news-details
சிறப்புக்கட்டுரை
உருவாக்கப்பட்ட இயல்பான கூட்டணி

வரலாற்றிற்கு நாம் செய்யும் பெரிய சேவை என்பது, கடந்த கால நிகழ்வுகளைத் (வரலாற்று உண்மைகளை) திருப்பி எழுதுதல் அல்ல; வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தாழ்மையோடு கற்றுக் கொள்ளலே (‘தி இந்து - ஏப் 15, 2025).

அண்மையில்நம்மை ஆள்வதற்கே உதித்தனஎன்று பிதற்றித் திரியும் கட்சிகளின் தேர்தல் காலக் கூத்துகள், உலக அரசியல் எங்குமே சந்தித்திராத பெரும் கூத்தாகும்.

நாகரிக அரசியலின் சிந்தனையின் விளைவாக உருவான சனநாயகம் எனும் மிகப்பெரிய மானுட மதிப்பீடு மலிவான, தரம்தாழ்ந்த கட்சிகளால் சிதைக்கப்பட்டுவரும் நிலையில், மனச்சாட்சிமிக்க எவருமே கவலைகொள்ளாதிருக்க முடியாது. வள்ளுவர் காட்டும் கயமையின் இலக்கணத்தை வழுவாது காத்து நிற்கும் கூட்டம் மக்களுக்காகப் பேசுவதாகவும், ஊழலை ஒழிக்கப் போவதாகவும் உரத்தக் குரலில் பேசிவருகின்ற காட்சிகள் பொய்மையின் உச்சக்கட்டம்.

அரசியல் செயற்பாடு, அரசியல் தந்திரம் மற்றும் யுக்தி என்பனவெல்லாம் அரசியல் உலகு சந்தித்து வரும் நிதர்சனங்கள்தாம். யுக்திகளும் இலக்கை அடைய கைகொள்ளும் முயற்சிகளும் நூறு விழுக்காடு அறவழியில்தான் நடத்திப்பெற வேண்டும் என்று எவரும் இன்று எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய ஓர் அறமழிந்த சோகத்தை நாம் கண்கூடாகக் காண்கின்ற நிலையில், இப்போக்கும் கடந்துபோகும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கடந்து சென்றிடலாமா? நாளும் ஆளும் பொறுப்பை ஏற்க விருப்பவர்களின் இந்த அநாகரிகச் செயல்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? எதிர்கொள்வதும் எதிர்வினையாற்றுவதும் மானுடருக்கான இயல்பான கடமையென்பது உண்மையானால், குடிமக்கள் எப்படி எதிர்வினை ஆற்றப் போகின்றனர்? குடிமக்களுள் ஒரு பகுதியினரான, மதச்சிறுபான்மையினருள் ஒரு பிரிவினரான கிறித்தவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? அறமிழந்த இவ்வகை அரசியல் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதிருத்தல் மிகப்பெரிய பாவமில்லையா?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் வேளையில், பொறுமை இழந்து எதிர்க்கட்சித் தலைவர் புதுதில்லி விரைகிறார். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சென்னை விரைகிறார். எதிர்க்கட்சித்  தலைவர் வீட்டின் விருந்தோம்பலில் மகிழ்கிறார். ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டணியை அறிவிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார். இவர்களுக்கு இந்த அவசரம் ஏன்? பகை, பிளவு, எதேச்சதிகாரம் எனும் கேடுகளின் விளை நிலமாம் இச்சக்திகள் காட்டும் வேகத்திற்கு எப்படி ஈடு கொடுக்கப்போகிறோம்? எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம்?

இயல்பும் முரணும்

கட்சிகள் வெறும் பெயர்கள் அல்ல; கட்சிகள் சனநாயகத்தின் கொடை. கருத்துச் சுதந்திரம் இதன் உள்ளடக்கம். பன்மையைப் போற்றும் சனநாயகம் கருத்துரிமையை மதிப்பதால், ‘கருத்துஎனும் உள்ளடக்கத்தைக் கொண்ட கட்சிகளை ஏற்கிறது. முரண்பட்ட கட்சிகள் இயங்கலாம் என்ற அடிப்படை உரிமை கட்சிகளுக்கு உண்டு. ஒரே கொள்கைகொண்ட கட்சிகள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சனநாயகம் அல்ல; ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதனால், ஒரே கொள்கையுடைய ஒரே கட்சிதான் இருக்கமுடியும் என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் இந்த நிலைமைக்கு என்ன பெயர்?

இன்றைய நிலை என்ன?

இன்று இந்நாட்டை ஆளும் மதவாதப் பாரதிய சனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் முன்னணியென்பதை அனைவரும் அறிவர். ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கின்ற வலுவான சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் ஒரு கருவியே இன்றைய ஆளுங்கட்சி; இது இந்து தேசத்தை உருவாக்க இந்துத்துவத்தைக் கேடயமாகக்கொண்ட கட்சி. இக்கொள்கைகளை உயிர்க் கொள்கையாகக்கொண்ட இக்கட்சி, சித்தாந்த வலுவுடைய இக்கட்சி, எந்தச் சூழலிலும் தன் கொள்கையைச் சமரசம் செய்வதே இல்லை. சனநாயகம், சமயச்சார்பின்மை, சமத்துவம் என்பன இக்கட்சியின் பொருந்தாக்கொள்கைகள். சனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரான இக்கட்சி, சனநாயகம் தரும் தேர்தலை மிகச் சாதுரியமாகக் கையிலெடுத்து, மதவழி மக்களை ஓர்மைப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றி வருவதோடு, தொடர்ந்து மக்களை மயக்கி ஆட்சியையும் நடத்தி வருகிறது.

வர்ண தர்மத்தின் சாதிபேதத்தை ஒழித்து, சமதர்மத்தைப் பேணக் குரல் கொடுத்த பெரியாரின் திராவிடம் தீர்க்கமான கோட்பாட்டை அல்லது சித்தாந்தத்தைக் கொண்டது.

ஒன்று மனுவாதி பேசுவதுமற்றொன்று சமூக நீதி பேசுவது. இரண்டும் முரண்பட்டவை. இவைகளுள் சமரசம் செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட்டால், அது இயல்பான கூட்டணியா? கள்ளக் கூட்டணியா? இது முரணா? இயல்பா?

இக்கள்ளக் கூட்டணியில் சவாரி செய்த அவப் பெயர் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்குத் தலைமை ஏற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு. திராவிடச் சித்தாந்தத்தை உரக்கப் பேசும் தி.மு.. தேசிய சனநாயக முன்னணியோடுகூட்டணிஎன்ற பொய்மையில் வாழ்ந்த காலமும் உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய சனதாவோடு பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தாமரையை அறிமுகப்படுத்திய பெருமை கலைஞருக்கும் உண்டு.

எதிர்கொள்ளும் பேரபாயம்

இந்திய சனநாயகம் அல்லது இந்திய சனநாயகக் குடியரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளது.

இந்தியா எனும் ஓர் உபகண்டம், இதன் உண்மையான பன்முகப் பண்புகளைக் காத்திட துணை நிற்கும் சனநாயகம் எனும் வலுவான தூண் இன்றைய ஆட்சியாளர்களின் பாசிசப் போக்கினால் தகர்ந்து போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. சனநாயக இந்தியாவா? சனநாயகத்தை அப்புறப்படுத்தும் எதேச்சதிகார அரசா? என்ற கேள்வி எழும் பேரபாயச் சூழலில் நாடு நிற்கிறது.

சனநாயகம் எனும் மாபெரும் மானுட மதிப்பீட்டைத் தாங்கி நிற்கும் இந்திய அரசமைப்புச் சட்டங்கள், படிப்படியாகத் துகில் உரியப்பட்டு வருவதை இந்நாட்டுக் குடிமக்கள் மகாபாரதத் துரியோதனக் கூட்டத்தினரைப் போல் காணாதிருக்கின்றனரா? அல்லது கண்டும் செயல்படும் ஆற்றலின்றி இருக்கின்றனரா?

என்ன நடக்கிறது? நாட்டின் ஒருமை, ஒற்றுமை, இறையாண்மை என்பனபற்றியெல்லாம் எந்தத் தெளிவும் பெற இயலா மக்கள் ஒருபக்கம்; மறுபக்கம் பொய்யான சொல்லாடல்களை நம்பி ஏமாந்து போகும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி; ஏமாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலை வேறு. அண்மையில் தமிழ்நாட்டு கட்சிகள் முன்னெடுத்திருக்கும் கூட்டணி முடிவுகள் மிகப்பெரிய ஆபத்தைத் தருவன. திராவிடத் தமிழ்நாட்டில் பா...வோடு கூட்டணியென்பதுமுரணானகூட்டணியாகத்தான் இருக்க முடியுமென்பதே உண்மையாயிருக்க, இக்கூட்டணியைஇயல்பானகூட்டணியென்று .தி.மு..வும் பாரதிய சனதாவும் அறிவிக்கின்றன என்பதுதான் இங்கு வேடிக்கை.

இயல்பான கூட்டணிஎன்ற சொல்லாடல் தமிழ்நாட்டுத் தேர்தல் கூட்டணி வரலாற்றுக்குப் புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா அம்மையார்மோடியா? லேடியா?’ என்ற தேர்தல் முழக்கமாக ஓங்கி ஒலித்தாலும், அம்மையார் பாரதிய சனதாவின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டவர் அல்லர். அம்மையார் தீவிர இந்து மத பக்தர் என்பதால் நாம் இம்முடிவுக்கு வரவில்லை. இராமசென்ம பூமியில் இராமருக்கான கோவில் விவகாரத்தில் இவர் காட்டிய சார்புநிலை, கோவில் கட்ட கரசேவகர் மூலம் செங்கற்களை அனுப்பி வைத்த முறை, இராமருக்கான கோவிலைக் கட்டி எழுப்புவதற்கான முடிவை நியாயப்படுத்திய முறை என்பவையெல்லாம் இவரின் மதச்சார்பை மட்டுமல்ல, அரசியல் சார்பையும் வெளிப்படையாகவே காட்டின.

அவர் ஆட்சியின்போது தலைநகர் டில்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டமொன்றில், “சிறுபான்மையினருக்கு அளிக்கப்பெறும் உரிமைகள் பெரும்பான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடாதுஎன்ற இவரின் கருத்து இந்திய மதப் பெரும்பான்மை மதவாதிகளின் போக்கைப் பிரதிபலிக்கவில்லையா? தமிழ்நாட்டில் இவர் அறிமுகப்படுத்திய மதமாற்றுத் தடைச்சட்டம் இவரின் முகவரியை மிகத் தெளிவாகவே காட்டியது. சுருங்கக் கூறினால், அம்மையார் பா...வோடு தேர்தல் கூட்டணி கொள்ளாவிட்டாலும், பா...வின் உள்ளார்ந்த மதவாதத்திற்கு முற்றிலும் முரண்பட்டவர் அல்லர் என்பதே உண்மை.

தான் சார்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூர்வாசிரமக் கோட்பாடுகளுக்கும், இவருக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. இவருக்கு முந்தைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நீண்டகாலத் திராவிட இயக்கத் தொடர்பின் சாயல் இவர் ஆட்சியின் எப்பகுதியிலும் வெளிப்பட்டதாகவே தெரியவில்லை. திராவிடத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணாக, பொருளாதார அடிப்படையிலான கொள்கையைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்து, மக்கள் கொடுத்த தேர்தல் தோல்வியால் பின்வாங்கியவர் எம்.ஜி. இராமச்சந்திரன். .தி.மு.. முன்னோடிகளின் கொள்கை பின்னணி இப்படியிருக்க, இன்றைய எடப்பாடியார் எப்படி முரணான முடிவுகளை எடுக்கமுடியும்? .தி.மு..வின் இன்றைய பாரதிய சனதாவுடனான கூட்டணியில் புதுமை எதுவுமில்லை. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றுமே எங்குமே மறைத்ததில்லை. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுக்கும்சிந்தூர்போர் நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியப் பெரும்பான்மைவாதச் சாயலைப் பார்க்க முடியும்.

நாம் எங்கே இருக்கிறோம்?

மதவாதிகள், அன்றைய இந்துத்துவப் பெரும்பான்மைவாதிகள்  எதையெல்லாம் கொள்கையாக வகுத்தனரோ, அவை எல்லாவற்றையும் இன்று நிறைவேற்றி வருவதைப் பார்க்கிறோம். அரசின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் இந்திய சனநாயகத்திற்கும் அரசமைப்புக்கும் எதிரானவை என்றாலும், ஆட்சி அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைத்தான் பார்க்கிறோம்.

.தி.மு.., பாரதிய சனதாவின் எந்தக் கொள்கை முடிவுகளையும் எதிர்த்ததில்லைஎனவேதான், இடையில் முறிந்தது போன்று காட்டப்பெற்ற உறவு, மீண்டும் துளிர்த்தமைக்குக் காரணம் இதுவே. இவ்விரு கட்சிகளும் உறவுகொண்டதை விமர்சித்த தமிழ்நாடு முதல்வருக்கு எடப்பாடியார் அளித்த பதிலை நாம் நினைவுகொள்ளல் அவசியம். “நாங்கள் எவருடனும் கூட்டணி வைக்கமுடியும். ஏன் முதல்வர் பதறுகிறார்?”

எடப்பாடியார் பதில் மிக ஆழமானது, .தி.மு..வின் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு இப்பதில் தரும் செய்தி என்ன? .தி.மு..வின் இந்நிலைப்பாடு தமிழ்ச் சமூகத்திற்குத் தரும் செய்தி என்ன?

கட்சித் தலைவர்களின் போக்கு சுயநலப் போக்கில் அமைந்திருக்கலாம். தி.மு.. அரசை வீழ்த்த நினைக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எடுக்கும் நிலைப்பாடு அல்ல; பாரதிய சனதா என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முன்னணியின் கருத்தியல், தமிழ்நாடெங்கும் பரவிக் கிடக்கும் கட்சித் தொண்டர்களை ஈர்க்கும் கருத்தாக மாறுகையில் பின்விளைவை, அபாயத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?