news-details
ஆன்மிகம்
படைப்பாற்றலோடு இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 45)

இறைவேண்டல் இறைவனின் அருள்! அதேவேளையில் மனித முயற்சியும்கூடஎன்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம 2725). எனவே, நமது இறைவேண்டல் நிறைவானதாக, பொருளுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும்; நமது படைப்பாற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

இறையாட்சி பற்றிய உவமைகளின் நிறைவில்விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் (மத் 13:52) என்றார் இயேசு. இவ்வாக்கியத்தைப் பல விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் இந்தப் போதனை கிறித்தவ இறைவேண்டலுக்கும் பொருந்தும். இறைவேண்டல் பற்றிக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கிறித்தவரும் திரு அவைக் கருவூலத்திலிருந்து பழையவற்றையும், அதாவது இருபத்தொரு நூற்றாண்டு கால மரபுகளையும் பின்பற்ற வேண்டும். அதேவேளையில் படைப்பாற்றலோடு புதியவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டும். எனவே, நமது தனி வேண்டல், குடும்ப வேண்டல், திரு அவைச் சமூக வேண்டல் என்னும் அனைத்துத் தளங்களிலும் படைப்பாற்றலோடு நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைவேண்டலின் பரிமாண வளர்ச்சியை உற்றுநோக்கும்போது, அதில் இறைவனின் அருளோடு, இறையடியார்களின் படைப்பாற்றலும் இணைந்திருப்பதை நாம் காணலாம். இயேசுவே இறைவேண்டலைப் படைப்பாற்றலோடு அணுகியவர்தாமே!

யூதர்களின் மரபிலே அதுவரையில் இல்லாத ஓர் அணுகுமுறையில் கடவுளைஎங்கள் தந்தையேஎன்று முதன்முதலாக அழைத்தவர் இயேசுதாம். அவரது படைப்பாற்றலே தொடக்கத் திரு அவைக்கு ஊக்க மருந்தாக அமைந்து, திரு அவையின் இறைவேண்டல் பயணம் பரிமளிக்க உதவியது.

தொடக்கத் திரு அவை இப்போது நாம் கொண்டாடும் திருப்பலியைஅப்பம் பிடுதல்என்று படைப்பாற்றலோடு அழைத்தது. தொடக்கத் திரு அவையினர்திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் (திப 2:42). உண்மையில் திருத்தூதர் கற்பித்த நம்பிக்கை அறிக்கையே கி.பி. 325-ஆம் ஆண்டுநீசேநம்பிக்கை அறிக்கையாக வளர்ச்சி அடைந்தது. கிறித்தவ நட்புறவு ஒற்றுமையிலும் பொதுவுடமைப் பகிர்விலும் மலர்ந்தது. அவ்வாறே, இறைவேண்டலும் படைப்பாற்றலோடு புதிய வடிவங்களை எடுத்தது.

இறைவேண்டலின் பல்வேறு வடிவங்களைத் தூய ஆவியாரின் துணையோடு உருவாக்கினார்கள் இறையடியார்கள். திருப்பாடல்களைத் திருப்புகழ் மாலையாக இறைவேண்டல் செய்தனர் துறவியர். புனித தோமினிக் பெற்ற வெளிப்பாடே செபமாலையாக மலர்ந்தது. எத்தனையோ புனிதர்களும் திருத்தந்தையர்களும் புதிய புதிய இறைவேண்டல் முறைகளை, மன்றாட்டுகளை உருவாக்கினார்கள். எனவேதான், இன்றைய திரு அவையின் பொதுவழிபாட்டிலும் தனி இறைவேண்டல்களிலும் எத்தனையோ வடிவங்களில் இறைவேண்டல் ஏறெடுக்கப்படுகின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ் ஆப் (Whats app) இறைவேண்டல் குழுக்கள் இயங்குகின்றன. வீடியோ அழைப்பு வழியே குடும்பச் செபமாலை அன்றாடம் நடைபெறுகிறது. திருத்தலங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் நடைபெறும் வழிபாடுகளும் இறைவேண்டல்களும் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இவையெல்லாம் இறைவனின் கொடையாகவும் மனித முயற்சிகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன.

நமது தனிவேண்டலில் நம் வாழ்வு அனுபவங்களை இணைத்துப் புதிய முறைகளில், புதிய வழிகளில் நாம் இறைவேண்டல் செய்யலாம். இங்கே எனது அனுபவத்திலிருந்து மூன்று பரிந்துரைகளைப் பகிர விரும்புகிறேன். எனது பார்வையில் ஆராதனை, இறைப்புகழ்ச்சி-நன்றி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் என்னும் இறைவேண்டலின் ஐந்து கூறுகளில் தனி வேண்டலில் அதிக அழுத்தமும் நேரமும் பெறவேண்டியது இறைப்புகழ்ச்சி-நன்றியே. இறைப்புகழ்ச்சியில் நாம் பல புதிய முறைகளை உருவாக்கலாம்:

1. ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ஆசிகளை இறைவன் அவர்கள்மீது பொழிந்துள்ளார் என்று ஒவ்வொருவரும் நம்பலாம். எனவே, நமது வயதுக்கேற்ப அத்தனை ஆசிகளைப் பட்டியலிட்டு நாள்தோறும் மூவோர் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

2. இயேசுவின் 48 பெயர்களைச் சொல்லிஉமக்குப் புகழ் இயேசுஎன்னும் பதில்மொழியை இணைத்து நாள்தோறும் பாடலாகவோ, வேண்டலாகவேஇயேசுவுக்குப் புகழ்மாலைசூட்டுகிறேன்; Anbudan Arulventhan என்னும் யூடியூப் தளத்தில் இந்தப் பாடலின் காணொளியைக் காணலாம்.

3. செபமாலையைப் பயன்படுத்தி ஐந்து பத்து மணிகளிலும்இயேசுவே உமக்குப் புகழ், இயேசுவே உமக்கு நன்றி  எனக் கூறி, பெரிய மணியில்மரியே வாழ்க, அருள் நிறைந்த அன்னையே வாழ்கஎன்றும், பின்னர்தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சிஎன்னும் திருத்துவப் புகழைக் கூறலாம். ஐந்து பத்து மணிகளின் தொடக்கத்தில் ஒவ்வொரு நன்றிக் கருத்தையும் இணைத்து இந்தஇறைப்புகழ்ச்சி செபமாலையைமன்றாடலாம். பல ஆண்டுகளாக இம்மூன்றையும் நான் என் தனி வேண்டலில் இணைத்துக்கொள்வதோடு, நான் நடத்தும் தியானம், பாசறைகளில் பிறருக்கும் இவற்றைக் கற்பித்துள்ளேன்.

இந்திய மரபையும் பண்பாட்டையும் நம் இறைவேண்டலில் இணைத்துக்கொள்வதும் ஒரு படைப்பாற்றலே. இயேசு சபைத்துறவி அருள்தந்தை அந்தோணி டிமெல்லோ உருவாக்கியசாதனாதியானம் துறவியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நடந்துகொண்டே இறையோடு ஒன்றிக்கும்இறைவேண்டல் உலா (Prayer Walk), ஐந்து விரல்களையும் கொண்டு வேண்டும்ஐவிரல் மன்றாட்டு (Five Finger Prayer), உடலசைவோடு பாடிப் போற்றுதல் (Action Song Prayer), குடும்பத்தினர், நண்பர்களின் பெயர்களைக் கூறி மன்றாடுதல், சமைக்கும்போதும் இறைப்புகழ்ச்சி... என எத்தனையோ விதவிதமான வகைகளில் வேண்டலாம்.

மனம் இருந்தால், வழி உண்டுதானே! தேவையானது ஒன்றே; இறைவேண்டல் ஆர்வம் இருந்தால் போதும். நாமே நம் இறைவேண்டலைச் செதுக்கிக்கொள்ளலாம்.