news-details
சிறப்புக்கட்டுரை
வத்திக்கானிலிருந்து... புதிய திருத்தந்தை அறிவிக்கப்பட்ட நேரம்!

திருத்தந்தை போப் பிரான்சிஸ் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாக அறிவித்தபோது, தன்னார்வலராகப் பணியாற்ற விண்ணப்பித்து, நீண்ட பரிசீலனைக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து, நான் தன்னார்வலராகப் பணியாற்ற அழைப்பு வந்தது.

மே மாதம் 2-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை பணியாற்ற ஏற்றுக் கொள்ளப்பட்டதும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்பொழுதில் வத்திக்கானில் இருப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. மே 3, 4, 5 ஆகிய நாள்களில் புனித பேதுரு பெருங்கோவிலின் உள்ளே திருப்பயணிகளுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டேன். பல நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழியில் தகவல்கள் தந்து, அவர்களின் திருப்பயண அனுபவம் சிறப்பாக அமைய உதவும் பணி இது. அதுவே பெரும் அனுபவம்!

மே 6, 7 ஆகிய நாள்களில் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகளை நெறிப்படுத்தி ஆலயத்திற்குள் அனுப்பும் பணி. மே 8-ஆம் நாள் மதிய வேளையில் தன்னார்வப் பணியாளர்கள் இத்தாலியக் காவல்துறையோடு இணைந்து பெரும் எண்ணிக்கையில் வரக்கூடிய மக்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டோம்.

இந்நிகழ்வில் எனக்குப் புனித பேதுரு சதுக்கத்தின் முன்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. மே 7-ஆம் நாள் இரவு 9 மணி அளவிலும், 8-ஆம் நாள் நண்பகல் வேளையிலும் வெளிவந்த கரும்புகை மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், மக்கள் பெரும் நம்பிக்கையோடு மாலை மூன்று மணியிலிருந்தே புனித பேதுரு சதுக்கம் நோக்கி வர ஆரம்பித்தார்கள். காவல்துறையோடு தன்னார்வப் பணியாளர்களும் இலட்சக்கணக்கான மக்களை வரிசைப்படுத்திப் புனித பேதுரு சதுக்கத்திற்குள் அனுப்பினோம். மாலை ஐந்து மணிக்குப் புனித பேதுரு சதுக்கம் ஏறத்தாழ நிரம்பி வழிய ஆரம்பித்தது. கூடிய மக்களின் பார்வை முழுக்க புகைக் கூண்டை நோக்கியே இருந்தது. அச்சமயத்தில் சீகல் பறவைகள் புகைக் கூண்டைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தன.

இத்தாலி நேரம் சரியாக 6 மணி 8 நிமிடத்தில் புகைக்கூண்டிலிருந்து வெண்புகை வர ஆரம்பித்தபொழுதில், புனித பேதுரு பெருங்கோவில் மணி ஒலிக்க ஆரம்பித்தது. மக்கள் அனைவரும் கைத் தட்டலோடுViva Papa’, ‘Viva Papaஎன்று ஒருமித்தக் குரலோடு புதிய திருத்தந்தையை வாழ்த்த ஆரம்பித்தனர். மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம்.

பல நாட்டுக் கொடிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்து வெளிப்பட்டு, திருத்தந்தை உலகளாவியக் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் என்பதை வெளிக்காட்டின. ‘திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்என்ற செய்தி அறிந்ததும் உரோமை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். இதை முன்கூட்டியே அறிந்திருந்தத் தன்னார்வப் பணிக் குழுக்களின் தலைவர்கள் தகுந்த முன்தயாரிப்போடு இருந்தனர். இருந்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் புனித பேதுரு பெருங்கோவில் தொடக்கம் முதல் முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திபேர் நதிக்கரை வரையிலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. அடுத்த முக்கால் மணி நேரம் மக்களின் ஆரவாரமும் மகிழ்ச்சிக் குரல்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

பிறகு இன்னிசை வாத்தியக்குழு முன்வரswiss guardமுப்படையினர் அணிவகுத்து வர, ‘புதிய போப் யாராயிருப்பார்?’ என்ற எதிர்பார்ப்பும் கூட ஆரம்பித்தது. அது கர்தினால் தோமினிக் மம்பார்தி (Cardinal Dominique Mamberti) பெயரை அறிவிக்கும் வரை நீடித்தது.

திருத்தந்தை தோன்றும் மாடத்தில் பணியாளர்கள் வத்திக்கான் கொடியைக் கொண்டு அலங்கரித்தனர். பிறகு கர்தினால் தோமினிக் மம்பார்தி மாடத்திற்கு வந்து பாரம்பரியச் சொற்களானHebemus Papam (‘நமக்குத் திருத்தந்தை கிடைத்துள்ளார்) என்ற அறிவிப்போடு அமெரிக்க நாட்டைச் சார்ந்த, தற்போது பெரு நாட்டில் பணியாற்றும் இராபர்ட் பிரான்சிஸ் கர்தினால் பிரிவோஸ்ட் 14-ஆம் சிங்கராயர் (leo XIV) என்ற பெயருடன் ஏந்தி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். அப்போது மற்ற கர்தினால்கள் அதே தளத்தின் பிற மாடங்களில் கூடிவந்தனர்.

சில நிமிடங்களில் சிலுவையோடு ஒருவர் முன்வர திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் திருத்தந்தைக்கான சிறப்பு உடையுடன் மக்கள்முன் தோன்றி அன்போடு கையசைத்துத் தன்னை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட மக்களின் ஒருமித்த வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். “உங்களுக்குச் சமாதானம் உண்டாகுகஎன்று ஆரம்பித்துத் தனது முதல் உரையையும் ஆசிரையும் மக்களுக்கு வழங்கினார். தனது உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றியும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.

தனது உரையை முடித்த பிறகுViva Papaஎன்ற மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை மிகுந்த மகிழ்வுடன் கையசைத்து ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, மக்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தை 14-ஆம் சிங்கராயர் உலகில் அன்பும் மகிழ்ச்சியும் ஒப்புரவும் நிலைபெற உழைப்பார் என்ற எண்ணம் நம்மிடம் நிறைந்திருந்தது. வெண்புகையைப் பார்த்ததிலிருந்து வந்த பூரிப்பு, புல்லரிப்பு திருத்தந்தை விடைபெற்றுச் செல்லும் வரை நீடித்தது.