சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பலஸ்த்ரேரோ ‘கடன் நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான உரிமை’ என்ற தலைப்பில் நீதி, கருணை மற்றும் புதுப்பித்தலின் காலமாகிய யூபிலி ஆண்டில் ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் நீக்கப்பட வேண்டியதன் ஒழுக்க ரீதிக் கடமைகள் குறித்து ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார். பல கோடி மக்களின் வருங்காலம் வெளிநாட்டுக் கடன் சுமையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்ற கவலையை வெளியிட்ட பேராயர், வளர்ச்சி நெருக்கடி என்பது வெளிநாட்டுக் கடன் நெருக்கடியோடு பிரித்துப் பார்க்க முடியாதது எனத் தெரிவித்தார். மேலும், பேராயர் பலஸ்த்ரேரோ, மனித மாண்புக்கும் பொதுநலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல், கடன் கொடுத்தலிலும் பெறுவதிலும் நன்னெறிக் கடமைகள், நீதிக்கான மதிப்பு, உலக அளவிலான ஒருமைப்பாடு போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.