் பாக்காம ஓட்டுனா கையில கொஞ்சம் பணம் மிஞ்சும்.  சித்ராவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால் செயலிழக்கத் தொடங்கியது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு அலைந்து பார்த்தபின்பும் நோய்க்கான காரணம் தெரியவில்லை. இக்கொடிய நோயினுடைய வீச்சு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாரும் அறிந்திருந்தனர்.

பட்டாம்பூச்சி பறக்கத் துடிக்கும்போது வாலில் சிறு கல் கட்டி விளையாடும் சிறு பிள்ளைகள்போல கடவுள் தன்னை விளையாட்டுப் பொருளாக்கி விட்டாரே என்று சித்ராவிற்குக் கடவுளின் மேல் ஒரு கோபம் உண்டு. சன்னல் அருகில்தான் சித்ராவின் பெரும்பான்மையான காலம் சக்கர நாற்காலியில் கடந்து போனது.

சித்ரா சிலகாலம் வாழ்ந்து, இறந்தும் போனாள். ஆனால், கடைசிவரை அவளைத் தாக்கிய கொடிய நோய் என்னவென்று தெரியவில்லை; அவள் சன்னல் கம்பிகளுக்கு வெளியே யாரை அல்லது எதைத் தேடினாள் என்பதும் தெரியவில்லை. எல்லாம் தனக்குத் தெரிந்தும் வெளியில் சொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் சன்னலோர வெளிச்சக் கீற்றுகளுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடந்தது சித்ரா வளர்த்த ஜிம்மி. 

சித்ராவின் தேடல் விவரங்களும் அவள் நோய் விவரங்களும் யாருக்கும் தெரியாமல் போனதுபோல, செயற்கை நுண்ணறிவு செயற்பாட்டு முறைமைகளில் யாருக்கும் தெரியாத அல்லது புரியாத பகுதி என்று ஒன்று உள்ளது. இதனை ‘பிளாக் பாக்ஸ் (Black box) என்கின்றனர்.

இன்று செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவிற்கு இணையாகப் பேசப்படுகின்றது. மருத்துவம், கல்வி, ஊடகம், தொழில்நுட்பம் என்று இன்று செயற்கை நுண்ணறிவு இல்லாத தளங்களே இல்லை எனலாம். எனினும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்துகின்ற ‘பிளாக் பாக்ஸ் பிரச்சினையினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அது எப்படி இயங்குகிறது? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயங்குகின்றது? எங்கிருந்து தரவுகள் பெறப்படுகின்றன? இதனுடைய தரவுகளின் அளவு என்ன? எந்த நாட்டின் தரவுகள் அதிகமாக உள்ளது? எந்தெந்த மொழிகள் இந்தத் தரவுத்தளங்களில் உள்ளன? எந்தக் குறிப்பிட்ட கருத்தியல் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது? எந்த ‘அல்காரித கோட்பாட்டின் அடிப்படையில் தரவுகளைத் தேடிக் கண்டறிகிறது? எந்த ‘அல்காரித அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காதபோது அதனைச் செயற்கை நுண்ணறிவு உலகில் ‘பிளாக் பாக்ஸ் (Black Box) என்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் அடிப்படையே இயந்திரக் கற்றல் (Machine Learning (LM) எனலாம். இம்முறையின்படி ஓர் இயந்திரம் தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளை முழுமையாகக் கற்றறிந்து கொண்டு, அத்தரவுகளுக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புகைப்பட வடிவிலோ, காணொளி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதில் தருகின்றது. கொடுக்கப்படும் தரவுகள் பெரிதாக இருந்தால் (Big Data) பதில்களின் நம்பகத்தன்மையும் அதிகமாக இருக்கும். கொடுக்கப்படும் தரவுகள் அமெரிக்காவைச் சார்ந்தது எனில், அது தரும் பதில் தரவுகளும் அமெரிக்க வாசம் கொண்டதாகவே இருக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பக் கூடங்களில் உருவாக்கப்படுவதால், இயல்பாகவே இத்தாலியிலுள்ள பைசாவின் சாய்ந்த கோபுரம்போல மேற்கு நாடுகள் பக்கமாக அதனுடைய சார்புத்தன்மையும் (Bias) சாய்ந்தே நிற்கின்றது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு வழியாகப் பெறப்படும் தரவுகளின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இத்தகைய அடிப்படையும் அணுகுமுறையும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. கச்சா எண்ணெயை மையமாகக் கொண்டு உலகப் போர்கள் உருவானதுபோல பெரும் தரவுகளை (Big Data) மையப்படுத்தி நாடுகளுக்கிடையே சண்டைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் தரவுத்தொகுப்பின் (Big Data) முக்கியத்துவம் அறிந்து இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information technology (Meit) மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில் இந்தியாவிற்கான தரவுத் தொகுப்பு (National Data Set) ஒன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ‘ஏ.ஐ. கோஷா (A.I. Kosha) என்னும் இந்தியாவிற்கான இத்தரவுத் தொகுப்பு பல்வேறு இந்தியத் துறைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ... யாராக இருந்தாலும் பெரும் தொகுப்பைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வடிவமைத்திருந்தாலும், அதன் செயல்பாட்டு முறைமையை அதனைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு விரிவாக விளக்கிக்கூறும் தன்மை என்பதே (Explainable AI) அறநெறியாகும்.

கடைக்குச் சென்று ஓர் உணவுப்பொருள் வாங்குகிறோமெனில், அந்த உணவுப்பொருள் எங்குத் தயாரிக்கப்படுகிறது? என்னென்ன பொருள்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன? என்பன போன்ற தெளிவுகளை அப்பொருளை உருவாக்கும் நிறுவனம் விளக்கிக்கூறுவதும் அதனை அறிந்து கொள்வதும் அதனைப் பயன்படுத்துபவரின் உரிமையென நான் நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவு காலத்தின் கட்டாயம் என்றாலும், அதன் நெறிப்பாட்டு முறையின் செயல்பாடு அதன் பெரும் தரவுகளின் விவரம் அதனைப் பயன்படுத்தும் சாமானிய மனிதனுக்கும் விளக்கிக் கூறப்பட வேண்டும் என்ற குரல் மட்டும் தொடர்ந்து உலகின் ஏதோ ஓர் ஓரத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

சன்னல் திரைகளைத் திறந்தே வைப்போம்; சன்னலோர வெளிச்சம் இருண்டு கிடக்கும் வீட்டை நிரப்பட்டும்.