news-details
ஞாயிறு மறையுரை
ஜூன் 01, 2025 ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) திப 1:1-11; எபி 9:24-28;10:19-23; லூக் 24:46-53 - இயேசுவின் சாட்சிகளாய்... நீட்சிகளாய்...

அமெரிக்காவைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற நற்செய்தியாளர் பில்லி கிரஹாம் அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த ஓர் இல்லத்தலைவி ஒருநாள் கிரஹாம் அவர்களுக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதத்தில்அன்புப் போதகரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்குப் பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே, எனக்குத் தடையாக இருக்கிறதுஎன்று எழுதியிருந்தார். அக்கடிதத்திற்குக் கிரஹாம், “அன்பு அம்மா! நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் நற்செய்திப் போதனைகளைத் தொடங்குவதற்குக் கடவுள் ஏற்கெனவே உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!” என்று பதில் அனுப்பினார்.

இன்று நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் மாறுவதுதான்.

இன்றைய நாளில் லூக்கா நற்செய்தி ஆண்டவரின் விண்ணேற்றத்தை விவரிக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் தம் சீடர்களிடம்பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் (லூக் 24:47) என்ற கட்டளையை வழங்குகிறார். மத்தேயு நற்செய்தியில்நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள் (மத் 28:19) என்றும், மாற்கு நற்செய்தியில்உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்றும் கட்டளை கொடுக்கிறார். இவை அனைத்தும் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் வழங்கிய இறுதிக் கட்டளைகள். இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாக வாழ (திப 1:8) அழைக்கும் இயேசு, அப்பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான தமது இறையுதவியையும், தமது நீங்கா உடனிருப்பு தூய ஆவியார் வழியாகவும் கிடைப்பதாக (லூக் 24:49) உறுதியளிக்கிறார்.

இயேசுவின் நற்செய்திப் பணி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்; உலக மக்கள் அனைவரும் நற்செய்தியைப் பெறவேண்டும்; நற்செய்திப்பணி நில வரையறையும் கால வரையறையும் கடந்து ஆற்றப்பட வேண்டும். இதற்காகவே இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமது பணியை முடித்துக் கொண்ட இயேசு, இனி சீடர்களின் வழியாக அப்பணி தொடரவேண்டும் என்று விரும்பி அதை ஒரு கட்டளையாகவே அவர்களுக்கு வழங்கினார். இயேசு பணித்தவாறே சீடர்களும் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினர்.

இன்று, இயேசுவின் நற்செய்தி அறிவித்தலை யார் அறிவிப்பது? எப்படி அறிவிப்பது? எங்கு அறிவிப்பது?

முதலில், நற்செய்திப் பணியை யார் அறிவிப்பது? ‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்என்பது இயேசுவின் பணி தொடர்வதற்கான அடிப்படைக் கூற்று. நற்செய்தி ஒரு வித்து! நற்செய்தியின் மையம் இயேசு! நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் இயேசு! அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் இயேசு! இயேசு எனும் நற்செய்தி உலகில் எத்திசையிலும் ஊன்றப்பட வேண்டும். அனைவரையும் இயேசுவின் சீடராக்க வேண்டும். இதற்காகவே திருத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். ‘சீடராக்குதல், ‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்என்ற சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்ற வேண்டியவர்கள் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம் எழக்கூடும். ‘போதிப்பவர்களே போதகர்கள்என்பது கூற்று! இயேசுவின் இறுதிக் கட்டளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரண தொழிலாளிகள். இவர்களும் மக்களுமே முதலில் நற்செய்தியை அறிவித்தவர்கள். எனவே, நற்செய்தி அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள், துறவியருக்கான பணி என்பதையும் கடந்து, திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துகிறது இயேசுவின் விண்ணேற்ற விழா.

இரண்டாவது, நற்செய்தியை எப்படி அறிவிப்பது? நற்செய்தி அனைத்து மக்களுக்கும் அனைத்துச் சூழல்களிலும் வாழ்வால் அறிவிக்கப்பட வேண்டும். புனித ஜான் மரிய வியான்னிகிறித்தவர்கள் என்பவர்கள் ஆலயத்தில் கைகளைக் குவித்துக் கடவுளை ஆராதிப்பவர்களாகவும் ஆலயத்தை விட்டுச் செல்கையில் கைகளை அகல விரித்து அன்புப்பணி புரிபவர்களாகவும் உள்ளனர்என்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவர்கள் தங்கள் வார்த்தைகளைவிட வாழ்வால் கிறிஸ்துவைப் பறைசாற்ற வேண்டும்என அடிக்கடிக் கூறுவார். ஆகவே, வார்த்தை வடிவில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணி, இன்னும் நீடித்த, ஆழமான தாக்கங்களை உருவாக்கும். நம்பிக்கையைத் தருவது, எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி இருப்பது, தீமைக்கு நன்மையுடன் பதிலளிப்பது, துயருறும் மக்களுடன் நெருங்கிப் பழகுவது - இவையே நற்செய்தி அறிவிப்பின் வாழ்வியல் கூறுகள். வாழ்வே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதாக இருந்தால் அதுவே சிறந்த நற்செய்தி அறிவிப்பு. வார்த்தையால் நற்செய்தி அறிவிப்பது என்பது மிக எளிது. ஆனால், வாழ்வால் நற்செய்தியை அறிவிப்பது என்பது கடினமான பணி! நற்செய்தி அறிவிப்பதில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, “இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை (2கொரி 4:8) என்பதில்தான் நிறைவான மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும்.

மூன்றாவது, நற்செய்திப் பணியை எங்கு அறிவிப்பது? நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் தொடக்கம் அவரவர் வாழும் இடங்களில் தொடங்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல்களில் இயேசுவின் விண்ணேற்றம் எருசலேம் அருகில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். நற்செய்தியாளர் மத்தேயு மற்றும் மாற்கு இந்நிகழ்வு கலிலேயாவில் நிகழ்ந்ததென்று குறிப்பிடுகின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் இருந்தன. இவற்றில் எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த நகரம் யூதேயா. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்கிறார். மேலும், இயேசு தம் நற்செய்தியை அறிவிக்க, இறையாட்சியை அறிமுகப்படுத்த சீடர்களைத் தேர்ந்தெடுத்த கலிலேயப் (மத் 4:12-17) பகுதியில் இயேசு சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி தொடங்க வேண்டும் என்று பணிப்பது, முதலில் நற்செய்தியைப் பறைசாற்றுதல் அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் தொடங்க வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவுறுத்துகிறார்.

இன்றுநற்செய்தியைப் பறைசாற்றுதல்என்பது ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாறிப்போனது. இதனால் நன்மைகள் விளைந்ததைவிட, பிரச்சினைகளே அதிகம் விளைந்துள்ளன. 1960-இல் ஜோசப் பெய்லி என்னும் அமெரிக்க எழுத்தாளர், மனிதத் தொடர்பின்றி அறிவிக்கப்படும் நற்செய்தியால் எந்தப் பயனுமில்லை என்பதைThe Gospel Blimpஅதாவதுநற்செய்தி வானூர்திஎன்ற நூலில் ஓர் உவமை வழியாக விளக்கிக் கூறுகிறார். நற்செய்தியைத் தங்கள் ஊரில், பிரம்மாண்டமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிறித்தவக் குழுவினர், Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதிலிருந்து திருவிவிலிய வாசகங்கள் அடங்கிய சிறு சிறு நூல்களைச் சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள்போல் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தியிலிருந்து நற்செய்திப் பாடல்கள் மிகச் சத்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டதைக் கேட்டு மக்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதேவேளையில், அந்த இரைச்சலால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள் ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. திருவிவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்தவிவிலியத் தாக்குதலைவெறுத்தனர். நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும் நம்பி பறைசாற்றப்படும் நற்செய்தி மக்களை இறைவனிடமிருந்தும் நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை ஜோசப் பெய்லி இந்த உவமை வழியே கூறுகிறார்.

நிறைவாக, இயேசுவை மையப்படுத்தாமல், அவரது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமைகொண்டு போதிக்கும் போதனையோ அல்லது பயன்படுத்துகின்ற விளம்பர வழிகளோ இச்சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்துகொள்வோம். நமது திருத்தந்தை பதினான்காம் லியோ தனது முதல்ஊருக்கும் உலகுக்கும்எனும் உரையில் குறிப்பிட்டதுபோல, “நாம் கிறிஸ்துவின் சீடர்கள்; மனிதகுலம், கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக நாம் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவதும் உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டுவதும் எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க ஒருவருக்கொருவர் உதவுவதுமே நற்செய்தி அறிவிப்பு.”

எனவே, நற்செய்தியைப் பறைசாற்றலும் சீடர்களின் உருவாக்கமும் முதலில் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து தொடங்கட்டும். நமது படிப்பினைகளும் பாதைகளும் நமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வுக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் அமையட்டும்.