சுமார் 800 வருடங்களுக்கு முன் புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு மாபெரும் அபாயச் சங்கை ஊதிச்சென்றார். அது ‘இயற்கை-மனிதன் உறவில்’ ஏற்பட்டிருந்த சறுக்கலைப் பற்றியது; இயற்கைக்கு எதிராக மனிதன் செய்து கொண்டிருந்த செயல்பாடுகளைப் பற்றியது; மனித இனத்தின் அழிவைப் பற்றியது. இப்பேராபத்திலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டும் என்றால், அவனுடைய ‘மனிதச் செயல்பாடுகளில்’ ஒரு மாபெரும் மாற்றம் தேவை என்று புனித பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
மனித
வாழ்வு அடிப்படையில் நான்கு உறவுகளைச் சீராக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவை நான்குமே ஒன்றாகச் சமநிலையில் பயணிக்க வேண்டியவை. ஒரு நிலையில் விரிசல் ஏற்பட்டாலும், மற்ற நிலைகளையும் சரித்துவிடும் அபாயம் உள்ளது. புனித பிரான்சிஸ் அந்த நான்கு உறவுகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறார்:
1. என்னோடு
நான் கொண்டுள்ள உறவு
2. நான்
கடவுளோடு கொண்டுள்ள உறவு
3. நான்
அயலாரோடு கொண்டுள்ள உறவு
4. நான்
படைப்போடு கொண்டுள்ள உறவு
தொடக்கத்தில்
ஏதேன் தோட்டத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படியாத காரணத்தால்தான் கடவுளோடு கொண்டிருந்த உறவை மனிதன் முறித்துவிட்டான். அதன் விளைவாக மற்ற மூன்று நிலைகளில் உள்ள உறவையும் மனிதன் முறித்துக் கொள்கிறான். இந்த அவல நிலையைப் புனித பிரான்சிஸ் அசிசியார் நிவர்த்தி செய்யும் முயற்சியில், அதே நான்கு உறவுகளையும் சீராக அமைத்துக்கொள்வதன் மூலம், மீண்டும் கடவுள் நம்மைத் தூக்கி எறிந்த ஏதேன் தோட்டத்திற்கு நாம் திரும்பிவிடலாம் எனும் மாபெரும் நற்செய்தியைத் திரு அவைக்குக் கொடுத்துச் சென்றார். ஆனால், திரு அவையில் பெரிய மாற்றம் வந்தது போல வரலாறு நமக்குக் கூறவில்லை. எதிர்பாராத விதமாக, 800 வருடங்கள் அந்த நான்கு உறவுகளில் மனிதன் என்னென்ன அழிவுகளை உருவாக்க முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தான். திரு அவையும் புனித அசிசியார் காட்டிய பாதையில் நடக்க மறந்திருக்கிறது.
அதன்
காரணமாக, புனித பிரான்சிஸ் அசிசியாரே மீண்டும் ‘திருத்தந்தை பிரான்சிஸ்’ எனும்
அவதாரத்தை எடுத்து, மார்ச் மாதம் 13-ஆம் நாள் 2013-ஆம் ஆண்டு இப்புவியில் அவதரித்தார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவதாரம் எடுத்த இரண்டு ஆண்டுகளில் 2015, மே 24 அன்று திரு அவையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழுமையான திருத்தூது மடலைத் தந்திருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்þ. மொத்தம் 246 பத்திகளைக் கொண்டது ‘laudato si’ என்னும் இம்மடல்.
தமிழில் ‘புகழ் அனைத்தும் உமதே’ என்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.
ஏறக்குறைய
2014 ஆண்டுகளாக ‘மனித-இயற்கை உறவை’ பற்றிய தெளிவான சிந்தனையைக் கொடுக்காத திரு அவை, திடீரென 2015-இல் ‘அறம் செய்ய விரும்பு’
என ஒளவையார் கற்பித்தது போல, திருத்தந்தை பிரான்சிஸ் வாயிலாக ‘புகழ் அனைத்தும் உமதே’ என்னும் அறநூலை வெளியிட்டிருப்பது விந்தையிலும் விந்தை எனலாம். தூய ஆவியானவர் தூண்டுதல் மூலம் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் விந்தைதானே!
2015-ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாரிஸ் மாநகரத்தில் 196 நாடுகளை உள்ளடக்கிய ‘பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு’ ஒன்றை நடத்தத் தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் ஆறு மாதங்களுக்கு முன்பே ‘புகழனைத்தும் உமதே’ என்னும் சூழல் பாதுகாப்பு அறநூலை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே ஆவியானவரின் தூண்டுதல் அல்லது புனித பிரான்சிஸ் அசிசியாரின் தூண்டுதல் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.
உலக
நாடுகளின் தலைவர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய நூலைப் படித்து, அதில் கூறப்பட்டிருக்கிற நான்கு உறவுகளும் சம நிலையில் பயணிக்க
வேண்டும் என்றால், மனிதச் செயல்பாடுகளில் (Human Activity) ஒரு
மாபெரும் மாற்றம் தேவை எனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டு உலக நாடுகள் தரமான முடிவுகளை எடுத்து இப்புவியைப் பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
பாரிஸ்
மாநகரில் ‘cop-21’ என்று அழைக்கப்படும் உலக நாடுகள், உலக மதங்கள், உலக மக்கள், உலகப் பொருளாதாரம், உலக விஞ்ஞானத் தொழில்நுட்பம் போன்றவை cop-21 -இல் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கடந்த பத்து வருடங்களாகச் செயல்படுத்தி, அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்கள் என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் இப்புவி மேல் காட்டிய அக்கறை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி ‘Laudato Deum’ என்னும் இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய மடலை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘புகழ் அனைத்தும் இறைவனுக்கே’ என்னும்
இந்த மடல் மொத்தம் 72 பத்திகளை உள்ளடக்கிய ஓர் அறநூல் எனலாம்.
2023, டிசம்பர் மாதத்தில்
மீண்டும் ஓர் ஐக்கிய நாடுகள் சபை பருவநிலை மாற்ற உச்சி மாநாடு துபாயில் நடக்கப்போவதை முன்னிட்டு, ஏழு மாதங்களுக்கு முன்னமே இந்தச் சுற்றுச்சூழல் பராமரிப்பு மடலை வெளியிட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. இந்த மடலில் கூறப்பட்ட அறிவுரைகள் உலக நாட்டுத் தலைவர்களுக்குச் சென்று சேரவேண்டிய அவசியத்தில் ‘cop-28’ என்று
அழைக்கப்படும் துபாய் மாநாட்டில் மிகச் சிறப்பான விதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை முன்னெடுக்க இச்செயல் முக்கியமான செயலாக்கத் திட்டங்களையும்
தீர்மானங்களையும் எடுத்து ‘மனிதச் செயல்பாடுகளில்’ (human activity) ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவை.
2019-ஆம் ஆண்டு
‘புனித பிரான்சிஸ் பொருளாதாரக் கொள்கைகள்’
(Economy of Francis) எனும்
திட்டத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் கொண்டு வந்துள்ளார். இது சுமார் 11 வாரியங்களை உள்ளடக்கியது. புனித பிரான்சிஸ் அசிசியார் காட்டிய நான்கு உறவுகளின் வெளிப்பாடாக வந்த ஆன்மிகத்தை மையமாகக் கொண்டவை. அந்த 11 வாரியங்களில் ஒரு சில உதாரணங்களாக இதோ:
•
இயற்கை சக்தி உற்பத்தி
•
மழைநீர் சேகரிப்பு
•
கரிம மாசு அற்ற போக்குவரத்து
•
பசுமை உற்பத்தி
•
சூழல் அமைப்புகளின் பராமரிப்பு
•
குப்பை இல்லா உருவாக்கம்
•
மறுசுழற்சி, மீள் பயன்பாடு (Recycle, re-use)
•
சுற்றுச்சூழல் கல்வி
•
சுற்றுச்சூழல் ஆன்மிகம்
•
சுற்றுச்சூழல் வாழ்வுமுறை
•
இயற்கை விவசாயம்
இன்று
உலகளாவிய அளவில் கிறித்தவ சமயம் இயற்கைப் பராமரிப்புத் திட்டங்களைச் செல்வனே செய்து கொண்டிருக்கின்றது என்றால், அது திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக் கொண்ட முயற்சி எனலாம்.
2015-ஆம் ஆண்டு
‘புகழனைத்தும் உமதே’ என்ற மடல் மூலம் சுமார் 200 கோடி கிறித்தவ மக்களை இப்புவியின் பாதுகாப்பு ‘அக்கறையில்’ திருப்பிவிட்டவர்
திருத்தந்தை பிரான்சிஸ். 2023- ஆம் ஆண்டில் தனது ‘புகழனைத்தும் இறைவனுக்கே’ எனும்
இரண்டாவது சூழல் எழுத்து மடல் மூலம் ஏறக்குறைய 800 கோடி மக்களையும் இப்புவியைப் பாதுகாக்கும் மாமனிதர்களாக மாற்றியவரும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.
இறுதியாக,
2019-ஆம் ஆண்டு ‘புனித பிரான்சிஸ் அசிசியாரின் பொருளாதாரம்’ எனும்
திட்டத்தின் கீழ் “படைப்பில் உள்ள ஒட்டுமொத்த உயிரற்ற பஞ்சபூதங்கள், உயிருள்ளவை எனும் நுண்ணுயிரிகள் முதல் மனிதன் வரை கடவுள் உருவாக்கி, அவற்றை நல்லதெனக் கண்டார். அவற்றைக் கடவுள் எவ்வாறு அன்பு செய்கிறாரோ அதைப்போல மனிதனும் அவற்றை நல்லதெனக் காண வேண்டும்; அன்பு செய்ய வேண்டும்”
எனும் நற்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ‘படைப்பின் பங்காளி’ என்று அழைப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்!