புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் மே மாதம் 9-ஆம் தேதியன்று கர்தினால்களுடன் நிறைவேற்றிய முதல் திருப்பலியின் மறையுரையிலும், 10-ஆம் தேதியன்று கர்தினால்களுடன் பகிந்துகொண்ட தன் முதல் வணக்கவுரையிலும் பகிர்ந்துகொண்ட முக்கியச் சிந்தனைகள் இதோ:
தன்
முதல் ‘ஊருக்கும் உலகுக்கும்’ (Urbi et orbi) என்ற
ஆசியுரையைத் தயார் செய்ய நம் புதிய திருத்தந்தைக்கு அதிக நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தன்னைத் தேர்ந்தெடுத்தக் கர்தினால்களுடன் அவர் பகிர்ந்த முதல் மறையுரையிலும் வணக்கவுரையிலும் இன்றைய உலகில் கத்தோலிக்கத் திரு அவையின் பங்கு மற்றும் பணி என்ன? என்பதையும், தான் திருத்தந்தையாகப் பணிபுரியப் போகும் ஆண்டுகளில் தன் பணியின் தொலைநோக்குப் பார்வை என்ன? என்பதையும் மிகக் கவனத்துடன் வரையறுத்திருப்பதற்குப் பின்வரும் அவரின் வார்த்தைகளே சான்றாகும்.
கர்தினால்களுடன்
பகிர்ந்த
முதல்
மறையுரையிலிருந்து
(மே
9, 2025)
“ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார்’ என்ற இன்றைய திருப்பாடல் வரிகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஆண்டவர் அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார். என் சகோதர
கர்தினால்களே, திருவிருந்து கொண்டாட்டத்திற்காக இன்று நாம் கூடியுள்ள இவ்வேளையில், ஆண்டவர் உங்களுக்குச் செய்துள்ள அரும்பெரும் செயல்களைப் பேதுருவின் பணி வழியாக அவர் நம் அனைவர் மீதும் இடைவிடாமல் பொழிந்து வரும் ஆசிர்வாதங்களை அடையாளம் கண்டுகொள்ள உங்களை அழைக்கிறேன்.
திருத்தந்தை
என்னும் சிலுவையைச் சுமக்கவும், பேதுருவின் அப்பணியினால் ஆசிர்வதிக்கப்படவும் நீங்கள் என்னை அழைத்திருக்கிறீர்கள். திரு அவையாகவும், இயேசுவின் தோழமைக் குழுமமாகவும், நற்செய்தியைப் பறைசாற்றும் நம்பிக்கையாளர்களாகவும் நம் கத்தோலிக்கப் பயணத்தைத் தொடரும் இவ்வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் என் உடன் நடப்பீர்கள் எனவும், உங்கள் ஒவ்வொருவர் மீதும் நான் நம்பிக்கை வைத்துச் செயல்படலாம் எனவும் நான் அறிவேன்.
ஒரு
சிறப்பான விதத்தில், உங்களது தேர்ந்தெடுப்பின் மூலம் திருத்தூதர்களின் தலைவராம் பேதுருவின் பணியை நான் தொடர கடவுள் என்னை அழைத்திருக்கிறார். மேலும், கிறித்தவ நம்பிக்கை எனும் விலைமதிப்பற்ற கொடையைக் கடவுள் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அக்கடவுளின் உதவியால் நான் அக்கொடையைக் கிறிஸ்துவின் மறையுடலாம் திரு அவை முழுவதற்கும் வழங்கும் உண்மையுள்ள பணியாளன் ஆவேனாக. கடவுளின் இத்திட்டத்தால் கத்தோலிக்கத் திரு அவை மலைமேல் இருக்கும் நகர் போலவும், வரலாற்றுத் தண்ணீரில் நீந்திச் செல்லும் மீட்பின் படகாகவும், இவ்வுலகின் இருள் சூழ்ந்த இரவுகளை ஒளிர்விக்கும் சுடராகவும் இருக்கும்படி விரும்புகிறார். திரு அவைக்கான கடவுளின் இத்திட்டம் நிறைவேறுவது திரு அவையின் உயரிய நிர்வாகக் கட்டமைப்புகளாலோ, உன்னதமிக்க கட்டடங்களாலோ நிறைவேறுவது அதிக சாத்தியமில்லை; மாறாக, திரு அவைக்கான கடவுளின் இத்திட்டம் நிறைவேறுவது திரு அவை அங்கத்தினரது புனிதமிக்க வாழ்வால் மட்டுமே.
மத்தேயு
16:13-15-இல் நாம் காண்பதுபோல் இன்றும் பல்வேறு சூழல்களில் இயேசு கிறிஸ்து ஒரு மனிதராக மட்டுமே பலரால் காணப்படுகிறார். சில நேரங்களில் கிறித்தவர்கள்கூட இயேசுவை ஒரு சிறந்த தலைவராகவும், புதுமைகள் செய்யும் ஓர் உயர்ந்த மனிதராகவும் மட்டுமே காண்கின்றனர். இவர்களது வாழ்வில் கிறித்தவ நம்பிக்கை ஒரு பயன்பாடுள்ள ஓர் ஆன்மிகமாக மட்டுமே திகழ்கிறது. இத்தகைய உலகுதான் திரு அவைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் பலமுறை கூறியதுபோல், இத்தகைய உலகில்தான் கிறிஸ்துவின்மீது நமக்குள்ள மகிழ்ச்சியான நம்பிக்கைக்குச் சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளோம்.
கிறிஸ்துவுக்குச்
சான்று பகர்வது, முதன்முதலாக ஆண்டவர்மீது நாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவில், நம் அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஏற்றுக்கொள்ளும் தொடர் மனமாற்றம் இவற்றில் வெளிப்பட வேண்டும். உரோமை ஆயராகவும் பேதுருவின் பதிலாளியாகவும் என் பணியைத் தொடங்கும் எனக்கே இவ்வார்த்தைகளை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிறகுதான் திரு அவையாக நாம் நம் ஆண்டவர் மீதுள்ள நமது குழும நம்பிக்கையை அனுபவித்து, அனைவருக்கும் நற்செய்தியைப் பறைசாற்ற இயலும்.”