மனித நாகரிக வளர்ச்சி என்பது இடப்பெயர்ச்சியில் ஆரம்பமாகிறது. கண்டங்கள், தேசங்கள் என எல்லைக் கோடுகள் வகுக்கப்பட்டபோது புலம்பெயர்வு நடக்கிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் தலைசாய்க்க இடமின்றிக் காற்றுவெளியில், எல்லை இல்லாக் கடற்பரப்புகளில், பாலைவெளிகளில் திசை அறியாமல் அகதிகளாய் அலைகிறார்கள். நாடற்ற, வீடற்ற ‘அகதி’ என்ற அம்மக்கள் வானமே வாழும் கூரையாக, தெருக்களில் வெயில், மழை எனப் பரிதவிப்பது நாகரிக உலகச் சமூகத்திற்கான பெரும் சவால்.
ஒரு
தேசிய இனமாக வாழும் நம்மைப் போன்ற குடிமைச் சமூக மக்களுக்கு, அகதிகளின் அவலம் அறிய வாய்ப்பு இல்லை. ‘அகதி எனப்படுவோர் அரசியல், மதம், இனம், நாட்டுரிமை காரணங்களால் மனித உரிமை மீறப்படுவதாலும், போர், வன்முறை காரணமாகச் சொந்த நாட்டில் வாழ வழியின்றி, நாட்டை விட்டு வெளியேறுவதாலும், புதிய புகலிடம் தேடுபவர்கள்’ என்ற
வரையறையில் அடங்குவர். இவர்களுக்கு அடுத்த வேளை உணவு, இருப்பிடம், செல்லும் தூரம், சென்று அடைகிற இடம் என எதுவுமில்லை. இவர்கள்
திசை தெரியாப் பறவைகள். இது காற்றுவெளிப் பயணம். ஒரு தூர தேசத்து நிலவிற்கான, துயர தேசத்துப் பயணம்.
உலகெங்கும் 120 மில்லியன் மக்கள் அகதிகளாக அலைகிறார்கள். இவர்களில் 36 சதவிகித மக்களை ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் அளித்துக் காக்கிறது.
1967-ஆம் ஆண்டு
சர்வதேசச் சமூகம் அகதிகளின் நிலை தொடர்பான, அகதிகளின் மறுவாழ்வை மையப்படுத்திய ஜெனிவா ஒப்பந்தத்தை உருவாக்கியது. மண்ணுரிமை தொடர்பான தேசியங்களின் புதுக் கலாச்சாரத்தால் அகதிகளின் வாழ்வுரிமை இன்றைய நாள்களில் கேள்விக்குறியாகி உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அகதிகளை வரவேற்ற காலம் மாறி வருகிறது. தற்போது பல நாடுகள் அகதிகளுக்காகவே
குடியேற்ற விதிகளைக் கெடுபிடிகளாக மாற்றிவிட்டன.
அனைவருக்கும்
நினைவிலிருக்கலாம்...
2010-ஆம் ஆண்டு 40 ஈழத்தமிழர்கள் உள்பட 92 அகதிகள் தஞ்சம் தேடிப் பெரிய படகில் சென்றபோது, படகில் தண்ணீர் புகுந்து, தத்தளித்துக் கொண்டு இருந்தபோது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள கிறிஸ்துமஸ் தீவு அருகே மீட்கப்பட்டார்கள். இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் இறப்போரின் மொத்த எண்ணிக்கை தரவுகள் எவரிடமும் இல்லை.
2015-ஆம் ஆண்டு
அகதிகள் நெருக்கடியின் உச்சத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தை ‘எ கிரேக்க டிராஜடி’ எனும்
புத்தகம் கண்ணீரால் விவரிக்கிறது. இந்த வாரத் தலைப்புச் செய்திகள் இப்படியாக இருக்கிறது... ‘அகதிகள் கிரீஸ் கடலில் விழுந்து விபத்து’,
‘பிரிட்டன் நோக்கிச் சென்ற 115 அகதிகள் மீட்பு’,
‘அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஆறு இத்தாலியர்கள் பலி’,
‘உலகம் முழுவதும் உயிரைப் பணயம் வைத்த அகதிகளின் பயணம் தொடர்கிறது.’ இது குறித்துப் பெரும் கவலை கொள்கிற உலகளாவிய அமைப்பான
யூ.என்.எச்.சி.ஆர். எல்லாத்
தேசங்களுக்கும் ‘கடவுளின் துன்பம்’ என்ற பெயரில் கோரிக்கை வைக்கிறது. ‘அகதிகளுக்கு ஆதரவு தாருங்கள்’
எனச் சர்வதேசச் சமூகத்திற்கு விண்ணப்பிக்கிறது.
நம்
நாட்டில் எல்லையோர மாநிலங்களில் அகதிகள் குறித்த பிரச்சினைகள் உள்ளன. வங்க தேசத்து அகதிகள் குறித்தே குடியுரிமைச் சட்டம் என்ற வாதமும் உண்டு. புதிய குடியுரிமைச் சட்டம் அகதிகளை நிரந்தரக் குற்றவாளிகள் என அறிவிக்கிறது. அவ்விதிகளைப்
பயன்படுத்தி அகதிகளை மனிதாபிமானம் இல்லாமல், இந்தியச் சிறையில் அடைக்க வழி கொணரப்பட்டது. தமிழ்நாட்டில் நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழ அகதிகள், அவர்களின்
மறுவாழ்வு குறித்த முன்னெடுப்புகள், எந்த நகர்வுகளும் இன்றி முடங்கியே கிடக்கின்றன. ஈழ
அகதிகள் மூன்று தலைமுறைகளைப்
பார்த்து விட்டார்கள்.
1964-இல் இந்திரா-சிறிமாவோ ஒப்பந்தப்படி இந்தியா, திரும்பிய தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காவது குடியுரிமை தாருங்கள் என்பதும் தரப்படவில்லை. அவர்களின் எண்ணிக்கை 5,25,000 என்பது குறிப்பிடத்தக்கது.
1983-ஆம் ஆண்டு
ஈழ விடுதலைப் போர் உச்சக்கட்டம் பெற்ற காலம். மண்டபம் பகுதியில் ஈழத்து அகதிகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி, இராமநாதபுரம் போன்ற அகதிகளின் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள். இயேசு சபையின் கிழக்காசிய நாடுகளுக்கான அகதிகள் மறுவாழ்வு மையம் இரவு-பகல் பாராமல் ஈழ அகதிகளை மீட்டு,
மண்டபம் முகாமில் பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
அன்றிலிருந்து
இன்றுவரை இனவாத சிங்கள அரசின் கொடுங்கோன்மைக்குத் தப்பி, தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தோர் எண்ணிக்ககை மூன்று இலட்சம் ஈழத் தமிழர்கள். அவர்கள் 29 மாவட்டங்களில் 108 முகாம்களில் தங்கி உள்ளார்கள். அவர்களில் இன்று 58,492 பேர்
அகதிகள் முகாமில் உள்ளார்கள். 33,639 பேர் முகாமிற்கு வெளியேயும் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் போதிய இருப்பிட வசதி இல்லை. தமிழ்நாடு புலனாய்வுத் துறையாலும், காவல்துறையாலும் அகதிகள் முகாம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பதான நிலையே எனக்
குற்றம் கூறப்படுகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுவெளிகளிலும் இவர்களைப் புதிய
குடியுரிமைச் சட்டத்தில் சேர்த்து, இந்தியக் குடிமக்களாக அறிவிக்க வேண்டும்
எனக் குரல்கள் தமிழ்நாட்டில் எல்லா
அரசியல் கட்சிகளிடமும் உள்ளது.
ஒன்றிய
அரசு தமிழர்களைப் புறக்கணிப்பது போலவே, ஈழத் தமிழர்களையும் புறக்கணிக்கிறது. நாம் அகதிகள் குறித்துப் பேசும்போது, சொந்த நாட்டு அகதிகளையும் பேச வேண்டும். இவர்களுக்குக் குடியுரிமை மட்டுமே அகதிகளை விட அதிக உரிமையாக இருக்கிறது. இரவு நேரங்களில் வீடற்ற, தலை சாய்க்க இடமில்லா மனநலன் பாதிக்கப்பட்டோர், அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் உறக்கத்திற்கான தவிப்பு கவலை தருவது. அவர்களை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூட்டப்பட்ட கடைகள், பொது இடங்கள் என்ற போர்வைகள் மாற்றாய் அமைந்து இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.
அரசு
மற்றும் தன்னார்வ அமைப்புகள் வீடற்றவர்களுக்காக இரவு தங்குமிடம் அமைத்து, அவர்களைப் பேணுவதைப் பெரும் நகரங்களில் காண முடிகிறது. சென்னையில் இராயப்பேட்டை, டி.டி.கே.
சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர்
காப்பகம் உள்ளது. புதுடெல்லியில் சேசு சபை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இருப்பிடமற்றவர்களின் தங்குமிடத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் கண்டது நினைவிலாடுகிறது.
வேளைநகர் திருத்தலத்திலும் இதுபோன்ற மையம் செயல்படுவது பாராட்டத்தக்கதே.
அன்பு,
ஆறுதல், அரவணைப்புத் தேடும் துயர தேச அகதிகளுக்கும், சொந்த நாட்டு அகதிகளுக்கும் ஆதரவு அளிப்போம், அன்பு காட்டுவோம், அரவணைப்போம். நம் சகோதர அன்பில் மனிதாபிமானம்
பூக்கட்டும்; மானுடம் செழிக்கட்டும்!