கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே நம் கிறித்தவ வாழ்வின் அடிப்படையான நம்பிக்கையாக நம் அனைத்துப் பணிகளுக்கும் கிறித்தவ வாழ்விற்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பின் மேல்தான் திரு அவையும், கிறித்தவ நம்பிக்கையாளர்களின் சான்று வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து அனைத்துத் தீமைகளின் மீதும் வெற்றி கொண்டு எழுந்தது, அவருக்கு மட்டும் வெற்றியைத் தருவதாக அமைந்து விடாமல், அவர் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வெற்றி உண்டு எனும் உயர்ந்த வாக்குறுதியைத் திண்ணமாய் வழங்குவதை உறுதியாய் நம்புவது கிறித்தவ எதிர்நோக்கு.
கிறித்தவர்
என்றாலே கிறிஸ்து அடைந்த வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் என்றுதான் பொருள். திரு அவை என்றாலே கிறிஸ்துவின் வெற்றியை வாழ்வாக்கும் இயக்கம் என்றுதான் பொருள். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்... கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றது”
(1கொரி 15:14-17) என்ற பவுலின் வார்த்தைகள் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கும், நம்பிக்கையாளர்களாகிய நம் வாழ்வுக்கும் பணிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
புனித
பவுல் தன் பணி வாழ்விற்கும் நற்செய்திக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் வெற்றியே அடித்தளம் என்று அறைகூவல் விடுப்பதோடு, கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்கள் அனைவரின் நம்பிக்கை வாழ்வுக்கும் சான்றுகூறும் பணிகளுக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பே அடிப்படை என்ற உண்மையை உரக்கக் கூறுகிறார். இந்த அழைப்பின் அறிவிப்பில் நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே கிறித்தவ எதிர்நோக்கு என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் புனித பவுல் தன் நற்செய்தி அறிவிப்பாக மட்டுமல்ல, கிறித்தவ நம்பிக்கையாளர்களின் சான்று வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் மிக உறுதியாக எடுத்துக் கூறுகிறார். “கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால், எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியோராய் நாம் இருப்போம்”
(1கொரி 15:19) என்று கூறுவது, எதிர்நோக்கு என்பது நம் நம்பிக்கை, வாழ்வு, பணி, சான்றுபகர்தல் அனைத்தோடும் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்துகிறது. எதிர்நோக்கு என்பது இவ்வுலக வாழ்வைச் சார்ந்திருப்பது அல்ல என்று பவுல் கூறுவதன் பொருளை இன்று கிறித்தவ நம்பிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உலகு சார்ந்த
மூடநம்பிக்கைகள்
எதிர்நோக்குக்கு
எதிரானவை
அழிந்து
போகும் ஆதாயங்களை முன்னிறுத்தி வாழ்வது கிறித்தவ எதிர்நோக்கு அல்ல; கிறித்தவ வாழ்வுக்கும் மானிட மாண்புக்கும் எதிரான மூடநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வதும் செயல்படுவதும் கிறித்தவ எதிர்நோக்கு அல்ல; கடவுளின் வார்த்தைகளை வாழ்வு தரும் வார்த்தைகள் என்று உறுதியாய் நாம் நம்பும் சூழலில், நம்மையும் நம் சமூகத்தையும் ஏமாற்றுகிற, நம்மில் ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்துகின்ற சாத்திரங்களையும் ஏமாற்றுத் தர்மங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் குருட்டுச் சிந்தனைகளையும் நம்பி வாழ்வதும், அதையே பிறருக்குப் போதிப்பதும் மூடநம்பிக்கைகள் என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் கிறித்தவ எதிர்நோக்கு நிறைந்த வாழ்வுக்கு முற்றிலும் முரணானவை. “போலி மெய்யியலாலும், வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல; மனித மரபுகளையும் உலகின் பஞ்ச பூதங்களையும் சார்ந்தவை; அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள்” (கொலோ
2:8) என்று புனித பவுல் விடுக்கும் அழைப்பு, கொலோசையத் திரு அவைக்கு மட்டுமல்ல, இன்று மூடநம்பிக்கையில் தடுமாறும் யாவருக்கும் பொருந்தும்.
தீமையின்மீது
வெற்றி கொண்ட கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் நம்பிக்கையின் மீதும், அவரின் ஆற்றலின் மீதும் உறுதிகொள்வதைவிட, இந்த உலகம் காட்டும் தவறான பாதைகளில் நடப்பதும், பிறரை நடக்கவைப்பதும் மூடநம்பிக்கையே!
உயிர்த்த
கிறிஸ்து தம் சீடர்களைச் சந்தித்தபோதெல்லாம் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா
20:19-26) என்று வாழ்த்தினார். இந்த அமைதி செபம் திருவிவிலியச் சொல், அன்புடன் கூடிய இணக்கத்தையும், ஒற்றுமையுடன் கூடிய உறவையும் எடுத்துக்கூறும் வாழ்த்தாக அமைகிறது. ஆனால், இன்று சாதிய அடிப்படையிலும், கட்சி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் நம்மைப் பிரித்து ஏற்றத்தாழ்வுகளை வளர்ப்பதும், நாம் பிளவுபட்டு நிற்பதும், மூடநம்பிக்கையால்தான்.
ஞாயிறு
திருப்பலி இறைவார்த்தை அருளடையாளங்கள், சான்று பகரும் அன்பிய வாழ்வு, இவற்றுக்கு முரணாக கிறித்தவ நம்பிக்கையாளர்கள் நாள், நேரம், காலம், இடம், சகுனம், ஜோசியம், சாதியம், மந்திரம், தாயத்து என அழிந்து போகும்
அடையாளங்களைத் தேடுவதும் மூடநம்பிக்கையே. இப்படிப்பட்ட மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்ற கிறிஸ்துவின் வார்த்தைகளிலும் வாழ்விலும் கொள்ளும் நம்பிக்கையே எதிர்நோக்கு நிறைந்த வாழ்வு.
செயலற்ற நம்பிக்கை
வாழ்வு
செத்ததே
சான்று
பகரும் நம்பிக்கை வாழ்வே உண்மையான கிறித்தவ எதிர்நோக்கு! உயிர்த்த
கிறிஸ்துவும் இதையே தம் கட்டளையாகவும் விட்டுச் சென்றார் (மாற் 16:15-18; மத் 28:20).
“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்” (மத்
28:20) என்ற உயிர்த்த கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதே எதிர்நோக்கு கொண்டுள்ள திரு அவையின் செயல்பாடாக, நம்பிக்கையாளர்களின் செயல்பாடாக அமைய வேண்டும். மாற்கு நற்செய்தியில், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்... நம்பிக்கை
கொண்டோர் பின்வரும் அருளடையாளங்களைச் செய்வர்...” (மாற் 16:15-17) என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வாழ்வு என்பது சான்று பகரும் செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே, நம்பிக்கைக்கும் எதிர்நோக்குக்கும் இயேசுவின் போதனைகளில் மிகுந்த தொடர்பு உள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
எத்தனை
தடைகள் வந்தாலும், நெருக்கடிகள்
வந்தாலும், அச்சுறுத்தல்கள், அபாயங்கள் நம்மை நெருக்கினாலும் பெற்ற நம்பிக்கையை வாழ்வாக மாற்ற நாம் கொள்ள வேண்டிய உறுதிப்பாடே எதிர்நோக்கு!
“நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்” (யாக்
2:18) என்று சாட்சிய வாழ்வைப் பற்றி எடுத்துக் கூறும் யாக்கோபு, தன் கூற்றுக்கு ஆதாரமாக ஆபிரகாமின் அசைக்க முடியாத, ஆழமான, அர்த்தம் நிறைந்த நம்பிக்கை வாழ்வைச் சாட்சியம் பகரும் எதிர்நோக்கு நிறைந்த வாழ்வோடு தொடர்புபடுத்துகிறார் (யாக் 2:21-23).
அனைத்திற்கும்
நிறைவாக, “உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே”
(யாக் 2:26) என்று திருத்தூதர் யாக்கோபு குறிப்பிடுவதில் உயிர் உள்ள உடல் வாழ்வதே எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது. கிறித்தவ வாழ்வில் எதிர்நோக்கு எனும் செயல்பாடும் சாட்சியமும் நிறைந்த உறுதிப்பாட்டைக் குறிக்கும் செயலாக விளங்கப்படுகிறது.
கிறிஸ்துவில்
நம்பிக்கை என்பது, வெற்று வார்த்தைகளில் அல்ல; உயிர்ப்பிலும் உயிர்த்த கிறிஸ்துவிலும் நாம் கொண்டுள்ள வாழ்வுக்குச் சான்று பகரும் செயல்களாக வெளிப்பட வேண்டும். எனவே ‘கிறிஸ்து உயிர்த்தார்’ என்று
அறிக்கையிடுவதோடு தீமையிலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் சாதியப் பிரிவினையிலிருந்தும், மானிட வாழ்வுக்கு எதிரான செயல்களிலிருந்தும் நாம் விடுதலை பெற்று எழுவதே எதிர்நோக்குடன் கூடிய வாழ்வாகும்.