news-details
சிறப்புக்கட்டுரை
ஆடுகளின் பாடுகளை அறிந்த மேய்ப்பன்!

இயேசுவின் இயக்கம் வரலாற்றில் இடையிடையே அவரின் கனவுகளைக் கடந்து விலகிச் சென்றதுண்டு. ஆசிய இயேசுவின் இரத்தம் ஐரோப்பியக் கிண்ணங்களில் ஊற்றப்பட்டதால், ஏழைகள் ஏற்றம் பெற ஏணியாகத் தம்மை மாற்றிக்கொண்ட அவரின் மார்க்கத்தின் மீதுபிரபுக்களின் பிரதிநிதிஎன்ற பிம்பம் போர்த்தப்பட்டது. ‘இயேசுவின் மறையுடல்என்று சுட்டிக்காட்டப்படும் திரு அவையும் தன்னைச் சில வேளைகளில் அதிகார நாற்காலியோடு நகர்கிற பெருநிறுவனமாய் முன்னிறுத்தப்பட்ட வரலாறும் உண்டு.

அடுத்தவரின் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, தச்சுக்கூடத்தில் வளர்ந்து, நாடோடி வாழ்க்கை நடத்தி, இறுதியில் மாற்றானின் கல்லறையை இரவல் வாங்கித் துயில் கொண்ட ஏழை இயேசுவைத் திரு அவையும் அதன் தலைமைகளும் மறைத்துவிட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பிழைகளாக நிகழ்ந்துள்ளதை மறுக்க இயலாது.

21-ஆம் நூற்றாண்டில் காயப்பட்டு, தன் அடையாளத்தைத் தொலைத்து, திக்குமுக்காடிய திரு அவையின் பயணத்தில் நம்பிக்கை ஒளிக்கீற்றாய்த் தோன்றியவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தூதர் பேதுருவின் வரிசையில் 266-வது வாரிசாக வரலாற்றில் இடம்பிடித்த இவர், தன் வாழ்வாலும் பணியாலும் திரு அவையின் முகத்தை மாற்றிவிட்டார். தடம் மாறிப்போன இயேசுவின் இயக்கத்தை இயேசுவின் மனநிலைக்கு ஏற்ப சரியான தடத்திற்கு நகர்த்தி, அதை வழிநடத்தி வந்த சரித்திரச் சாதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே சாரும்.

ஏழைத் தொழிலாளர்களை ஏராளமாகக் கொண்டிருந்த, அர்ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகரில், புலம்பெயர்ந்த இத்தாலிய இரயில்வே தொழிலாளி மரியோ ஜோசப் பெர்கோலியோவிற்கு மகனாகப் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, அடிப்படையில் ஓர் ஏழை. ஆகவே, சிறு வயது முதலே ஏழைகள் மீது இரக்கம் இயல்பாகவே இவருக்கு வசப்பட்டது. இளமையில் குடும்பத்தில் பெற்ற அனுபவப் பாடம் மற்றும் வாலிபத்தில் இயேசு சபையில் இணைந்து எளிமையான வாழ்வைத் தனக்கென வகுத்துக் கொண்டது இவரது குருத்துவ வாழ்வுக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.

இயேசு சபைத் துறவி, அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை எனப் பணிவாழ்வு பரிணமித்தாலும், ஜார்ஜ் மரியோ தன் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு தன்னை ஏழைகளின் பங்காளனாய் வடிவமைத்துக் கொண்டார். இவர்பிரான்சிஸ்எனும் பெயரை அனிச்சைச் செயலாகத் தேர்ந்து கொள்ளவில்லை. அசிசி நகரத்துப் பிரான்சிஸ் செல்வக் குடியில் பிறந்தாலும், கட்டிய ஆடையைக் கூட பிறந்த வீட்டில் வீசிவிட்டு வெறுங்கையராய் வாழ்வை நடத்தியவர். அவர் பெயரை இவர் தேர்ந்து கொண்டபோதே தன் வாழ்வின் அடையாளத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

வரலாற்றில் திருத்தூதர்களின், பிரபலமான புனிதர்களின் பெயர்களையே திருத்தந்தையர்கள் தேர்வு செய்வதுண்டு. சிலரது பெயரைப் பல திருத்தந்தையர்கள் தேர்ந்து கொண்டு வரலாற்றில் தங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்வதுண்டு. ஆனால், கடந்த காலத்தில் எவருமே தெரிவு செய்யாத அசிசி நகரத்துப் புனிதரான பிரான்சிஸின் பெயரைத் தேர்வு செய்து தன்னை வித்தியாசமானவராக விலாசப்படுத்திக் கொண்டார்திருத்தந்தையாகத் தேர்வு பெற்றவுடனே அவர் மொழிந்தவை வரலாற்றுப் பதிவேடுகளில் தடம் பதித்தவை. “என் மக்கள் ஏழைகள் எனவும், தான் அவர்களில் ஒருவன் என்பதையும்...” என்று அவர் குறிப்பிட்டபோது அது உதட்டளவில் மட்டும் நின்றுவிடவில்லை. திருத்தந்தையர்களுக்கான பிரத்யேக மாளிகையில் தங்காமல், நகருக்கு வெளியே இருந்தபுனித மார்த்தா இல்லம்என்ற பயணியர் விடுதியிலே சாதாரண நபராய்த் தங்கியிருந்து தனது உணவைத் தானே சமைத்து உண்டு வந்தார் என்பது எண்ணிப் பார்க்க முடியாத நிகழ்வு.

இவரது எண்ணமும் ஏக்கமும் ஏழைகளைப் பற்றியதே என்பதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக்கூறலாம். அர்ஜென்டினாவின் வறுமை படிந்த வீதிகளை வாழ்வில் தெரிந்திருந்த காரணத்தால், அவர் ஏழைகள்மீது கரிசனை கொண்ட இரக்கத்தின் கவிதையாக இந்த உலகிற்கு அறியப்பட்டார். புலம்பெயர்ந்தவர்களில் பலர் போதிய வருமானம் இல்லாதவர்கள். சிலர் சட்டப்பூர்வ புலம்பெயர்வு பதிவு பெறாத காரணத்தால் அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டது. அர்ஜென்டினா மட்டுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பல் வாழ்வையே கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை நெஞ்சுக்குள் சேகரித்து வைத்திருந்த இந்த ஏழைப்பங்காளன், 2015, செப்டம்பர் அன்று அமெரிக்க மண்ணில் காலடி பதித்தபோது, தன் அடையாளத்தையும் நிலைப்பாட்டையும் உறுதிபடக் காட்டினார். தலைநகர் வாஷிங்டனில் வந்து இறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடன் மனந்திறந்து உரையாடினார். உலக வறுமை, புலம்பெயர்ந்தோர் கண்ணீர், வளரும் வன்முறை, பூமி வெப்பமயமாதல் என்று நீள்கிற மக்கள் பிரச்சினைகளே அவரது உரையை நிரப்பியிருந்தன. அதே அவையின் மேல் தளத்தில் நின்று கூடியிருந்த மக்களை நோக்கிக் கருணை பொங்க அவர் உரை நிகழ்த்தியது, இயேசு மலைமீது ஏறி அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றியது போலிருந்தது.

பத்து பேர் கூடினாலேமாநாடுஎன்று தலைப்புச் செய்தி வெளியாகும் அமெரிக்க மண்ணில், அவர் இலட்சக்கணக்கான சாதாரண மக்கள்முன் உரையாற்றியபோது கூட்டத்தில் ஒருவனாய் அமர்ந்து உரை கேட்ட நான், கண்ணீரோடு அவர் கருத்துகளை இதயத்தில் அமர்த்திக்கொண்டேன். ஆசி வழங்குவதும் கைகுலுக்குவதும் மறையுரையாற்றுவதுமே சமயத் தலைவர்களுக்கு வழக்கமாகிப்போன நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்த மக்களைச் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்வதுடன் கடவுள் தந்த செல்வத்தை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு கருணைமிக்கத் தகப்பனாக அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கர்கள் எல்லாரும் ஒரு காலத்தில் அம் மண்ணுக்குப் புலம்பெயர்ந்தவர்களே என்கிற வரலாற்று உண்மையை உரக்கக் கூறினார். முதலாளித்துவமே வேதமான அந்த வல்லாட்சி மண்ணில், எந்தத் தயக்கமும் இன்றி ஏழைகளுக்காக நீதி கேட்டது இந்தச் சோசலிசப் புறா! ஏடுகளை மேற்கோள்காட்டி, சமய உரை நிகழ்த்துகிற சமயத்தலைவர்கள் மத்தியில், வறியோரின் பாடுகளைச் சுட்டிக்காட்டி நீதி கேட்டவர் இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?

திருத்தந்தை பிரான்சிஸ் தனது அடையாளத்தைத் தன் நடை, உடை, பாவனைகளில் அடைத்துக் கொண்டார். முன்பிருந்த திருத்தந்தையர் அணியும் மரபு உடைகள், காலணிகள் இவற்றை எளிமையாக்கிக் கொண்டார். தெருக்களின் அறிஞர்கள் என அவர் அன்பொழுக அழைத்த வீடற்ற ஏழை அகதிகளைக் கொண்டு வந்து வத்திக்கான் வளாகத்தில் குடியமர்த்தினார். புனித வியாழனன்று சடங்காகவே நடந்து முடிகிற பாதம் கழுவுதல் நிகழ்வை எதார்த்தச் செயலாக மாற்றிய இவர் - பெண்கள், கிறித்தவரல்லாதோர், சிறைக்கைதிகள், தெருக்களில் வாழ்க்கை நடத்திய ஏழைகள் ஆகியோரின் காலடிகளைக் கழுவி தன்னைஇயேசுவின் பணியாளன்என நிறுவினார். ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பது என்பனவற்றை இறையாட்சிப் பணியின் முதன்மையாகக் கொண்ட இவர், இந்த யூபிலி ஆண்டில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினர் யாவரையும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் கூட்டத்தில் இணைத்துக்கொண்டார். “ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்என்ற வகையில் தன் கருணைமிகு செயல்களால் இவர் கடவுளையே கடன்காரராக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அவ்வாறே, ஏழைகளுக்காகத் தன்னை ஏழையாக்கிக் கொண்டு, மரபுகளை உடைத்து மானுடத்தை நேசித்த நாசரேத் மரியாவின் மகனைக் குறை கூறிய கூட்டத்தைச் சட்டை செய்யாமல் சரித்திரம் படைத்தது போன்றே திருத்தந்தை பிரான்சிஸின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. ஏழைகளின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டாற்றுவதே இயேசுவின் குருத்துவப் பணி என்று எண்பித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர் போன்றோ, இவர் போன்றோ, எவர் போன்றோ இல்லாத நிகர் இல்லாத் திரு அவையின் தலைவர்!

கிறித்தவ மறைக்குள்ளே இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல இவரது இலக்கு மக்கள்; மறைகளைக் கடந்தும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை எப்போதும் நெஞ்சிலே சுமந்து களமாடியவர். ஆகவே, தகப்பனை இழந்த குழந்தைகளின் குமுறல் போன்ற நிலையே ஏழைப்பங்காளன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.